Monday, October 31, 2011

இது கூடவா தெரியாது, இவர்களுக்கு...?!


அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய  ஒன்று.  அதுவும்  சுயேட்சைகள் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பது ஆரோக்கியமானதுதான்.  ஏனெனில்,  'நாம் யாரை நிறுத்தினாலும், நமது கட்சி சின்னத்தைப் பார்த்து, மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள்' என்று, இனி அரசியல் கட்சிகள்  நினைக்கும்  வாய்ப்பு குறையலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன்.



இப்பொழுது, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில், தோல்வியை சந்தித்தக் கட்சியின் தலைவர்கள்,  தலையில் போட்டத் துண்டை எடுத்து தோளில் போட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் 'துண்டை  தலையில் போட்டாலென்ன, தோளில்  போட்டால் நமெக்கென்ன?' என்று இருந்து விடலாம். ஆனால், அவர்கள் விடும் அறிக்கைகளைப் படிக்க வேண்டிய துரதிர்ஷ்டம் நமக்கு கிடைத்து விடுகிறதே!

வெற்றிப் பெற்ற இந்த சுயேட்சைகள் எல்லோரும், 'இவர்கள் கட்சியில் சீட் கிடைக்காமல் போட்டியிட்ட அதிருப்தியாளர்கள்' என்று அறிக்கை விட்டு, தங்கள் கட்சி இன்னும் செல்வாக்கோடுதான் இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை என்றால், 'உங்கள்  கட்சியில், மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள்  யாரென்று கண்டுபிடித்து. அவகளை  தேர்தலில் நிறுத்தக் கூட தெரியாத உங்களுக்கு, நாட்டை  நிர்வாகம் பண்ணும் அறிவு  எப்படி இருக்கப் போகிறது?' என்று மக்கள் நினைப்பார்கள் என்பது கூட, இந்த அதிமேதாவிகளுக்கு தெரியவில்லை என்று நினைக்கும் பொழுது, இவர்களின் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை!


Saturday, October 29, 2011

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!


நேரம் கிடைக்கும் பொழுது பதிவை எழுதி டிராப்ட்-ல் சேமித்து வைத்து, பிறகு ஒவ்வொன்றாகா வெளியிடுவது நாம் எல்லோரும் செய்வதுதான். இது ஏனெனில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நமது  பதிவுகள் வெளியாகவில்லை என்றால், நம்மை  பதிவுலகிலிருந்து ஓரம் கட்டி வைத்துவிடுவார்கள். தினம் தோறும் புதிய பதிவர்கள் வரிசைக்கட்டி வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டு தூங்க வேண்டும்' என்பார்கள். அப்படி ஒரு நிலை இன்றைய பதிவர்களுக்கு.




ஒரு சில பதிவர்கள் "என்னிடம் இரண்டு வருடத்திற்கு வெளியிட போதுமான பதிவுகள் டிராப்ட்-ல் உள்ளது" என்று சொல்வதையும் நான் அறிந்திருக்கிறேன். அப்படி என்றால் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது அவர் டிராப்ட்-ல் சேமித்து வைத்திருப்பார் என்று புரிந்துக் கொள்ளலாம். பெரும்பகுதியினர், குறைந்தது பத்து பதிவுகளாவது சேமித்து வைத்திருப்பார்கள். இது நல்ல பழக்கம்தான். ஆனால், இதில் வரும் பிரச்சினைக் குறித்து விளக்குவதே இந்தப் பதிவு.


 மூளையைக் கசக்கி, கை வலிக்க தட்டச்சு செய்து டிராப்ட்-ல் சேமித்து வைத்துவிட்டு, அதனை வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு நாம் சிரமப்பட்டு எழுதிய பதிவை சில நாட்கள் கழித்து படித்தால் அது நமக்கே பிடிக்காமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நாம் எழுதுவதில் முதிர்ச்சி அடைந்திருப்போம் அல்லது  நாம் எழுதிய நேரத்தில் உள்ள சூழ்நிலை மாறியிருக்கும்.


உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்,  கலைஞர் அவர்கள் "கூடா நட்பு கேடாய் முடியம்" என்று  சொன்னபோது  'கூடா(து)  நட்பிற்கு -  ஒரு பார்வை!' என்ற தலைப்பில் பதிவு எழுத ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து விட்டேன். ஆனால், பதிவை வெளியிடாமல் அன்றைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழியில் பதிவை எழுதி வெளியிட்டு வந்தேன். இப்பொழுது அதைப் படித்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இப்பொழுதான் அரசியலில் நட்பே(கூட்டணி) இல்லாமல் போய்விட்டதே. அதனால், அதே தலைப்பில் அரசியல் கலக்காமல், நட்புக் குறித்து மட்டும் எழுதி வெளியிட உள்ளேன்.


நீண்ட  காலம் வெளியிடப்படாமல் பெட்டியில் முடங்கி கிடந்தப் படங்கள், காலம் கடந்து வெளியிடப்படும் பொழுது வெற்றிப் பெறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.


இதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!

.
படம்  உதவி : கூகிள்.

Thursday, October 27, 2011

தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்...?!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவு  மக்கள் போட்டியில் குதித்தனர். இதற்கு காரணம் அரசியல் கட்சிகள்  தனியாக நின்றதும், அரசியலில் பங்கேற்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டதுதான். நல்ல விஷயம் வரவேற்போம். ஆனால், போட்டியில் இறங்குபவர்களில் பலர், பணம் கொடுத்து வெற்றியடைந்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். பெரும்பகுதியினர்  முதலீடு செய்து லாபம் பார்க்கும் தொழிலாக தேர்தலைப் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நபர்கள் அதிகளவில் வெற்றியடையவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சி அதிகளவில் வெற்றிப் பெற்றது என்று ஒரே வரியில் முடித்துவிட முடியாது. சுயேட்சைகளின் வெற்றி குறிப்பிடும் படியாகவும் இருந்தது. தனி நபர் செல்வாக்கு அவசியம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
சரி, தனி நபர் செல்வாக்கு என்றால் என்ன?  ஊரில் உங்கள் பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரியும் என்றால், அது செல்வாக்காக இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உங்களுக்கு மக்கள் மீது அக்கறை கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நபரிடம்  நீங்கள் நெருங்கி பழக வேண்டும். அவர்களின் வீட்டு சுக துக்கங்களில்  பங்கெடுக்க வேண்டும். தாராளமாக மொய் எழுத வேண்டும்.இதைத் தான் இன்றைய நிலையில் மக்கள் எதிர்ப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான வேட்பாளர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.



இதையெல்லாம் செய்யாமல், நீங்கள், 'தெரு விளக்கு எரியவில்லை, குப்பைகள் அள்ளப்படவில்லை,  ரோடு சரியாகப் போடப்படவில்லை, அரசு அலுவலங்கள் சரியாக இயங்கவில்லை' என்று புகார் தெரிவிப்பீர்கள். அதனால், ஒப்பந்தக்காரர் உங்களைக் கண்டு பயந்து சரியாக ரோடு போடலாம். அரசு அலுவலர்கள் உங்களுக்கு பயந்து சரியாக வேலை செய்யலாம். ரேஷன் கடை சிறப்பாக செயல்படலாம். இவ்வளவு மக்கள் நலப் பணியில் ஈடுபடுகிறோமே, ஏன் நாம் தேர்தலில் நிற்கக் கூடாது? என்று நீங்கள் நினைத்தால் தோல்விதான் உங்களுக்கு பரிசாகக் கிடைக்கும். எனவே, இன்றைய நிலையில் இவையெல்லாம் மக்கள் நலப் பணியாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்காக இவையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதனுடன் சேர்த்து மக்களோடு மக்களாக சேர்ந்து பழகவும் கற்றுக் கொள்ள  வேண்டும். உங்களுடைய போராட்டத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.  அப்படி செய்தால் தான் உங்களால் வெற்றிப் பெற முடியும்.


நல்லது செய்வதுதான் உங்கள் நோக்கம் என்றால் இன்றே மக்களோடு மக்களாக கலந்து விடுங்கள். வரும் தேர்தலில் யார், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்  கொண்டு உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது உறுதி.

.

Thursday, October 20, 2011

புகழ் சோறு போடுமா?!

ஒவ்வொருவருக்கும்  தன்னுடைய பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அப்படி புகழ் அடைவதற்கு தன்னால் முடிந்த வரையில் தனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.  புகழ்ப் பெற்றவர்கள் வாழ்வில் கடைசி வரை  மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.


