Friday, September 7, 2012

To நிர்மலா பெரியசாமி.

வணக்கம் மேடம்,
 'Z தமிழ்' தொலைக்காட்சியில்   'சொல்வதெல்லாம் உண்மை!' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்பு, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் சோகக் கதையைத்  தொடர்ந்துப் பார்த்து, எனது மன  நிம்மதியை இழக்க விரும்பவில்லை. அதனால், விட்டுவிட்டேன். பிறகு, மூன்று கொலைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்ததோடு  கொலைக் குற்றவாளியை அடையலாம் காட்டியதால், தங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகிவிட்டது அறிந்து மகிழ்ந்தேன். தாங்கள் நிகழ்ச்சி நடத்தும் விதமும் பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. மேலும், குறிப்பாக அடுத்தவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.





 சரி இக்கடிதத்தின் நோக்கம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன், ஒருநாள் தங்கள் நிகழ்ச்சியைப்  பார்க்க நேர்ந்தது. அதில் கலந்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டினீர்கள்.  நிகழ்ச்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பேசும் வார்த்தைகளை அப்படியேக் காட்டி வந்தீர்கள். ஆனால்,  இப்பொழுது இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டியுள்ளீர்கள். இது நடந்தது. அப்படியே பார்வையாளர்களுக்கு காட்டினோம் என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், இனி நடக்கப் போவதுப் பற்றி சிந்த்தீர்களா?

நிகழ்ச்சியில் எதிராளியை தாக்க வேண்டும் அல்லது தாக்கலாம் என்கிற மனநிலையை பங்கேற்பவர்கள் மத்தியில், இது உண்டு செய்யாதா?
தங்களை இந்தளவுக்கு மீடியா வரை இழுத்து வந்து இழிவுப்படுத்தி விட்டார்களே என்று நினைப்பவர்கள், கடைசியில் பழி தீர்க்க வன்முறையைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது?
தங்களிடம் வந்தால் பாதுக்காப்பு என்று நினைப்பவர்கள் கூட இனி பயப்பட செய்வார்கள்தானே?
தங்கள் நிகழ்ச்சி ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்லவே. என்னதான் டி.ஆர்.பி.என்றாலும், அதற்காக இப்படியா?

சினிமா , சீரியல் என்று இல்லாமல், நல்ல நிகழ்ச்சி வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான்.
இது போன்ற கைகலப்புகளையோ அல்லது கட்டிப் புரண்டு  சண்டைப்போடும்  காட்சியையோ, இனிக் காட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அப்படிக் காட்டித்தான் ஆகவேண்டும் என்றால்,   'இளகிய மனம் கொண்டோர், இந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்' என்று அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா மேடம்?!

அன்புடன்,
அமைதியை விரும்பும் பார்வையாளன்.

படம்  உதவி: கூகிள்.