Wednesday, February 29, 2012

ஒரு கோடி - ஒரு பார்வை!



விஜய் டிவியில் கடந்த மூன்று நாட்களாக 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!' நிகழ்ச்சி பார்த்து வருகிறேன். சிலர் 'குரோர்பதி' நிகழ்ச்சியோடு ஒப்பீடு செய்கிறார்கள். நான் 'குரோர்பதி' பார்க்காததால் எனக்கு அந்தப் பிரச்னையில்லை.  இந்த நிகழ்ச்சி குறித்து என் மனதில் தோன்றுவதை  பகிர்ந்துக் கொள்கிறேன். 

முதலில் சூர்யா என்பதால்,  எப்படி இருக்கும் நிகழ்ச்சி? என்று நம்மையறியாமல் டிவி முன் உட்கார வைத்தது உண்மை!  நேரம் கிடைத்தால்  தொடர்ந்து பார்க்கலாம் என்றுள்ளேன்.

நிகழ்ச்சியில் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பங்கேற்ற ஒரு பெண்மணி, தனது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியாதாகிவிட்டது என்று சொல்லி அழுதார். அதற்கு, சூர்யா "அப்துல் கலாம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில்தான் படித்தார்கள்" என்று சொன்னதுடன், அரசுப்பள்ளியில் மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிவித்தது பாராட்ட வேண்டிய ஒன்று. இது போன்று விழிப்புணர்வு செய்திகள் சொல்வதை சூர்யா தொடர்வார் என்று நம்பலாம்.

சில கேள்விகள் வேடிக்கையாக உள்ளது. இதில், நடுத்தர மற்றும் சாமான்ய மக்களும், பார்க்க மற்றும் பங்கேற்க வேண்டும் என்பதில் அக்கறைக் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது. முதல் நாள், விழுப்புரத்திலிருந்து வந்து கலந்துக் கொண்டவர் 'தானே' புயல் பெயருக்கு லைப்லைன் வரை சென்றதும். மறு நாள், ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்து வருபவர் 2011  ஆண்டில் சாகித்திய அகாடமி விருதுப் பெற்றவரின் பெயர் தெரியாமல் வெளியேறியதும் நெருடலான விஷயங்கள்.

விஜய் டிவியும், விளம்பரமும் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதை சூர்யா சொல்லும் பொழுது தான் 'கொஞ்சம்' கஷ்டமாக உள்ளது.

சீரியலில் வரும் கற்பனை கதாப்பாத்திரங்களுக்காக  கண்ணீர்விட்டு அழும் நம் வீட்டுப் பெண்கள், அதிலிருந்து கொஞ்சம் விடுதலை அடைவார்கள் என்று நம்பலாம்.


படம் உதவி: கூகிள்

Thursday, February 9, 2012

கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி!


நண்பர் வீட்டுத் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றிருந்தேன்.  அங்கு மிக நல்ல மெல்லிசைக் கச்சேரி நடந்துக் கொண்டிருந்தது. பெண்ணும் மாப்பிளையும் மேடைக்கு வரும் வரை எல்லோரும் பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். மணமக்கள் மேடைக்கு வந்தவுடன், அவர்களை  வாழ்த்துவதற்காக எல்லோரும் எழும்பிச் சென்று வரிசையில் நின்றுக் கொண்டனர்.  என்னுடன் சிலர் மட்டும் பாடலைக் கேட்டுக் கொண்டு அங்கு இருந்தனர். கச்சேரி தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது.   'யாருமே கேட்கலன்னாலும், இவங்க கவலைப்படாம பாடுறாங்க. இது இவர்களுக்கு பழகிப் போயிருக்கும் போல!' என்று நினைத்துக் கொண்டேன்,

 
 
                                                         என்னை  போட்டோவில் தேடாதீர்கள்,  நான்தான்  எடுத்தேன்.

