Saturday, December 31, 2011

வரும்..., ஆனா, வராது!


 சிறிய வயதில் வேடிக்கைக்காக மற்றவர்களை பயமுறுத்த அபயக் குரலெழுப்புவோம்! அப்பொழுது, எங்கள் தாத்தா சொல்வார், "இப்படித்தான், ஒருத்தன் புலி வருது... புலி வருதுன்னு சத்தம் போடுவானாம். எல்லோரும் ஓடிப்போய் பார்த்தால். எல்லோரையும் ஏமாற்றி விட்டதாக சிரிப்பானாம். பின்பு ஒரு நாள், உண்மையில் புலி வந்தப் பொழுது அவன் போட்ட சத்தத்தை எல்லோரும் பொய் என்று நினைத்து. அங்கு ஒருவரும் செல்லவில்லையாம். காப்பற்ற ஆளில்லாமல் புலி அடித்துக் கொன்றுவிட்டதாம்"



இப்படித்தான், அண்மையில் 'தானே' புயல் குறித்த வானிலை ஆராயிச்சி மையத்தின் எச்சரிக்கையையும் மக்கள் பார்த்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்பே, வானிலை ஆராய்ச்சி மையம் தெளிவாக வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த பொழுதும். மக்கள் அதற்கான திட்டமிடலில் இறங்கவில்லை என்பதுதான் உண்மை.


வீட்டில் மின்சாரம் இல்லாமல், செய்தி தெரிந்துக்கொள்ள  முடியவில்லை. பேட்டரி ரேடியோ வைத்திருந்தவர்கள் கூட அதற்கு பேட்டரி  வாங்கிப் போட வேண்டும் என்று நினைக்கவில்லை. செல் போனை முழுவதும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. வெளியூர் பயணத்தை தவிர்கவில்லை. இவையனைத்தும், எனக்கும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவங்கள்.

'வரும்..., ஆனா, வராது!'  இப்படி ஒரு நகைச்சுவை சினிமாவில் அமைத்திருப்பார்கள். அது போல வானிலை அறிக்கையையும்  மக்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இதுநாள் வரை, "ரமணன் சொல்லிட்டார் மழை பெய்யும்-ன்னு. குடைய வீட்ல வச்சிட்டு வாங்க" அப்படின்னு கணவனைப் பார்த்து மனைவி சொல்வதாக ஜோக் சொல்வார்கள். அப்படித்தான் 'தானே' புயல் குறித்த திரு.ரமணனின் எச்சரிக்கையும் பார்க்கப்பட்டது. மிக துல்லியமாக கணித்துச் சொன்ன வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு நமது பாராட்டுக்கள். இனி வரும் காலங்களில், மக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளை மதித்து, அதற்குரிய குறைந்தப்பட்ச முன்னேற்பாடுகளை செய்துக் கொள்ள வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.


தானே புயலால் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் தெரிவிப்போம்.

Thursday, December 22, 2011

கூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை!


'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம்  சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்காகச் சொன்னார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இங்கு, எனக்குத் தெரிந்த கூடா நட்பையும், நட்பிற்கு கூடாதவைகளையும் பார்ப்போம்.




இது நாள் வரை என்னுடைய அனுபவத்தில் நிகழ் காலத்தில் நமக்கு விரோதிகளாகத் தெரிபவர்கள், கடந்தக் காலத்தில்  நமக்கு நண்பர்களாக இருந்திருப்பார்கள்.  பெரும்பகுதியான விரோதிகள் நண்பராக இருந்து, பிறகுதான் விரோதியாக மாறியிருப்பார்கள். அண்ணாமலை திரைப்படத்தில் கூட, நண்பர்கள்தான் எதிரியவதாக கதை அமைத்திருப்பார்கள். எல்லோரும் அந்தப் படத்தை ரசித்தனர்.

பொதுவாக பலர் "அப்பாவின் நண்பர் எங்கள் அப்பாவை ஏமாற்றிவிட்டார்" என்று கூறுவதை கேட்டிருப்போம். நட்பை முதலீடாகக் கொண்டு செய்யும் எந்த செயலும் நட்பை அழித்துவிடும். இந்த மாதிரி நண்பர்கள் எதிரியாவதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.  இருந்தும் ஓர்  உதாரணம் மட்டும் இங்கே! 

எனது நண்பரும், அவருடன் வேலைப் பார்த்த பெண்மணியும் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். அவர்களின் நட்பை வேறுவிதமாக சொல்லியவர்களும் உண்டு. அந்தப் பெண்மணியின் கணவர் வேலையில்லாமல் சிரமப்பட்டார். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தில்,  நண்பர் அந்தப் பெண்மணியின் கணவரோடு கூட்டாக சேர்ந்து ஒரு தொழில் துவங்கினார். சில ஆண்டுகளில் தொழில் சரியாக நடக்காமல் போகவே, இரண்டு குடும்பத்திற்கும் இடையில் பெரியளவில் பிரச்னை வந்து, பிறகு கட்டப் பஞ்சாயத்தில் கமிஷன் கொடுத்து தீர்த்துக் கொண்டார்கள். இரண்டு பேருக்கும் இடையிலான நட்பு, கடைசியில் காமெடி சினிமா காட்சி போலாகி விட்டது.

'கூடா நட்பு' பற்றி நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் கேட்டால் இன்னும் சிறப்பாக சொல்வார்.  இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். 'நட்பு என்பது நட்புக்காக மட்டும் இருக்க வேண்டும்'. அதில் எந்தவிதமான லாபத்தையும் எதிர்பார்க்க  கூடாது.


என்னிடம் பலர், "உங்களுக்கு உள்ள பழக்கத்திற்கு, இந்த தொழிலை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும் " என்று் அணுகியுள்ளார்கள். அப்படி அவர்கள் செய்யச் சொன்னது,  MLM என்கிற சங்கிலித் தொடர் தொழில். எப்பொழுது யார் வந்துக் கேட்டாலும் அவர்களுக்கு என்னுடைய பதில் ஒன்றுதான். அது, "நட்பை விலை பேச மாட்டேன்" என்பதாகும். அதனால், ஆள் பிடிக்கும் எந்த தொழிலிலும் இது வரை என்னை இணைத்துக் கொண்டது கிடையாது.

இன்றைக்கு பரபரப்பாக பேசப்படும் பிரிந்த நட்பும், கூடா நட்புதான்.  அதாதவது நட்பை முதலீடாகக்  கொண்டு செய்த செயல்கள் தான் பிரிவினைக்கு காரணம். எனவே, நட்பு நட்பாக மட்டும் இருக்கும்பொழுது 'கூடா நட்பு' என்ற வார்த்தை அவசியமில்லை. ஆனால், இவைகள் 'கூடாது நட்பிற்கு'  என்று சிலவற்றை வேண்டுமானால்  குறிப்பிட்டுச்  சொல்லலாம்!

படம்  உதவி: கூகிள்

Tuesday, December 20, 2011

உரிமைக்குரல்!

