Monday, June 14, 2010

கு.க.அறுவை சிகிச்சைக்கு எதிராக மாதர் சங்கம்!

கடந்த வாரத்தில் பத்திரிகையில் வந்த செய்தியின் சுருக்கம். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு நிறைமாத கர்ப்பிணிப்பெண் சென்றிருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இது இரண்டாவது பிரசவம், அறுவை சிகிச்சையின் மூலம்தான் பிரசவம் நடக்கும் என்கிற நிலையில்
அம் மருத்துவனையின் மருத்துவர், சிசேரியன் அறுவை சிகிச்சையோடு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் செய்ய முடிவு செய்து அதற்கு அப்பெண்ணின் கணவரின் ஒப்புதலைப் பெற முயர்ற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் "வயிற்றுக்குள் உள்ளது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை, மேலும் மனைவியின் உடல்நிலை சரியில்லை, பிறகு ஆறு மாதம் கழித்து அறுவை சிகிச்சை செய்துகொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் "குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் சேர்த்து செய்துகொண்டால், நான் அறுவை சிகிச்சை செய்வேன் இல்லையெனில், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். உடனே உறவினர் மூலம் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற மாதர் சங்கத்தினர் மருத்துவருக்கு எதிராக போராடி, வேறொரு மருத்துவர் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் அந்த மருத்துவரின் செயல் ஏதோ மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றும். ஆனால் அந்த மருத்துவர் அந்த பெண்மணியின் உடல்நிலை மற்றும் சமூகப் பின்னணியைக் கருத்தில் கொண்டுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்று சற்று கடுமையாகத் தெரிவித்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன். இந்த செய்தியின் மூலம் நாம் அறிவது யாதெனில் இன்றைக்கும் சாதாரண மக்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லையென்பதே!

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவதும் அறுவைசிகிச்சை மூலம்தான் குழந்தையை வெளியே எடுக்கமுடியும் என்பதால் அத்துடன் சேர்த்து கு.க. அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர் முடிவு செய்திருக்கிறார். இதில் மனிதாபிமானத்துடன் கூடவே சமூக அக்கறையும் அந்த மருத்துவருக்கு இருப்பது தெரிகிறது. சிசேரியன் அறுவை சிகிச்சைமட்டும் செய்தால் நிச்சயம் மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு அப்பெண்மணி கர்ப்பமாகும் வாய்ப்புகளே அதிகம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று கணவர் குறிப்பிடுகிறார். இந்தநிலையில் மீண்டும் தேவையற்றக் கர்ப்பம் என்பது அப்பெண்ணின் உயிருக்கே பிரச்சினையை உண்டுபண்ணும்.

இந்தப் பிரச்சினை மதார் சங்கத்திற்கு செல்கிறது, அவர்கள் என்ன செய்யவேண்டும் "உனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இப்பொழுது நீ கு.க. அறுவைசிகிச்சை செய்து கொள்வதே சிறந்தது. பெண் குழந்தை என்று பிரித்துப் பார்க்காதே, இன்றைக்கு பெண்கள் இல்லாத துறைகளே இல்லை" என்பன போன்ற அறிவுரை சொல்லி கு.க. அருவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்திருந்தால், நாம் அந்த மாதர் சங்கத்தைப் பாராட்டலாம். ஆனால் அவர்கள், அந்த மருத்துவருக்கு எதிராக கோஷம் போட்டு, இனி மற்ற மருத்துவர்களும் 'நமக்கென்ன' என்ற எண்ணத்துடன் செயல்பட வைக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பது தெரியாததால்தான் கு.க.அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதே அப்பெண்ணின் கணவரின் முடிவு. இதற்கு மாதர் சங்கம் ஆதரவு! என்ன விநோதம் பாருங்கள். பெண்களுக்கு பெண்களே எதிரி.

பெரிய பதிவாக போவதால் குடும்பக்கட்டுப்பாடு குறித்த என்னுடைய எண்ணங்களை வேறு ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்.

.