அந்தப் பாடல் முடிந்தவுடன் அருகிலிருந்த இரண்டு பேர் கைத் தட்டியிருப்பார்கள் போல. அதை, நானும் கவனிக்கவில்லை. அந்த கச்சேரியை நடத்துபவர், "கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி, இங்கு வந்திருக்கும்  எல்லோரும் திறமையானவர்கள்  லைவா வாசிக்கனும்னு மெலோடியாப் பாடிகிட்டிருக்கிறோம்" என்றார். அவருடைய நினைப்பு, மெலோடி பாடுவதால் மக்கள் தொடர்ந்து அமர்ந்திருக்கவில்லை என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் கிராமத்தில் திருமணம் என்றால், முதல் நாளிலிருந்து  கூம்பு  ஸ்பீக்கர் -ஐ உயரமான மரத்தில் கட்டி  சினிமா  பாடல்கள் போடுவார்கள். அதுவும், திருமண வீட்டார் விரும்பும் பாடலைப் போடவில்லை என்றால், பணம் கொடுக்கும் பொழுது தகராறு நிச்சயம் உண்டு. அதனால், முன்பே என்ன மாதிரி பாடல்கள் கொண்டு வரவேண்டும் என்று ஒப்பதந்தம் போடப்படும். ஆனால், இன்று இம்மாதிரியான கச்சேரிகளை கேட்கும் அளவுக்கு மக்களுக்கு பொறுமையில்லை என்பதே உண்மை.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி ஒரு சம்பிரதாயமாகிவிட்டது.

பணத்திற்காக பாடினாலும், அவர்களும் பாராட்டை எதிர்பார்ப்பார்கள் தானே?  நாம்  செல்லும் திருமண நிகழ்ச்சிகளுக்கு நேரம்  கிடைத்தால், கொஞ்ச நேரமாவது கச்சேரி கேட்டு, கைத்தட்டி அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்திவிட்டு  வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நீங்க?

.

Monday, February 6, 2012

ரத்த அழுத்தம்(BP) அளப்பது பற்றிய புதிய ஆய்வு முடிவு!





நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிவோம். மருத்துவரிடம் சென்றால் நமது கையில்  அளவெடுப்பார்கள். 120/80 mm Hg  என்பது இயல்பான  ரத்த அழுத்தம் என்பதையும் அறிவோம்.

இப்பொழுது, லான்செட்(Lancet என்பது 1823 -ல் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஒரு மருத்துவப் பத்திரிகை) ஓர்  ஆய்வு முடிவை  வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு கைகளிலும் எடுக்கப்படும் சிஸ்டாலிக் அளவில் (மேல் பகுதியில் குறிபிடப்படும்) அளவில் 15 mm Hg அளவுக்கு மேல் வித்தியாசம் வந்தால், கால்களில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது(peripheral vascular disease ) என்றும். மேலும், மூளைக்கு ரத்தம் செல்வது பாதிப்படையும்(cerebrovascular disease)  என்பது  தான்  அந்த ஆரயிச்சியின் முடிவு.

இது குறித்து  மருத்துவ நிபுணர்களின் கருத்து...

" இது ஒரு நல்ல ஆய்வு. வழக்கமா ஒரு கையில்தான் ரத்த அழுத்தத்தை அளப்போம். சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் அளப்போம். வழக்கமாக,  இந்தியாவில்  30 சதவிகித்தினருக்கு  இரண்டு கைகளுக்கிடையே 10  mm Hg வித்தியாசம் இருக்கும். எப்படியோ, இரண்டு கைகளிலும் அளப்பது ஒன்று சிரமம் கிடையாது.  அதைச் செய்யலாம்" என்கிறார் டாக்டர் அனூப் மிஸ்ரரா.(Dr Anoop Misra, chairman of Fortis' Centre of Excellence for Diabetes, Metabolic Diseases and Endocrinology)

"முதல் முறையா ரத்த அழுத்தம் அளக்கப்படும்  நோயாளிகளுக்கு  கை மற்றும் கால்களில்  அளப்போம். கைகளில் உள்ள ரத்த  அழுத்தத்தை விட கால்களில் கூடுதலாக இருக்கும். கைகளைவிட கால்களில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கால்களில் உள்ள தமனிகளில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும். இரண்டு கைககளுக்கிடையே  15 mm Hg
 மேல் வித்தியாசம் இருந்தால், அது கைகளில் உள்ள தமனியில் அடைப்பு உள்ளது என்பதோடு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களிலும், இதயத் தமனிகளிலும்  அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும்"  என்கிறார் இதய நிபுணர் டாக்டர் கே.கே.அகர்வால்.(Dr K K Aggarwal,  president of Heart Care Foundation of India)