 எங்கள் ஊர் டூரிங் டாக்கிஸ்யில் மண் தரையில் அமர்ந்துப் பார்த்த முதல் எம்ஜிஆர்  படம் 'உரிமைக்குரல்'. அப்பொழுது, உரிமைக்குரல் என்றால் எனக்கு பொருள் புரிந்ததாக நினைவில்லை. ஆனால், இப்பொழுது முல்லைப் பெரியாறு விஷயத்தில் 'டேம் 999' படம் , ஒட்டு மொத்த தமிழக மக்களின் உள்ளங்களில் அணை குறித்த  'உரிமைக்குரல்' ஐ  ஓங்கி ஒலிக்க செய்திருப்பதை உணர முடிகிறது.             


                                                             


முல்லைப் பெரியாறு என்றால் 'முல்லைப் பெரியார்' என்று நினைத்திருந்தேன். இப்பொழுதான், அது முல்லை ஆறும், பெரிய ஆறும் சேருமிடத்தில் கட்டப்பட்டதால்  அந்தப் பெயர் என்று விளங்கிக் கொண்டேன். 'முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருகிறது. அப்படி எனில், அணை உடைந்தால்,  தமிழ்நாடு தானே பாதிப்படையும். பின், ஏன் கேரளா அழிந்து விடும் என்கிறார்கள்' என்று என்  மனதில் அடிக்கடி  ஒரு சந்தேகம் வந்து, அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும்.  



இப்பொழுது, பத்திரிகைகள், வலைப்பூக்கள், வீடியோ படங்கள் மூலமாக, தமிழகத்தில் உள்ள சிவகிரி சிகரத்தில் பெரியாறு தோன்றுவது முதல், பிறகு அது  முல்லை ஆற்றுடன் சேருமிடத்தில்.  பென்னிகுக்-யின் தியாகத்தால் கட்டிய அணையில் தண்ணீரை தேக்கி, மலையில் சுரங்கம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பப்படுவது முதல்,  வரலாற்றோடு,  அதை இன்றைய  கேரள அரசியவாதிகள் எப்படி அரசியலாக்கினர் என்பது வரையும். தமிழகத்தின் நியாத்தையும், இதுநாள் வரை நான் அறியாத பல விஷயங்களையும் அறிந்துக் கொண்டேன்.  இந்த அணையில்  104 அடி தண்ணீர் அப்படியே இருந்தால்தான், அதற்கு மேல் உள்ள தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் எனபதும் நாம் அறிய வேண்டிய ஒன்று.

நடப்புக்கு வருவோம், கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் கேரள எல்லையை நோக்கி எழுச்சியுடன் ஊர்வலம் போவதும், காவல்துறையினர் வழிமறித்து அனுப்புவதையும் ஊடங்கங்கள் வழியாக அறிவோம். இதற்கிடையே சிலர் இங்கிருக்கும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க கேரள மக்களின் பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளை சேதப்படுத்துவது வருத்தமளிக்கும் செயலாகவே உள்ளது. அதை செய்பவர்களில் சிலர் சட்டம் படித்த வழக்கறிஞர்கள் என்று பத்திரிகையில் படிக்கும் பொழுது அந்த வருத்தம் இன்னும் கூடுகிறது.

இன்றைய தினம் நாட்டில் நியாயம் கிடைக்க நாம் அனைவரும் செல்ல வேண்டிய  இடம் நீதிமன்றம் என்றாகிவிட்டது. நாமெல்லாம், நீதிமன்றத்தை நம்பும் பொழுது, ஏன் இந்த வழக்கறிஞர்கள்  நீதி மன்றத்தை நம்பாமல், இவர்களே சட்டத்தை கையிலெடுக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை? கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியவர்கள், ரோட்டில் உருட்டுக் கட்டையுடன் போராடுவதை என்னவென்று சொல்வது?  இவர்களின் இம் மாதிரியான நடவடிக்கைகள் தொடர்ந்தால்,  வழக்கறிஞர்களின்  மீதும்,  நீதி மன்றங்களின் மீதும் பொது மக்களுக்கு எவ்விதத்தில் நம்பிக்கை வரும்? திரு. டிராபிக் ராமசாமி  கட்டையை எடுக்கொண்டு மிரட்டியா ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட வைத்தார்?  கோர்ட் மீது, அவர் வைத்துள்ள நம்பிக்கை, சட்டம் படித்த இவர்களுக்கு  ஏன் இல்லை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு , இவர்களின் சட்ட அறிவு உதவினால் நன்றாக இருக்குமே?!

காவிரி நீர் பிரச்னையின் போது கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்தான் நமக்கு பிரச்னை செய்கிறார்கள். கேரளத்தை சார்ந்தவர்கள் நல்லவர்கள், அவர்கள் நமக்கு  பிரச்னை கொடுப்பதில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால், அவர்களின் இப்போதைய பிடிவாதம் மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. 

எங்கோ பிறந்து, இங்குள்ள மக்கள் பசியால் வாடக்கூடாது  என்பதற்காக பல துன்பங்களை அனுபவித்து அணையைக் கட்டிய பென்னிகுக் -யின் தியாகத்தை நினைத்துப் பார்த்து, கேரளத்தவர்கள் மனம் மாற வேண்டும். 'கேரளத்தவர்களின் மனதை மாற்றி, நல்ல புத்தியை அவர்களுக்கு கொடுக்கும் வரை. உன்னை வந்து வழிபட மாட்டோம்' என்று தமிழக ஐயப்பசாமிகள் இங்கிருந்தபடியே ஐயப்பனிடம் கோரிக்கை வைக்கலாம்.

தமிழக அரசியல் கட்சிகள் 'சுயநல அரசியல்' லாபம் பார்க்காமல், வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓர் அணியில் நின்று தமிழகத்திற்கு நியாயம்  கிடைக்க உரிமைக்குரல்  கொடுக்க வேண்டும். அதுதான் பென்னிகுக் என்ற தன்னலமற்ற மாமனிதனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

.

Tuesday, December 13, 2011

விட வேண்டாம் இடைவெளி...!


கடந்த இரண்டு வருடங்களாக நானும் பதிவெழுதி வருகிறேன். இப்பொழுது எனக்கு வந்துள்ள சோர்வு, இதற்கு முன்பு வந்ததில்லை. எவ்வளவோ வேலைகள் இருந்த போதும் தொடர்சியாக எழுத வேண்டும் என்கிற ஒரு விதமான எண்ணம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்பொழுது அது 'ஆப்சென்ட்' டாகி விட்டது. இதற்கு காரணமாக நான் நினைப்பது, கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பிளாக் பக்கம் வராமல் 'விடுப்பில்' சென்றுவிட்டேன்.





பதிவெழுத முக்கியத் தகுதியே எதையாவது தொடர்ச்சியாக எழுத வேண்டும். இல்லையெனில், எழுதுவதிலிருந்து விலகி விடுவோம். பிரபலமான பதிவர்கள்கூட, சிறு இடைவெளிக்குப் பிறகு, எழுதுவதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது  மீண்டும் அவர்களால் பழைய மாதிரி முழு திறனோடு எழுத முடியாமல் சிரமப் படுவதை கூர்ந்து கவனித்தால் அறிந்துக் கொள்ளலாம்.


