Wednesday, April 21, 2010

நடப்பது என்ன...?

கடந்த சில நாட்களில் நடப்பவைகளை நினைத்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்...

பல்லாவரத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் காரை ஓட்டிச் சென்று, மேலிருந்து
கீழே ரயில்வே பாதையில் விழுந்து அடிபட்ட டிரைவர் பற்றிய செய்தி. அதிர்ஷ்டவசமாக ஹை டென்ஷன் மின்சார கம்பியில் அந்த கார் விழவில்லை, மேலும் அந்த சமயத்தில் தொடர்வண்டி வரவில்லை. இல்லையென்றால் விபத்து எப்படி முடிந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.


முசிறியில் +2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மாயமான செய்தி. பிறகு மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வேறுகதை.


தர்மபுரியில் +2 விடைத்தாளை திருத்திய பிறகு, கிழித்து கழிப்பறையில் வீசிய ஆசிரியையின் செயல்.


வேதாரணியம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில் ரவீந்தரன் என்கிற மாணவனுக்கு, கணிதத்தில் முதலில் 92 மதிப்பெண் போடப்பட்டு பின்பு அது மறுகூட்டலில் 97 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மதிப்பெண்ணும் 473 லிருந்து 478 ஆக உயர்ந்தது.அந்த மாவட்டத்தில் 474 மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்த 35 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது.
ஆனால் மாணவன் ரவிந்த்ரனுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை.

பல வழிகளில் முயற்சித்தும் லேப்-டாப் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் நீதிமன்றம் சென்று லேப்-டாப் கிடைப்பதற்கான நீதிமன்ற உத்திரவும் பெற்றுள்ளான். அதற்கு உதவி புரிந்த வழக்கறிஞர் திரு.காசிநாத பாரதியையும் பாராட்டவேண்டும். இவர் பல பொதுநல வழக்குகளைத் தொடர்பவர் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாமே நமக்கென்ன என்ற அலட்சியத்தால் வந்ததுதான்.

பல்லாவரத்தில் அந்த பாலத்தின் முகப்பில் சிறு கல்லைவைத்திருந்தாலோ அல்லது கயிற்றை கட்டியிருந்தாலோ அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.

தபால்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் இருநூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதவேன்டியக் கட்டாயம்.


விடைத்தாளை கிழித்த ஆசிரியைக்கு தெரியுமா அதை எழுதிய மாணவன் மற்றும் பெற்றோரின் தூக்கமில்லா இரவுகளைப் பற்றி?

மாணவன் ரவீந்தரன் விஷயத்துக்கு வருவோம். மாணவன் தேர்வில் கூட்டலை தவறாகப் போட்டால் அவனது வாழ்வு பாழாகும், இங்கு விடைத்தாளில் தவறாகப் கூட்டல் போட்டது ஆசிரியர் ஆனால் அவதிப்பட்டது மாணவன். என்ன வினோதம் பாருங்கள்.

தொலைக்காட்சியில் காசு வாங்கிக்கொண்டு அழுவும் பெண்களைப் பார்த்து அழுவும் நாம், மேலே பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறிது நேரம் வருத்தப்படுவதுக் கூடயில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

Friday, April 2, 2010

ஏ.சி.வாங்க போறிங்களா...? இதைப் படிங்க முதலில்..!

அண்மையில் எனது நண்பருடன் நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததது, பேச்சு பல தளங்களில் பயணித்தது. கடைசியாக வெயில் பற்றிப் பேசினோம். இந்த வெயிலைப் பற்றி விரிவாக பேசினார் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வெயிலை சமாளிக்க வீட்டில் ஏ.சி. இல்லாமல் வாழமுடியாது என்று நான் கூறினேன், அதற்கு அவரின் பதில் எனக்கு ஆச்சர்யாமாக இருந்தது. “இது வெயிலின் ஆரம்பம், கொஞ்சம் கூடுதலான தாக்கம் நமது உடலில் ஏற்படுத்தும். இதுவரை நாம் மிதமான வெப்பநிலையில் பழகிவிட்டு, திடீரென்று வெப்பநிலையில் மாறுதல் ஏற்படும்பொழுது, நமது உடலில் தடுமாற்றம் ஏற்படுவது இயற்கையே. கொஞ்ச நாட்கள் சென்றுவிட்டால், இந்த வெப்பநிலைக்கு தகுந்தவாறு நம் உடல்நிலை மாறிவிடும். அதுவரை அளவுக்கு அதிகமான நீர் மற்றும் உடலுக்குக் குளிச்சியான பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் உட்க்கொண்டால், வெப்பநிலை மாறுபாட்டிலிருந்து தப்பிக்கலாம்”

மேலும் சில செய்திகளையும் சொன்னார். “கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்(இரட்டையர்கள்) அவர்களின் வீடு, கார் இரண்டிலும் ஏ.சி. இருப்பதால், ஏ.சி.இல்லாத வகுப்பில் பாடம் படிக்க முடியாமல், வருகையைப் பதிவு செய்துவிட்டு காருக்குள் சென்று அமர்ந்துகொள்வார்களாம். இத்தனைக்கும் நன்றாக படிக்கூடிய மாணவர்கள் மேலும் வகுப்பை புறக்கணிக்க விரும்பாதவர்கள். அந்த மாணவர்களின் செயலை எப்படி எடுத்துக்கொள்வது?! வீடு, கார் என்று குளிரில் வாழ்ந்துவிட்டு வகுப்பின் வெப்பநிலையை அவர்கள் உடல் ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதுதான் காரணம்”

நண்பரின் இந்த விளக்கத்தை கேட்டப்பின்பு நானும் என்னுடையக் கருத்தை மாற்றிக்கொண்டேன். இப்பொழு நான் சந்திப்பவர்களிடம் "வெயிலைப் பற்றி கவலைப்படாதீர்கள். கொஞ்சநாளில் நமது உடல் இந்த வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளும் அவசரப்பட்டு ஏ.சி.வாங்கி கஷ்டப்படவேண்டாம். வீடு,கார்,அலுவலகம் எல்லாமே ஏ.சி. என்றால், அது சரியாக இருக்கும்" என்று சொல்லிவருகிறேன்

ஏ.சி. வாங்க விரும்பும் எனது குடும்பத்திற்கான பதிவு இது.
உங்களுக்கு?!