 இந்த ஆய்வை தலைமேற்று நடத்திய டாக்டர் கிறிஸ்டோபர் கிளார்க்(Dr Christopher Clark, University of Exeter Peninsula College of Medicine and Dentistry (PCMD)),  சொல்கிறார். "கைகளில் காணப்படும் சிஸ்டாலிக் அழுத்தத்தின் வேறுபாட்டிற்கும், ரத்த நாளங்களில் ஏற்படும் வியாதிகளுக்கும் மற்றும் இறப்புகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு  இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஆராய்ந்தோம். நிச்சயமாக ஒன்றுக்கொன்று தொர்பு இருக்கிறது என்பேதே எங்கள் முடிவு. இரண்டுக் கைகளிடையே  10  mm Hg அல்லது 15  mm Hg அல்லது அதற்கு மேலும் வித்தியாசம் இருந்தால் அவர்களுக்கு வியாதி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், மேற்கொண்டு அவர்களை  பரிசோதனைகளுக்கு  உட்படுத்தலாம்"

ஆரம்ப நிலையில் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிப்பதற்கும் உரிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு உதவும்.

எது எப்படியோ, காலிலும் BP அளக்கலாம் என்பதை இப்பொழுதான் தெரிந்துக் கொண்டேன். மேலும், இனி மருத்துவரிடம் செல்லும் பொழுது இரண்டு கைகளிலும் BP பார்க்கும்படி கேட்டுக் கொள்வோம்.

இது  குறித்து பத்திரிகை செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்.

.

Saturday, February 4, 2012

என் கருத்தைச் சொல்ல மாட்டேன்!



அண்மையில், எனது மருத்துவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர். நேரம் கிடைக்கும் பொழுது, அவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில நாட்களுக்கு முன்  அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. பேச்சு இப்படித்தான் ஆரம்பித்தது.

"குழந்தைக்கு பேர் வச்சிட்டீங்களா சார்?"

"நிரஞ்சனா" என்றார் அவர்.

" நிரஞ்சனா-ன்னா என்ன அர்த்தம்?"

"நிரஞ்சனா-ன்னா, அது ஓர்  ஆற்றின் பெயர், புத்தர் அந்த ஆற்றில் குளித்தப் பிறகுதான் ஞானம் பெற்றார்"

"பெயர் வைக்கிறதுங்கிறது ரொம்பக் கஷ்டம். என்னோட பையனுக்கு குழந்தை பிறக்கும் பொழுது, என்ன பெயர் வைக்கிறதுன்னு இப்ப நினைச்சாலே ஒரே குழப்பமா இருக்கு  சார்!"

"அது, உங்க பையனோட பிரச்னை. அதுல நீங்க தலையிடக் கூடாது!"

"ஆமாம் சார், அது அவங்க உரிமை. அதுல நான் தலையிடல. ஆனா, என்னுடைய கருத்தைச் சொல்லலாம் இல்லையா?"

"உங்களோட கருத்துன்னு, நீங்க சொல்றீங்க. ஆனா, உங்கப் பையன் நம்ம அப்பா ஆசைப்பட்டு சொல்லிட்டார். நாம வேறு பேர் வச்சா,  அப்பா மனசு கஷ்டப்படுமேன்னு நினைச்சு, அந்தப் பேரையே வச்சுடுவார். அதனால, நீங்க எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது!" என்றவர் தொடர்ந்து...

"என்னோட முதல் குழந்தைப்  பிறந்தப்பவே,  நேரா எங்க அப்பாகிட்ட போய், நீங்க பேரு ஏதும் வச்சிடாதீங்கன்னு முதல்லையே சொல்லிட்டேன்!"  என்றார்.

  நிரஞ்சனா என்ற ஆற்றில் குளித்தப் பிறகு, புத்தர் ஞானம் பெற்றதாக மருத்துவர் சொன்னார்.  மேற்கண்ட உரையாடல் எனக்கு புது சிந்தனையைக் கொடுத்தது.  ஏற்கனவே,  நான் சொன்னதால்தான் 'அமைதி விரும்பி' வழக்கறிஞர்  படிப்பில் சேர்ந்தான். இனி, என்னுடையக் கருத்துக்களை 'அமைதி விரும்பி'  கேட்காமல்,  நான் சொல்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மகன் வயதில் உள்ள  பிள்ளைகளின்  பெற்றோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

.