 சரி, எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு நிலை வருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிவெழுதுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்குக்காக எழுதுவது அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்காக எழுதுவது. பதிவெழுதாமல் இருக்கிற காலத்தில் பொழுது போக்குவதற்கோ அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்கோ வேறு வழியைக் கண்டுப் பிடித்து விடுவோம். அதனால், பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. பதிவு எழுதாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதுவே, இதில் வருமானம் கிடைப்பதாக இருந்தால் இப்படி ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு.


இனி, பதிவுலக நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். நானும் என்னென்னவோ எழுதிப் பார்க்கிறேன் முன்ன மாதிரி சிந்தனை(?!) வர மாட்டேங்குது:-))))!

இதுவும் பதிவருக்கான எனது அனுபவ ஆலோசனை...!

 

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!





படம் உதவி: கூகிள்.

Friday, December 2, 2011

படத்தைப் பார்த்து கருத்தைச் சொல்லவும்!

அண்மையில் நான் வேதாரணியம் சென்ற பொழுது, என் கவனத்தை ஈர்த்தக் காட்சியை படம் பிடித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு தோன்றுவதை பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.


Monday, October 31, 2011

இது கூடவா தெரியாது, இவர்களுக்கு...?!


அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய  ஒன்று.  அதுவும்  சுயேட்சைகள் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பது ஆரோக்கியமானதுதான்.  ஏனெனில்,  'நாம் யாரை நிறுத்தினாலும், நமது கட்சி சின்னத்தைப் பார்த்து, மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள்' என்று, இனி அரசியல் கட்சிகள்  நினைக்கும்  வாய்ப்பு குறையலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன்.



இப்பொழுது, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில், தோல்வியை சந்தித்தக் கட்சியின் தலைவர்கள்,  தலையில் போட்டத் துண்டை எடுத்து தோளில் போட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் 'துண்டை  தலையில் போட்டாலென்ன, தோளில்  போட்டால் நமெக்கென்ன?' என்று இருந்து விடலாம். ஆனால், அவர்கள் விடும் அறிக்கைகளைப் படிக்க வேண்டிய துரதிர்ஷ்டம் நமக்கு கிடைத்து விடுகிறதே!

வெற்றிப் பெற்ற இந்த சுயேட்சைகள் எல்லோரும், 'இவர்கள் கட்சியில் சீட் கிடைக்காமல் போட்டியிட்ட அதிருப்தியாளர்கள்' என்று அறிக்கை விட்டு, தங்கள் கட்சி இன்னும் செல்வாக்கோடுதான் இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை என்றால், 'உங்கள்  கட்சியில், மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள்  யாரென்று கண்டுபிடித்து. அவகளை  தேர்தலில் நிறுத்தக் கூட தெரியாத உங்களுக்கு, நாட்டை  நிர்வாகம் பண்ணும் அறிவு  எப்படி இருக்கப் போகிறது?' என்று மக்கள் நினைப்பார்கள் என்பது கூட, இந்த அதிமேதாவிகளுக்கு தெரியவில்லை என்று நினைக்கும் பொழுது, இவர்களின் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை!


Saturday, October 29, 2011

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!


நேரம் கிடைக்கும் பொழுது பதிவை எழுதி டிராப்ட்-ல் சேமித்து வைத்து, பிறகு ஒவ்வொன்றாகா வெளியிடுவது நாம் எல்லோரும் செய்வதுதான். இது ஏனெனில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நமது  பதிவுகள் வெளியாகவில்லை என்றால், நம்மை  பதிவுலகிலிருந்து ஓரம் கட்டி வைத்துவிடுவார்கள். தினம் தோறும் புதிய பதிவர்கள் வரிசைக்கட்டி வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டு தூங்க வேண்டும்' என்பார்கள். அப்படி ஒரு நிலை இன்றைய பதிவர்களுக்கு.




ஒரு சில பதிவர்கள் "என்னிடம் இரண்டு வருடத்திற்கு வெளியிட போதுமான பதிவுகள் டிராப்ட்-ல் உள்ளது" என்று சொல்வதையும் நான் அறிந்திருக்கிறேன். அப்படி என்றால் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது அவர் டிராப்ட்-ல் சேமித்து வைத்திருப்பார் என்று புரிந்துக் கொள்ளலாம். பெரும்பகுதியினர், குறைந்தது பத்து பதிவுகளாவது சேமித்து வைத்திருப்பார்கள். இது நல்ல பழக்கம்தான். ஆனால், இதில் வரும் பிரச்சினைக் குறித்து விளக்குவதே இந்தப் பதிவு.


 மூளையைக் கசக்கி, கை வலிக்க தட்டச்சு செய்து டிராப்ட்-ல் சேமித்து வைத்துவிட்டு, அதனை வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு நாம் சிரமப்பட்டு எழுதிய பதிவை சில நாட்கள் கழித்து படித்தால் அது நமக்கே பிடிக்காமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நாம் எழுதுவதில் முதிர்ச்சி அடைந்திருப்போம் அல்லது  நாம் எழுதிய நேரத்தில் உள்ள சூழ்நிலை மாறியிருக்கும்.


உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்,  கலைஞர் அவர்கள் "கூடா நட்பு கேடாய் முடியம்" என்று  சொன்னபோது  'கூடா(து)  நட்பிற்கு -  ஒரு பார்வை!' என்ற தலைப்பில் பதிவு எழுத ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து விட்டேன். ஆனால், பதிவை வெளியிடாமல் அன்றைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழியில் பதிவை எழுதி வெளியிட்டு வந்தேன். இப்பொழுது அதைப் படித்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இப்பொழுதான் அரசியலில் நட்பே(கூட்டணி) இல்லாமல் போய்விட்டதே. அதனால், அதே தலைப்பில் அரசியல் கலக்காமல், நட்புக் குறித்து மட்டும் எழுதி வெளியிட உள்ளேன்.


நீண்ட  காலம் வெளியிடப்படாமல் பெட்டியில் முடங்கி கிடந்தப் படங்கள், காலம் கடந்து வெளியிடப்படும் பொழுது வெற்றிப் பெறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.


இதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!

.
படம்  உதவி : கூகிள்.

Thursday, October 27, 2011

தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்...?!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவு  மக்கள் போட்டியில் குதித்தனர். இதற்கு காரணம் அரசியல் கட்சிகள்  தனியாக நின்றதும், அரசியலில் பங்கேற்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டதுதான். நல்ல விஷயம் வரவேற்போம். ஆனால், போட்டியில் இறங்குபவர்களில் பலர், பணம் கொடுத்து வெற்றியடைந்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். பெரும்பகுதியினர்  முதலீடு செய்து லாபம் பார்க்கும் தொழிலாக தேர்தலைப் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நபர்கள் அதிகளவில் வெற்றியடையவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சி அதிகளவில் வெற்றிப் பெற்றது என்று ஒரே வரியில் முடித்துவிட முடியாது. சுயேட்சைகளின் வெற்றி குறிப்பிடும் படியாகவும் இருந்தது. தனி நபர் செல்வாக்கு அவசியம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
சரி, தனி நபர் செல்வாக்கு என்றால் என்ன?  ஊரில் உங்கள் பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரியும் என்றால், அது செல்வாக்காக இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உங்களுக்கு மக்கள் மீது அக்கறை கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நபரிடம்  நீங்கள் நெருங்கி பழக வேண்டும். அவர்களின் வீட்டு சுக துக்கங்களில்  பங்கெடுக்க வேண்டும். தாராளமாக மொய் எழுத வேண்டும்.இதைத் தான் இன்றைய நிலையில் மக்கள் எதிர்ப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான வேட்பாளர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.



