Sunday, February 20, 2011

ஓர் அபாய எச்சரிக்கை!

மதுரை அருகே அவனியாபுரம் மண்டேலா நகர் பகுதியில் உள்ள கண்மாயில் தண்ணீர் குடித்த 100 மாடுகள் பலியாகின. இதைப்பற்றி அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தது. " கண்மாயில் விஷம் கலந்து இருக்கலாம் அல்லது இப்பகுதியில் உள்ள ஒரு கெமிக்கல் கம்பெனியில் உள்ள கழிவு நீர் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது" இது பத்திரிகை செய்தி.

ஆங்காங்கே குளத்தில் மீன்கள் இறந்து ஒதுங்குவது வாடிக்கையாகிவிட்டது. இன்றும் ஒரு மாடு இறந்திருந்தால், இச்செய்தி இவ்வளவு தூரம் அனைவருக்கும் தெரிந்திருக்காது. வாயில்லா ஜீவன்கள் தங்களுடைய உயிரைக் கொடுத்து மக்களை எச்சரித்துள்ளது. எது எப்படியோ நூறு மாடுகள் இறப்பதற்கும் இன்னும் பல மாடுகள் உயிருக்கு போராடுவதற்கும் மனிதன் செய்யும் தவறே காரணம்.

நீர்நிலைகள் மனிதனின் கண்ணுக்கு எப்படித் தெரிகிறதோ தெரியவில்லை. அவைகளைப் பாழ்படுத்துவதில் போட்டிபோட்டுக் கொண்டு செயலில் இறங்குகிறான். நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் குளத்திற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கும் அதி மேதாவிகளே அதிகம்.

நீர்நிலைகளில் குப்பைக் கொட்டுவோரோ, கெமிக்கல் கழிவுகளை கலக்க விடுவோரோ, குடிநீர் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் நினைப்பெல்லாம் 'மினரல் வாட்டர்' குடித்துக் கொள்ளலாமென்று. அவையும் நிலத்தைடியிலிருந்து கிடைப்பதுதான் என்று சிந்திப்பதில்லை. இன்னும் சில பணக்காரர்கள், தாங்கள் இளநீர் குடித்துக் கொள்ளாம் என்று கூட நினைக்கலாம். ஆனால், வேர் மூலம் இளநீரில் விஷம் கலந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

மாடுகள் வைத்திருப்பவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் கிடையாது. குறைந்தப்பட்சம் மாடுகளுக்கு காப்பீடு கூட செய்திருக்க மாட்டார்கள். ஒரு மாட்டின் விலை பத்தாயிரம் என்றாலும் ரூ.பத்து லட்சம் இழந்து தவிக்கிறது அந்தக் குடும்பங்கள்.

அரசியல்வாதிகளுக்கோ வரும் தேர்தலில் 'எவன் தங்கள் கட்சியில் சேர்வான், எந்தக் கம்பெனிக்காரன் பணம் கொடுப்பான், எந்தக் கட்சி நம்மை சேர்த்துக் கொள்ளும்' என்ற சிந்தனை மட்டும்தான். யார் செத்தாலென்ன, எவன் குடும்பம் பாழாய்ப் போனாலென்ன?

அபாயச் சங்கு, இன்று மாடுகளின் இறப்பு வடிவத்தில் ஊதாப்பட்டுள்ளது. எத்தனை பேர் காதில் விழப்போகிறதோ?

.


Wednesday, February 16, 2011

ஏடா..., கூடா..., கேள்விகள் சில!



நம் அனைவருக்கும் எல்லோரிடமும் அன்பாக பேச வேண்டும், நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.அப்படி பேச எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு என்பதைப் பார்ப்போம்.

எங்கள் பகுதியில் ஒருவரை சந்திக்கும் பொழுது 'என்ன, சௌரியமா?'என்பார்கள். சென்னையில் 'சாப்பிட்டாச்சா?' என்கிறார்கள். இது மாதிரி சம்பிரதாயமாக பேசினால், எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், நாம் அப்படி பேசுவது கிடையாது. மற்றவரின் மேல் உள்ள அக்கறையில் சில விசாரணைகள் செய்வோம். அப்படி பேசும் பொழுது நம்மையறியாமல் சில நேரங்களில் சில ஏடா, கூடமான கேள்விகளை கேட்டு, எதிரில் இருப்பவர்களை சங்கடப்படுத்தி விடுவோம். அப்படியான சில கேள்விகள் இங்கே.

ஒரு பெண்ணையோ ஆணையோ புதிதாக சந்திக்கிறோம் என்றால் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால்தான் நடப்பை தொடரலாமா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும். அப்படி அறிந்து கொள்ள சில கேள்விகள் அவசியம். அதில் சில... 'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டால் ஆண்களாக இருந்தால் வருத்தப் படாமல் பதில் சொல்வார்கள். திருமணமாகாத பெண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் வருத்தமடைவார்கள். அதற்குக் காரணம், தனது தோற்றம் திருமணமான பெண்போல் தோன்றுகிறதோ என்று நினைத்து வருத்தமடைவார்கள்.

சரி, திருமணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகள் உண்டா? என்று கேட்க முடியாது. அதனால், எத்தனைக் குழந்தைகள் அல்லது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்போம். இந்தக் கேள்விக்கு, குழந்தை இல்லாத பெண்கள் மனமொடிந்து விடுகிறார்கள். 'குழந்தையும் இருக்கு' என்று வைத்துக் கொள்வோம். 'என்ன படிக்கிறார்கள், எங்கு படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள்?' என்று கேட்போம். அப்படி கேட்டால், நன்றாக பிள்ளைகள் படித்தால் இந்தக் கேள்வியை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வார்கள். இல்லையெனில் கேள்விக் கேட்ட நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
என்ன வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம்? என்பன போன்ற கேள்விகள் ஆண்களை சங்கடப்படுத்தும்.

படித்து முடித்த பிள்ளைகளின் பெற்றோரிடம், உங்கள் மகனுக்கு/மகளுக்கு வேலைக் கிடைத்து விட்டதா? (வேலை கிடைத்திருந்தால், அவர்கள் மகிழ்ச்சியாக பதில் சொல்வார்கள்) அப்புறம் மகனின்/மகளின் திருமணம் குறித்தக் கேள்வி. இந்த மாதிரி கேள்வியைத் தவிர்ப்பதர்க்காகவே எனக்கு தெரிந்த பெண்மணி(மகளுக்கு வரன் அமையவில்லை) திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதையே தவிர்த்து விட்டார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று நேர்முகத் தேர்வுக் கணக்காக கேள்விக் கேட்கவும் முடியாது. சிலர், மற்றவரைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள், அடுத்தவரின் நல்லது கெட்டதுகளில் பங்கு கொள்ள மாட்டார்கள். இப்படி, யாரிடமும் அதிகம் பேசாதவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. எப்பொழுதும், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவோ அல்லது மற்றவர்களிடம் அதிகம் பேச நினைப்பவர்களின் நிலை கத்தி மேல் நடப்பதற்கு சமம்!
.