Wednesday, June 15, 2011

பின் தொடரும் வியாதி!



தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த வியாதி அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கு, உதாரணம் தொலைக் காட்சித் தொடர்களில் முதல் நாள் முடிந்த நிகழ்வின் தொடர்ச்சியை அறிய மறுநாள் ஆவலுடன் காத்திரும் மக்களே சாட்சி.

முன்பெல்லாம், உறவினர்கள் வெளியூருக்குச் சென்றால் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்துவிட்டு, நம்முடைய வேலையைப் பார்ப்போம். பிறகு, ஒரு வாரம் கழித்து அவர்களிடமிருந்து 'நல்ல படியாக, ஊர் வந்து சேர்ந்தோம்' என்று ஒரு கடிதம் வரும். ஆனால், இன்று நிலைமை வேறு. வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் நாம் அறிய விரும்புகிறோம். பஸ் கிடைத்ததா, வழியில் சாப்பிட்டார்களா, எப்பொழுது வீடு போய் சேர்ந்தார்கள்? போன்ற விபரங்களை அறிந்து கொள்ள நமது மனது ஆசைப்படுகிறது. அதனால், செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை.

மற்றவர்களின், ஒவ்வொரு அசைவையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். உதாரணமாக, நாம் தொடர்ந்து படித்து வரும் பிளாக்கர், ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ புதிய பதிவுகளிடவில்லை என்றால் அவருக்கு என்ன ஆச்சு? உடல் நலமில்லையோ அல்லது குடும்பத்தில் எவருக்கேனும் பிரச்சினையோ என்பது போன்ற எண்ணங்கள் வந்துவிடுகிறது.

எப்பொழுதோ, உறவினர் போட்டித் தேர்வு எழுதியிருப்பார். அவர் எழுதிய தேர்வை அவரே மறந்திருப்பார். ஆனால், நாம் நினைவு வைத்திருந்து முடிவு என்னாச்சு? என்று அறிய ஆவலோடு தொடர்பு கொள்வோம்.

இது, மற்றவர்கள் மீது உள்ள அக்கறையா அல்லது அடுத்தவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமா? என்று எனக்குப் புரியவில்லை.

Friday, June 3, 2011

உங்கள் வீட்டில் எப்படி?

எனது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் பொழுது, நான் கவனிக்கும் விஷயம். அவர்கள் வீட்டில் சுவற்றில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் மணிப் பார்த்தால் சம்பந்தமில்லாமல் இருக்கும். "என்ன இப்படி?" என்று கேட்டால். உடனே, அவர்கள் சொல்வது "நாங்கள் பதினைந்து நிமிஷம் பாஸ்ட்டா வச்சிருக்கோம்" என்பார்கள்.இன்னும் சிலரோ "முப்பது நிமிஷம் பாஸ்ட்டா வச்சிருக்கோம்" என்பார்கள். அதற்கு, அவர்கள் சொல்லும் காரணம் "வேலைக்கு போக நேரமாகிவிடும் என்பதால், இப்படி" என்பார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, எனக்கு பழைய நினைவுகள் வந்ததன் விளைவே இந்தப் பதிவு.

எனது சிறு வயதில் வயல்களில் வேலைப் பார்ப்பவர்கள், நிழலை வைத்து நேரம் கணிப்பார்கள். இன்னும் சிலரோ சூரியனின் உயரத்தை வைத்து, நேரத்தைக் கணிப்பார்கள். காலையில் சேவல் கூவுவதுக் கூட நேரம் கணிக்கவும், காலையில் எழும்புவதற்கு அலாரமாகவும் எங்கள் கிராமத்தில் பயன்பட்டது.

நானும், மற்றவர்களுக்கு நேரம் கணிக்கும் உபகரணமாக இருந்திருக்கிறேன். அது என்னவென்றால், பள்ளியிலிருந்து மதியம் சாப்பிட வீட்டிற்கு வயல்வெளிகள் வழியே வருவேன். அப்பொழுது மதியம் ஒரு மணி என்று அறிந்துக் கொள்வார்கள். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது மாலை ஐந்து மணி என்று கணித்து வேலையை முடித்துக் கொள்வார்கள். இதை எங்கள் அப்பாவிடம், அவர்கள் சொல்லியதால் நான் அறிந்தேன்.

நான் பத்தாம் வகுப்பு படித்த பொழுது அப்பா ஒரு கடிகாரம் வாங்கிக் கொடுத்தார். அது ஆட்டோமேட்டிக் வாட்ச். அதைக் கட்டிக்கொண்டு கையை அசைக்காமல், பல நாட்கள் நடந்து சென்றது வேறு விஷயம். அந்தக் கடிகாரம், நாள் ஒன்றுக்கு ஒரு நிமிடம் கூடுதலாக் காண்பிக்கும். பத்து நாட்கள் அட்ஜஸ்ட் செய்யாவிட்டால் பத்து நிமிடம் கூடுதலாக காட்டும். இது, எனக்கு மிகவும் மனவேதனையைக் கொடுக்கும் விஷயமாக இருந்தது. கண்ணில் படும் கடிகாரம் சர்வீஸ் செய்யும் அனைவரிடமும் எனது கடிகாரத்தை சரி செய்யக் கொடுப்பேன், அவர்களும் ஏதோ அட்ஜஸ்ட் செய்து தருவார்கள். ஆனால், மீண்டும் அதே பிரச்சினைதான். சிலர் ரொம்பக் கூடுதலாக அட்ஜஸ்ட் செய்து விட்டார்கள் என்றால். தினம் ஒரு நிமிடம் குறைவாகக் காட்டும்.

1999 -ல் டிஜிட்டல் வாட்ச் கிடைக்கும் வரை(தம்பி கொடுக்கும் வரை) இதே பிரச்சினையைச் சந்தித்தேன். குவார்ட்ஸ் கடிகாரம் வந்தப் பிறகு எனக்குப் பிரச்சினைக் கிடையாது. ஆனால், அதன் பிறகும் கூட நிமிடம் மட்டுமல்லாது, வினாடி கூட துல்லியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். டி.வி.யில் நீயூஸ் போடும் முன்பு நேரம் போடுவார்களே, அதைப் பார்த்து சரி செய்வேன்.

என்னைப் பொறுத்த வரை, கடிகாரம் என்பது துல்லியமாக நேரத்தைக் காட்ட வேண்டும். இன்றும் கூட நான் வேலை செய்யும் அலுவலகத்தில், உயரத்தில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை சிரமப்பட்டு எடுத்து நேரத்தை சரி செய்து வைத்தால். சில நாட்களில், நண்பர்கள் அதே சிரமத்தைப்பட்டு மீண்டும் நேரத்தை ஐந்து நிமிடம் கூடுதலாக மாற்றியிருப்பார்கள்.

அது சரி, உங்கள் வீட்டில் எப்படி?