இதையெல்லாம் செய்யாமல், நீங்கள், 'தெரு விளக்கு எரியவில்லை, குப்பைகள் அள்ளப்படவில்லை,  ரோடு சரியாகப் போடப்படவில்லை, அரசு அலுவலங்கள் சரியாக இயங்கவில்லை' என்று புகார் தெரிவிப்பீர்கள். அதனால், ஒப்பந்தக்காரர் உங்களைக் கண்டு பயந்து சரியாக ரோடு போடலாம். அரசு அலுவலர்கள் உங்களுக்கு பயந்து சரியாக வேலை செய்யலாம். ரேஷன் கடை சிறப்பாக செயல்படலாம். இவ்வளவு மக்கள் நலப் பணியில் ஈடுபடுகிறோமே, ஏன் நாம் தேர்தலில் நிற்கக் கூடாது? என்று நீங்கள் நினைத்தால் தோல்விதான் உங்களுக்கு பரிசாகக் கிடைக்கும். எனவே, இன்றைய நிலையில் இவையெல்லாம் மக்கள் நலப் பணியாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்காக இவையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதனுடன் சேர்த்து மக்களோடு மக்களாக சேர்ந்து பழகவும் கற்றுக் கொள்ள  வேண்டும். உங்களுடைய போராட்டத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.  அப்படி செய்தால் தான் உங்களால் வெற்றிப் பெற முடியும்.


நல்லது செய்வதுதான் உங்கள் நோக்கம் என்றால் இன்றே மக்களோடு மக்களாக கலந்து விடுங்கள். வரும் தேர்தலில் யார், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்  கொண்டு உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது உறுதி.

.

Thursday, October 20, 2011

புகழ் சோறு போடுமா?!

ஒவ்வொருவருக்கும்  தன்னுடைய பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அப்படி புகழ் அடைவதற்கு தன்னால் முடிந்த வரையில் தனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.  புகழ்ப் பெற்றவர்கள் வாழ்வில் கடைசி வரை  மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.


புகழ்ப்  பெற்ற மனிதர்களில்  சிலர் கடைசிக் காலத்தில் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிகழ்வுகளை  நினைத்தால் 'புகழுக்கும் வாழ்விற்கும் சம்பந்தமில்லை' என்று தான் தோன்றுகிறது.


கடந்த வருடம்   நடிகை காஞ்சனா கஷ்டப்படுவதாக  பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இன்று மாலைமலர் பத்திரிகையில் நடிகர் லூஸ் மோகன் பற்றி வந்துள்ள செய்தியும் என்னை வருத்தப்பட வைத்துள்ளது. அவரது மகன் அவருக்கு சாப்பாடு போடுவதில்லை என்று போலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். செய்தியைப் படிக்க இங்கே செல்லவும்.


எனக்கு தெரிந்து, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பெற்றோரை நல்ல மாதிரி கவனிக்கிறார்கள். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பாது காக்கிறார்கள். ஆனால்,  வசதிப் படைத்த குடும்பங்களில்தான், பெரும்பகுதி பெற்றோரை கண்டு கொள்ளாமல், இப்படி தவிக்க விடும்   நிலை உள்ளது.


'நமக்கும் வயதாகும், முதுமையும் வரும்' என்று ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை!



Sunday, October 16, 2011

நவம்பரில் வருகிறது 'பெண்டாவேலன்ட் வேக்சின்'!

குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடுவதின் அவசியத்தையும், அதுவும் அரசு மருத்துவமனைகளில் போடப்படும் மருந்துகள் முறையான குளிர்பதன முறையில் பராமரிக்கப் படுவதையும்  மக்கள் அறிந்துள்ளார்கள். பணக்காரர்கள் கூட அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரிசையில் நிற்பதை எங்கும் காண முடிகிறது.

தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் பல்வேறு நோய் எதிர்ப்பு  தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டால், சுமாராக முப்பதானாயிரம் ரூபாய் அளவு செலவாகும் என்று ஒரு மருத்துவர் அண்மையில் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இதுவரை அரசு மருத்துவமனைகளில், டிரைவலேன்ட் எனப்படும்  டி.பி.டி., முத்தடுப்பு (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி) போடப்பட்டு வருகிறது.

இனி ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளைக் கொண்ட, "பெண்டாவேலன்ட் வேக்சின்' குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, 5 மருந்துகளைக் கொண்ட தடுப்பூசி வரும் நவம்பர் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்த பெண்டா தடுப்பூசியில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் "ஹிப்' (Haemophilus influenzea&)- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய, 5 தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அடங்கியிருக்கும் என்கிற செய்தியை  தினமலர் வெளியிட்டுள்ளது.

 தினமலர் வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க படத்தை கிளிக் செய்யவும்.





.

Thursday, October 13, 2011

பிரபல பத்திரிக்கையும் நானும்!

 அண்மையில், நான் ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவில் தொடர்புடைய செய்தி குறித்து  பிரபல பத்திரிகையில் வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கடந்த 10/10/11 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில் குரோம்பேட்டை  திரு வி.சந்தானம் அவர்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். இதோ..





                                           
                                           படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.


நான்  எழுதிய பதிவை படிக்க இங்கே செல்லவும்.


பி.கு. பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல  இந்தப் பதிவு.  இது மாதிரியான செய்திகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்!

.

Friday, October 7, 2011

வேட்பாளரைத் தத்தெடுத்த அரசியல் கட்சி - நல்ல ஆரம்பம்!



கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் சுயேட்சையாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.  இதற்கு முன், இவர் எந்தக அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையாம்.   தற்பொழுது, அவரை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வேட்பாளராக அறிவித்துள்ளது. இதோ விபரம்....

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் திரு. சந்தானம் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் குறைவு!  அவரை  குரோம்பேட்டையின் 'டிராபிக் ராமசாமி' என்று சொன்னால் சரியாக இருக்கும். இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களின் அலட்சியத்தை அம்பலப்படுத்துபவர். 

                                              படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை 'புதிய தலைமுறை' பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பு, மூன்று பக்கங்களில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.  மூன்று முறை  சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள  இங்கு சென்று படிக்கவும்.



ஒரு நகாராட்சியில் இரண்டு பெரியக் கட்சிகளின் வேட்பாளரும் தாதாக்கள். எப்படியோ ஒரு தாதா பதவிக்கு வருவது உறுதி.  இப்படி, பல ஊர்களில் அரசியல் கட்சிகளில் நல்ல வேட்பாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இனி வரும் காலங்களில், இந்த மாதிரியான சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள்  வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.  அவர்களும் அதிகாரத்தின் துணைக் கொண்டு, பல நல்ல காரியங்களை செய்வார்கள் என்று நம்பாலாம். இல்லையெனில், மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.
எது எப்படியோ, இப்போதைக்கு தோழர்களுக்கு ஒரு 'வணக்கம்' போடலாம்!  
.