புகழ்ப்  பெற்ற மனிதர்களில்  சிலர் கடைசிக் காலத்தில் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிகழ்வுகளை  நினைத்தால் 'புகழுக்கும் வாழ்விற்கும் சம்பந்தமில்லை' என்று தான் தோன்றுகிறது.


கடந்த வருடம்   நடிகை காஞ்சனா கஷ்டப்படுவதாக  பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இன்று மாலைமலர் பத்திரிகையில் நடிகர் லூஸ் மோகன் பற்றி வந்துள்ள செய்தியும் என்னை வருத்தப்பட வைத்துள்ளது. அவரது மகன் அவருக்கு சாப்பாடு போடுவதில்லை என்று போலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். செய்தியைப் படிக்க இங்கே செல்லவும்.


எனக்கு தெரிந்து, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பெற்றோரை நல்ல மாதிரி கவனிக்கிறார்கள். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பாது காக்கிறார்கள். ஆனால்,  வசதிப் படைத்த குடும்பங்களில்தான், பெரும்பகுதி பெற்றோரை கண்டு கொள்ளாமல், இப்படி தவிக்க விடும்   நிலை உள்ளது.


'நமக்கும் வயதாகும், முதுமையும் வரும்' என்று ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை!



Sunday, October 16, 2011

நவம்பரில் வருகிறது 'பெண்டாவேலன்ட் வேக்சின்'!

குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடுவதின் அவசியத்தையும், அதுவும் அரசு மருத்துவமனைகளில் போடப்படும் மருந்துகள் முறையான குளிர்பதன முறையில் பராமரிக்கப் படுவதையும்  மக்கள் அறிந்துள்ளார்கள். பணக்காரர்கள் கூட அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரிசையில் நிற்பதை எங்கும் காண முடிகிறது.

தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் பல்வேறு நோய் எதிர்ப்பு  தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டால், சுமாராக முப்பதானாயிரம் ரூபாய் அளவு செலவாகும் என்று ஒரு மருத்துவர் அண்மையில் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இதுவரை அரசு மருத்துவமனைகளில், டிரைவலேன்ட் எனப்படும்  டி.பி.டி., முத்தடுப்பு (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி) போடப்பட்டு வருகிறது.

இனி ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளைக் கொண்ட, "பெண்டாவேலன்ட் வேக்சின்' குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, 5 மருந்துகளைக் கொண்ட தடுப்பூசி வரும் நவம்பர் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்த பெண்டா தடுப்பூசியில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் "ஹிப்' (Haemophilus influenzea&)- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய, 5 தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அடங்கியிருக்கும் என்கிற செய்தியை  தினமலர் வெளியிட்டுள்ளது.

 தினமலர் வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க படத்தை கிளிக் செய்யவும்.





.

Thursday, October 13, 2011

பிரபல பத்திரிக்கையும் நானும்!

 அண்மையில், நான் ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவில் தொடர்புடைய செய்தி குறித்து  பிரபல பத்திரிகையில் வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கடந்த 10/10/11 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில் குரோம்பேட்டை  திரு வி.சந்தானம் அவர்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். இதோ..





                                           
                                           படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.


நான்  எழுதிய பதிவை படிக்க இங்கே செல்லவும்.


பி.கு. பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல  இந்தப் பதிவு.  இது மாதிரியான செய்திகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்!

.

Friday, October 7, 2011

வேட்பாளரைத் தத்தெடுத்த அரசியல் கட்சி - நல்ல ஆரம்பம்!



கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் சுயேட்சையாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.  இதற்கு முன், இவர் எந்தக அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையாம்.   தற்பொழுது, அவரை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வேட்பாளராக அறிவித்துள்ளது. இதோ விபரம்....

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் திரு. சந்தானம் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் குறைவு!  அவரை  குரோம்பேட்டையின் 'டிராபிக் ராமசாமி' என்று சொன்னால் சரியாக இருக்கும். இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களின் அலட்சியத்தை அம்பலப்படுத்துபவர். 

                                              படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை 'புதிய தலைமுறை' பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பு, மூன்று பக்கங்களில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.  மூன்று முறை  சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள  இங்கு சென்று படிக்கவும்.