Monday, October 3, 2011

எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!


கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள  எம்.ஐ.டி  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரியை மூடியுள்ளார்கள். இதற்கு காரணமாக சொல்லப்படுவது, 'ராக்கிங்'யில் ஈடுப்பட்ட  மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், மாணவர்கள் விடுதி அறையை முதல்வர் சோதனையிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை மாற்றச் சொல்கிறார்கள் என்று ஒரு செய்தியும். முதல்வர் ஒரு அடாவடி பேர்வழி, அவர் மாணவர்களையும் பெற்றோரையும் மட்டமான வார்த்தைகளால் திட்டுகிறார். செல்போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்,  மாணவர்களை சிறைக் கைதிபோல் நடத்துகிறார். அதனால், அவரை மாற்ற வேண்டும் என்பது மாணவர்களின் தரப்பாகவும் சொல்லப்படுகிறது.


எம்.ஐ.டி. யின்  61 ஆண்டு கால வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
எம்.ஐ.டி.யில் இடம் பிடிக்க 200 க்கு  199  மேல் 'கட் ஆப்' மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்ற, கல்வியின் மீது அக்கறையுள்ள மாணவர்கள்,  இன்று கிடைக்கும் சிறு சந்தோஷங்களுக்கு மனதை பறிகொடுக்காமல்,  தொடர்ந்து நல்ல முறையில் அமைதியான சூழ்நிலையில் கல்விக் கற்று, ஆராயிச்சியின்  மூலம் பல அறிய கண்டுப்பிடிகளை நிகழ்த்தி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைத் தேடித்தர வேண்டும்.  அதற்கு நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுய கௌரவத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரச்சினையைப் புரிந்துக் கொண்டாலே போதும்!


சரி, தலைப்புக்கு வருவோம். "எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!" இந்த வாக்கியத்தைக் கேட்காத  பெற்றோரும், பேசாத பிள்ளையும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு அனுபவத்தை பிள்ளைகளிடம் பகிர்ந்துக்கொள்ள நினைத்து பேசினால், "சும்மா, மொக்கையா பேசாதீங்க"  என்று பதில் கிடைக்கும்.
இவர்களின் உலகம்தான் என்ன?  எதைத்தான் விரும்புகிறார்கள்? என்று பார்ப்போம். 

இன்றைய 'டீன் ஏஜ்' பிள்ளைகளின் உலகம் சுருங்கிவிட்டது. பெரும்பகுதியினற்கு செல்போனே உலகம் என்றாகிவிட்டது. தனது வயதுடைய நண்பர்களுடன்  செல்போனில் பேசுவது அல்லது எஸ் எம் எஸ் அனுப்புவது. கம்பியூட்டரில் ஆன் லைன் கேம்ஸ் விளையாடுவது, facebook போன்ற சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பது. இவைகளை எப்பொழுதாவது செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. இன்னும் கொடுமை தூங்கும் போதும் தலைக்கு அருகே செல்போனை வைத்துக் கொள்வது. 

நான் பள்ளி விடுதியில் படித்தப் பொழுது, சில மாணவர்கள் ஒருநாள் அனுமதியின்றி சினிமாவிற்கு சென்று வந்ததற்கு தலையில் பெட்டியை வைத்துக் கொண்டு விடுதியை சுற்றி வரச் சொன்ன விடுதிக் காப்பாளர் நினைவுக்கு வருகிறார். அந்தக் காப்பாளர் இப்பொழுது பணியில் இருந்தால்,  24 மணி நேரமும் பொழுதை வீணடிக்கும் மாணவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பார்? 

அண்மையில் ஒரு மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், தனது பிள்ளைகள் குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது மகளிடம் "போய் படி" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, " stop mom, i know how to read!" என்று பதில் வந்ததாம். அப்படி, சொன்ன பெண்ணின் வயது ஏழு!

படம் உதவி: கூகிள்.

Saturday, September 24, 2011

பொறுமையை சோதித்த விஜய் டிவி!


நேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்தும் பத்து மணி முதல் குடும்பத்தினருடன் சேர்த்து விட்டேன். 'சூப்பர் சிங்கர் சீனியர் 3' பட்டத்தை யார் பெறப்  போகிறார்கள் என்று அறிவதில் அனைவருக்கும் ஓர் ஆர்வம். ஆளுக்கொரு பெயரை சொல்லி, அவர்தான் வெற்றிப் பெறுவார் என்று குடும்பத்தில் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் போல் தனித்து நின்றோம்.



எனக்கு பத்து மணிக்கு மேல் விழித்திருப்பது மிகவும் கடினமான விஷயம். பதினோரு மணிக்கு அறிவிப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பிறகு, இன்னும் அரை மணி நேரத்தில் அறிவித்து விடுவார்கள் என்று நினைத்து ஒவ்வொரு அரை மணி நேரமும் கடந்துக் கொண்டிருந்தது. கடைசியாக மறுநாள் அதாவது  இன்று   24/9/2011 காலை 1.10 மணியளவில் சாய் சரண் பட்டத்தை வென்றதாக அறிவித்தார்கள். 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது சிறு வயது பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள்தான் அதிகம். மறு நாள் பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல வேண்டிய அவர்கள், இவ்வளவு நேரம் விழித்திருப்பார்களா? அந்த நேரத்தில் போடப்படும் விளம்பரங்கள் மீது வெறுப்புதான் வருகிறது.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் 'விஜய் டிவி' பார்வையாளர்களின் மீதும் அக்கறைக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இது போன்ற பொறுமையை சோதிக்கும் நிகழ்ச்சிகளால், என்னைப் போன்ற சாதாரண ரசிகர்கள் டிவி பார்ப்பதையே நிறுத்தி விடுவார்கள்.

.

Saturday, September 10, 2011

மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம்-முதல்வர் அறிவிப்பு!

இன்றைய நிலையில் ஏழை எளிய மக்களின் நோய் போக்க, அவர்கள் செல்லும் ஒரே இடம் அரசு மருத்துவமனைகளே. அவற்றில் உள்ள மருத்துவர் மற்றும் இதரப் பணியாளர்களின் காலியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட வழி செய்யும் வகையில்  'மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம்' அமைக்கவுள்ள முதல்வர் அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் இன்று  முதலமைச்சர் அளித்த அறிக்கையின் முழு விவரம்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.  நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று ஆகும்.  எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன்.தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் சுகாதார சேவை அளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன.  எஞ்சியுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், விரைவில் மாற்றி அமைக்கப்படும்.  தரம் உயர்த்தப்பட்ட 283 ஆரம்ப சுகாதார நிலையங்களில், முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை, செய்வதற்கான வசதிகள் உள்ளன.  திடீரென்று, அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி கிராமப்புறங்களில் இல்லை. இதனை நீக்கும் வகையில், முதற்கட்டமாக 42 தாய்-சேய் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தும் வசதியுடன் 24 மணி நேரமும் இந்த தாய்-சேய் நல மையங்கள் செயல்படும்.  சுகாதார மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மையம் வீதம் இந்த 42 மையங்கள் அமைக்கப்படும்.மேலும், தொலை தூரத்தில், எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல்நிலை தாய்-சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். முழு நேர சேவை அளிக்கும் வகையில், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும், 3 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர்.  இவ்வாறு, 42 தாய்-சேய் நல மையங்களை அமைப்பதற்கும், 31 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதற்கும், 19 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

கிராமப்புற பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட எனது அரசு, கிராமப்புற பெண்களின் நலனுக்காக புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. கிராமப்புற பெண்கள் இடையே ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளவும், இந்தத் திட்டம் வழி வகுக்கும்.  2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.


மலைப்பகுதிகளில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும், சமவெளிப் பகுதிகளில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும் மத்திய அரசால் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.  இந்த அடிப்படையில், இந்த ஆண்டு, 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.  மேலும், மருத்துவ வசதி குறைவாக உள்ள 38 வட்டாரங்களில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகளுடன், 39 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது.  மருத்துவத் துறையிலும் கணினி பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும்.  நோயாளிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்களுடன் கணினி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நோய்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சிகிச்சை பெறும் வகையில், கணினி வழி உரையாடும் வசதியை நான் எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தினேன்.  தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உயர் மருத்துவ ஆலோசனை கிடைக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.


தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.  


மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை அடிப்படைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் சுமார் 91,600 பணியிடங்கள் உள்ளன.  இவற்றில், தற்போது 15,600-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.  இத்தகைய காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏற்படப் போகும் காலிப் பணியிடங்களை முன் கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை இல்லாதது தான் அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.


இந்த குறைபாட்டை நீக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, “மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம்”, என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள கூடுதல் செயலாளர் இந்தத் தேர்வு வாரியத்தின் தலைவராக இருப்பார்.  மருத்துவத் துறை இணை இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினராகவும்; மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினர்-செயலாளராகவும் இருப்பர். வாரியத்திற்கு தேவையான இதரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவர்.  தேவைப்படும் பணியாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த மருத்துவத் துறை பணியாளர் வாரியம் தேர்வு செய்யும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களையும் இந்த வாரியம் தேர்வு செய்யும்.  


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் தக்க திருத்தம் மேற்கொண்ட பின், மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களும், இந்த தேர்வு வாரியத்தின் மூலமே நிரப்பப்படும்.மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய இது போன்ற தனி வாரியம் அமைக்கப்படுவதால், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும்.

நன்றி-தினமணி.

Friday, September 9, 2011

புரிந்து கொண்டேன்!

அண்மையில் டிவியில் விவேக் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.  நான் கவனித்தப் பொழுது போர்வெல் குறித்து   மக்களிடமும்  அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு வரும் வகையில் காட்சி அமைத்திருந்தார்கள். 'இன்னுமா  போர்வெல் தோண்டுபவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்?' என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் பெயர் தெரியவில்லை.   யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

இந்த செய்தியைப் பார்த்துவிட்டு தொடருவோம்.



நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.  அங்கே
விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

அவனை உயிருடன் மீட்க்கும் முயற்சியில், சிறுவன் சிக்கி இருந்த போர்வெல் குழி அருகே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகலமாக குழி தோண்டப்பட்டது. சிறிது தோண்டிய பின் மண் கடினமாக இருந்ததால் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது. 7 அடி ஆழத்திற்கு பின் கருங்கல் பாறை வந்ததால் மிஷின் மூலம் தோண்ட முடியவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்தது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டிரில்லர் மிஷின்கள் மூலம் குழியின் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. 15 மணி நேரத்திற்கு பின் நள்ளிரவு 12.45 மணிக்கு சிறுவன் சுதர்சன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.



அந்தப் படத்தில் வரும் காட்சியில் விவேக் "போர்வெல் தோண்டும் முன்,  நூற்றி ஐம்பது ரூபாய்க்கு மூடி தயார் செய்து கொண்டு அதன் பிறகு தோண்டலாமே? இனி அதிகாரிகள், மூடி இருந்தால் மட்டுமே தோண்டுவதற்கு  அனுமதி கொடுக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரியான காட்சி அமைத்திருப்பார்கள். (நினைவில் உள்ளதை எழுதியிருக்கிறேன்)


 
'சினிமா மற்றும் பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வதில்லை' என்று என் மனதில் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு, 'சினிமாவைப் பார்த்து யாரும் திருந்த மாட்டார்கள்' என்பதை புரிந்து கொண்டேன். இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால் தானோ  என்னவோ, அதிகளவில் விழிப்புணர்வு செய்திகளுக்கு சினிமாத்துறையினரும் ஊடகங்களும் முக்கியத்துவம் தருவதில்லை!


இந்த செய்தி  குறித்து முழுமையாக அறிய மாலை மலர்  படிக்கவும்.


.


Friday, September 2, 2011

செத்தப் பாம்பை அடிக்காதீங்க!

கடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும்  பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே!  ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்திதான் அது. இதிலென்ன இருக்கிறது, தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போடுவதுதானே சரி என்பவர்கள் மட்டும் அவசியம்  தொடர்ந்து  படியுங்கள்.

 இங்கு  அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விவாதிப்பதற்கு  நான் முயலவில்லை. சராசரி மனிதனின்  மனதில்  இந்த விவகாரம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் இதோ..

''தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.'

-  இப்படிக்கு தோழர் செங்கொடி.


செங்கொடி பற்றி மக்கள் மன்ற அமைப்பாளர்கள் "சிறு வயது முதல் தங்கள் அமைப்பில் இணைந்து, ஈழத் தமிழர் போராட்டம், காஞ்சி மக்கள் போராட்டம் என பலவற்றில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்" என்கின்றனர். 

இப்படி பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு அனுப்பி விட்டு பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவரின் மனநிலையும், அவர்களின் குடும்பத்தாரின் மனநிலையும்,  ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அதனால் தான் மேலே குறிப்பிட்ட சோகம் என்னை வாட்டி வதைத்தது. குறிப்பாக, சுனாமி  நாகையை தாக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்த பொழுது, பகல் முழுவதும் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவிட்டு, இரவில் தொலைக்காட்சியில் அந்த காட்சியைக் காணும் பொழுது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தோடும். அது மாதிரியான நிலைக்கு அற்புதம்மாளின் கெஞ்சலும் செங்கொடியின் மரணமும்  மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்தின் எழுச்சியும் என்னை இட்டுச் சென்றுள்ளது.

பொதுவாகவே வழக்கறிஞர்கள்  போராட்டம் செய்வதை நான் விரும்புவதில்லை. ஏனெனில், ஏன்  இவர்கள் போராடுகிறார்கள்.  நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டியது தானே? என்ற கேள்வி என்னுள் எழுவதால். ஆனால், அவர்கள் இப்பொழுது நடத்தி வருகின்ற போராட்டம் நியாயமானதாக தோன்றியது.