ஒரு நகாராட்சியில் இரண்டு பெரியக் கட்சிகளின் வேட்பாளரும் தாதாக்கள். எப்படியோ ஒரு தாதா பதவிக்கு வருவது உறுதி.  இப்படி, பல ஊர்களில் அரசியல் கட்சிகளில் நல்ல வேட்பாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இனி வரும் காலங்களில், இந்த மாதிரியான சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள்  வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.  அவர்களும் அதிகாரத்தின் துணைக் கொண்டு, பல நல்ல காரியங்களை செய்வார்கள் என்று நம்பாலாம். இல்லையெனில், மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.
எது எப்படியோ, இப்போதைக்கு தோழர்களுக்கு ஒரு 'வணக்கம்' போடலாம்!  
.

Monday, October 3, 2011

எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!


கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள  எம்.ஐ.டி  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரியை மூடியுள்ளார்கள். இதற்கு காரணமாக சொல்லப்படுவது, 'ராக்கிங்'யில் ஈடுப்பட்ட  மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், மாணவர்கள் விடுதி அறையை முதல்வர் சோதனையிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை மாற்றச் சொல்கிறார்கள் என்று ஒரு செய்தியும். முதல்வர் ஒரு அடாவடி பேர்வழி, அவர் மாணவர்களையும் பெற்றோரையும் மட்டமான வார்த்தைகளால் திட்டுகிறார். செல்போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்,  மாணவர்களை சிறைக் கைதிபோல் நடத்துகிறார். அதனால், அவரை மாற்ற வேண்டும் என்பது மாணவர்களின் தரப்பாகவும் சொல்லப்படுகிறது.


எம்.ஐ.டி. யின்  61 ஆண்டு கால வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
எம்.ஐ.டி.யில் இடம் பிடிக்க 200 க்கு  199  மேல் 'கட் ஆப்' மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்ற, கல்வியின் மீது அக்கறையுள்ள மாணவர்கள்,  இன்று கிடைக்கும் சிறு சந்தோஷங்களுக்கு மனதை பறிகொடுக்காமல்,  தொடர்ந்து நல்ல முறையில் அமைதியான சூழ்நிலையில் கல்விக் கற்று, ஆராயிச்சியின்  மூலம் பல அறிய கண்டுப்பிடிகளை நிகழ்த்தி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைத் தேடித்தர வேண்டும்.  அதற்கு நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுய கௌரவத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரச்சினையைப் புரிந்துக் கொண்டாலே போதும்!


சரி, தலைப்புக்கு வருவோம். "எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!" இந்த வாக்கியத்தைக் கேட்காத  பெற்றோரும், பேசாத பிள்ளையும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு அனுபவத்தை பிள்ளைகளிடம் பகிர்ந்துக்கொள்ள நினைத்து பேசினால், "சும்மா, மொக்கையா பேசாதீங்க"  என்று பதில் கிடைக்கும்.
இவர்களின் உலகம்தான் என்ன?  எதைத்தான் விரும்புகிறார்கள்? என்று பார்ப்போம். 

இன்றைய 'டீன் ஏஜ்' பிள்ளைகளின் உலகம் சுருங்கிவிட்டது. பெரும்பகுதியினற்கு செல்போனே உலகம் என்றாகிவிட்டது. தனது வயதுடைய நண்பர்களுடன்  செல்போனில் பேசுவது அல்லது எஸ் எம் எஸ் அனுப்புவது. கம்பியூட்டரில் ஆன் லைன் கேம்ஸ் விளையாடுவது, facebook போன்ற சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பது. இவைகளை எப்பொழுதாவது செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. இன்னும் கொடுமை தூங்கும் போதும் தலைக்கு அருகே செல்போனை வைத்துக் கொள்வது. 

நான் பள்ளி விடுதியில் படித்தப் பொழுது, சில மாணவர்கள் ஒருநாள் அனுமதியின்றி சினிமாவிற்கு சென்று வந்ததற்கு தலையில் பெட்டியை வைத்துக் கொண்டு விடுதியை சுற்றி வரச் சொன்ன விடுதிக் காப்பாளர் நினைவுக்கு வருகிறார். அந்தக் காப்பாளர் இப்பொழுது பணியில் இருந்தால்,  24 மணி நேரமும் பொழுதை வீணடிக்கும் மாணவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பார்? 

அண்மையில் ஒரு மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், தனது பிள்ளைகள் குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது மகளிடம் "போய் படி" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, " stop mom, i know how to read!" என்று பதில் வந்ததாம். அப்படி, சொன்ன பெண்ணின் வயது ஏழு!

படம் உதவி: கூகிள்.