 சென்னை  உயர் நீதிமன்றத்தின்  எட்டு வாரத் தடையும், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் பார்க்கும் பொழுது மூவருக்கும் தண்டனைக் குறைப்பு கிடைக்கும் போல் தோன்றுகிறது.
சரி, அப்படி என்ன இந்த மூன்று பேரின் உயிரைக்காப்பற்ற  இப்படி அக்கறையாக எல்லோரும் போராடுகிறார்களே என்ன காரணம்? என்று சிந்தித்தால் கிடைப்பது... 




இந்தப் படுகொலைக்கு காராணமாக சொல்லப்படும் விடுதலைப்புலி அமைப்பு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதும். முக்கிய குற்றவாளிகள் படுகொலை நடந்த சமயத்திலேயே கொல்லப்பட்டு விட்டதும். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதும். சம்பத்தப்பட்டவர்கள் பல வருடங்களாக   சிறையில் உள்ளதும். குற்றவாளிள் முழு அளவில் தண்டனைப் பெற்று  விட்டதாகவே மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.




இப்பொழுது, இந்த கொலை சம்பவத்தில் விசரிக்கப்பட்டவர்களும் விசாரணை செய்தவர்களும் வெளியுடும் தகவல்களும். மேலும் , ராஜபட்சேவால்  பல்லாயிரக் கணக்கான  ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதும்.  பல்லாயிரம் பேர் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடப்பதும்.  இப்படி பலவாறாக துன்பத்தை கண்டு  துவண்டு போயிருக்கும் தமிழர்களின் மனதில், இந்த மூவரின் உயிர்  மீதும் கருணை ஏற்படுவது இயற்கையே. 

 



எங்கள் கிராமத்தில் வயல்களுக்கு, அதாவது காடுகளுக்கு நடுவே வீடுகள் அமைத்திருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டை சுற்றி பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எங்கள் தாத்தா பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்று விடுவார். அப்படி அவர் பாம்பு அடிப்பதை, ஒருவித பயத்தோடு  பார்த்துக் கொண்டிருக்கும் நானும் எனது தம்பிகளும், அவர் அடித்துப் போட்டப் பாம்பை  ஆளுக்கொரு குச்சியை வைத்துக் கொண்டு 
அடிப்போம். அப்படி நாங்கள் அடிப்பதைப் பார்த்து எங்கள் தாத்தா சொல்லவார். " செத்தப் பாம்பை அடிக்காதீங்க!" என்பார். செத்தப் பாம்பின் மீது கருணையின் காரணமாகவோ, அல்லது  செத்தப் பாம்பிடம் உனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதற்காகவோ  சொல்லியிருப்பாரா  என்று  அதன் அர்த்தம் இன்றளவும் புரியவில்லை. 

எது எப்படியோ, 'செத்தப் பாம்பை அடிப்பது தர்மம் அல்ல!' என்பது மட்டும் புரிகிறது!

.

Friday, August 12, 2011

சொல்வதற்கு ஒன்றுமில்லை - 12/8/11

சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு, 25 முக்கியக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.

அந்த 25 காரணங்கள் என்ன என்று காண்போம்.
அவை வருமாறு:

1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.

2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.

3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.

4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.

5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.

6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள், தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்கக் கூடாது.

7.தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.

11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படிபட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடிக்க ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.

13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.

14. சமச்சீர் கல்வி சட்டம் 2010- உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.

15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.

16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாததாகிவிடும்.

17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.

19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த அரசு சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.

20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.

21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது, அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.

22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10ம் வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 -2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நம்பிக்கையை அரசு பாழடித்துள்ளது.

23. சமச்சீர் கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்தியிருக்க வேண்டும்.

24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.

25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.

என 25 காரணங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்- கல்வி மலர்.

Wednesday, July 27, 2011

சொல்வதற்கு ஒன்றுமில்லை - புதிய முயற்சி!



இனி வரும் காலங்களில், 'சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்கிற தலைப்பில், நான் அறிய வரும் செய்திகளில், என்னுடைய மனதில் மகிழ்ச்சி, சோகம், கோபம் மற்றும் அவமானம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்தும் செய்திகளை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளேன். இதில் முக்கியம் என்னவென்றால், என் மனதில் என்ன தோன்றியது என்பதை குறிப்பிடப் போவதில்லை. அது உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

1, சமச்சீர் கல்வி வழக்கில் இன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசின் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் ‌பி.‌பி.ரா‌வ், "க‌ல்‌வி, ச‌ட்ட‌த்துறை‌யி‌ல் த‌மிழக அரசு‌க்கு உரிய ஆலோசனைகளை வழ‌ங்க தகு‌தியான நப‌ர்க‌ள் இ‌ல்லை" எ‌ன்றா‌ர்.



2, விழு‌ப்புர‌த்‌தி‌ல் பா‌லிடெ‌‌க்‌‌னி‌க் மாணவரை அடி‌த்து‌க் கொ‌ன்ற ஆ‌சி‌ரிய‌‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.


3, "சுவிஸ் வங்கிகளில், பணம் சேமித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டுக்கு அளிக்கப்படும்' என, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.


4, தனது சொத்துகள் குறித்து சிபிஐ விசாரிக்கக்கூடாது என்று தடைகோரிய ஜகன்மோகன் ரெட்டியின் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.


5,
தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., புதிய அணி அமைத்து போட்டியிட பா.ம.க., பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


6, சென்னை புறநகர் பகுதியில் மழை.

.

Saturday, July 23, 2011

இனி புதிய உற்சாகத்துடன்...!

கடந்த சில வாரங்களாக சரிவர என்னால் எழுத முடியவில்லை. வேலை ஒரு காரணம் என்றாலும், இதே வேலையின் இடையேதான் இத்தனை நாளும் எழுதி வந்தேன். இந்த நிலையில், ஒரு உண்மை இப்பொழுதான் புரிந்தது. அது தமிழ்மணம் திரட்டியின் பங்கு!

இது, எதோ எனக்கு மட்டும் நிகழ்ந்ததாக நான் நினைக்கவில்லை. தமிழ் வலைப்பதிவர்கள் பலருக்கும் இப்படி ஒரு சோர்வு வந்திருக்கலாம். இனி, புதிய உற்சாகத்தோடு பதிவர்கள் சிறந்த படைப்புகளை தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு தருவார்கள்.

தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பையும் படித்து முடிந்தவர்கள் உதவலாமே!

Tuesday, July 5, 2011

கு.க. அறுவை சிகிச்சைக்கு கார் பரிசு!


குடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை. நேற்று நான் படித்து செய்தி, எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. அது என்னவெனில், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் நானோ கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மோட்டார் சைக்கிள், டிவி செட்டுகள், மிக்சி வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.



அவசரப்படாதீங்க, இது தமிழ்நாட்ல இல்ல. ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜுனு மாவட்ட சுகாதார துறை அலுவலகம்தான் இப்படி அறிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய செய்தி. இன்னும், இருபது ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கையில் நாம் சீனா-வை முந்தி விடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட, இதுல மட்டுமாவது உலகத்தில் முதலிடம் பிடிக்கலாம்ன்னு பார்த்தா, அதுக்கும் விடமாட்டாங்க போலிருக்கேன்னு உங்க மனசு சொல்லுதா?

இன்று எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம், எதற்கெடுத்தாலும் அடிபிடி என்கிற சூழ்நிலை. பேருந்து, தொடர் வண்டி, பெட்டிக்கடை முதல் பெரியக் கடைகள் வரை, எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம். இது மேலும் அசுர வேகத்தில் வளராமல் இருக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முந்தைய அரசு குழந்தைப் பெற்றுக் கொண்டால் ஆறாயிரம் ரூபாய்க் கொடுத்தது. ஆனால், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு சொற்பத் தொகையே சன்மானமாகக் கொடுக்கப்படுகிறது.

ஆண்களுக்கான அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானது, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால், வாசெக்டமி செய்து கொள்ளும் ஆண்களுக்கு, குறைந்தப் பட்சம் பத்தாயிரம் ரூபாய்க் கொடுக்கலாம். இது பெண்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை வழங்கலாம். பெண்களின் மீது அக்கறை உள்ள அரசு என்பதால், தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் இப்படி ஒரு புரட்சிக்கரமான திட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவைப் பாருங்கள்

திருந்தவே மாட்டார்களா?!

மக்கள் பெருக்கத்தின் அபாயம் புரியும்.





Monday, July 4, 2011

பொறியியல் கலந்தாய்வு - ஓர் அவசர ஆலோசனை!

ஜூலை முதல் மற்றும் இரண்டாம் தேதி நடந்த மருத்துவ கலந்தாய்வில் அழைக்கப்பட்ட அனைவரும் (இரண்டு மூன்று பேரைத் தவிர்த்து) மருத்துவக் கல்வி பயில இடம் பிடித்துள்ளார்கள். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதில் எத்தனைப் பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார்கள் என்பது இப்பொழுது தெரியாது. இவர்களில் பெரும் பகுதியினர் பொறியியல் படிப்பிலும், தரப் பட்டியலில் முன்னிலையில் இருப்பார்கள் என்பதை அறிவோம். இன்று மருத்துவக்கல்வியைத் தேர்ந்தெடுத்தவர்களில் எத்தனைப்பேர், இதை உதறிவிட்டு பொறியியல் பக்கம் செல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னுடைய கணிப்பு, ஒரு சிலர் மட்டுமே பொறியியல் பக்கம் செல்வார்கள் என்று நம்புகிறேன்.




மருத்துவக்கல்வியைப் பொறுத்துவரை கல்லூரிகளும் இடங்களும் குறைவு. மேலும், எம்.பி.பி.எஸ். என்ற ஒரே படிப்புதான். அதனால், கலந்தாய்வு அவ்வளவு சிக்கலானது கிடையாது. ஆனால், எஞ்சினியரிங் படிப்பு அப்படிக் கிடையாது. இடங்கள், கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஏராளம். மேலும், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சிக்கலான ஒன்று. இதில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம், என்ன படிக்கப் போகிறோம், என்ன மாதிரி வேலையில் சேர வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் தெளிந்த அறிவு இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

இங்கு ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர், படிப்பறிவும் குறைவு, அவ்வளவாக பொருளாதாரமும் இல்லாதவர். அவர் மகன் +2 -வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். அந்த மாணவன் தற்பொழுது கணினி அறிவியல் படாப்பிரிவில் பொறியியல் படித்து வருகிறார். அந்த மாணவனின் தந்தையை அண்மையில் சந்தித்தேன். அவரிடம், மகனின் படிப்புக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்,"சரியா படிக்க மாட்டேங்கிறான், அவனுக்கு பிடிச்ச படிப்பில் சேர்த்திருந்தால் நன்றாக படிச்சிருப்பான்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, கவுன்சிலிங் அழைத்துச் சென்ற உறவினர், அந்த மாணவனின் விருப்பமான மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு பதிலாக கம்பியூட்டர் எடுக்க சொல்லியிருக்கிறார். மாணவனும் அந்த நேரத்தில் தலையாட்டிவிட்டு, பிறகு எனக்கு அந்தப் படிப்பில் விருப்பமில்லை என்று சொன்னால், யார் வாழ்க்கை வீணாகிறது பாருங்கள்.

சரி, விரும்பாத பாடமாக இருந்தாலும் சேர்ந்து விட்டோம். இனி சிறப்பாக படித்து, நாமும் நம் குடும்பமும் முன்னேற பாடுபடுவோம் என்று நினைக்காமல், சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம், தனக்கு பிடிக்காத படிப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதில், சொத்தை விற்று, வங்கியில் கடன் வாங்கி கஷ்டப்படும் அந்த அப்பாவி தந்தையின் பங்கு என்ன? ஒரு கிராமத்தில் ஏழை வீட்டில் பிறந்த மாணவனே இப்படி நடந்துக் கொள்ளும் பொழுது, நடுத்தர மற்றும் பணக்கார வீட்டு பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தட்டுத் தவறி கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரவேண்டும், எந்தப் பாடப் பிரிவில் சேரவேண்டும் என்று ஆலோசனை சொல்லி விடாதீர்கள். அப்புறம் நீங்கள்தான் அவர்களின் படிப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு காரணம், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கே, அதாங்க முகநூல்(facebook), செல் போன் மூலம் நேரம் போதவில்லை. சினிமா, பர்த்டே பார்ட்டி (நாற்பது மாணவர்கள் வகுப்பில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். வருடத்தில் நாற்பது நாள் பர்த்டே பார்ட்டிக் கொண்டாடுவதில் போய்விடுகிறது) இவை எல்லாவற்றையும் விட ஆன்லையன் கேம்ஸ் அதிக நேரத்தை விழிங்கி விடுகிறது. இவையெல்லாம் போக நேரம் கிடைத்தால் படிப்பு என்கிற சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய தரப்பை நியாயப்படுத்த ஒரு காரணம் தேடுவார்கள். அந்தக் காரணம் எனக்குப் பிடிக்காதப் படிப்பு அல்லது கல்லூரி என்பதாக இருக்கும்.

அது சரி, "எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம், எந்தக் கல்லூரி நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று யாராவது கேட்டால், முதலில் உங்கள் விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதற்கு தகுந்தபடி ஆலோசனை சொன்னால், நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் தினந்தோறும் கவுன்சிலிங் பற்றிய விபரங்களைப் பார்த்து வந்தால், அவர்களுக்கு வரும் ஆண்டில் குழப்பங்கள் குறையலாம். எனக்குத் தெறித்த 'நிறைய படித்த' நண்பர் என்னிடம் கேட்டார், "கட் ஆப் மதிப்பெண் எப்படிக் கணக்கிடுகிறார்கள்?" இவராவது பரவாயில்லை. எனது இன்னொரு நண்பர் சொன்னார், "அப்பிளிகேஷன் நம்பர் படியும், ரேங் போடுவார்கள்" என்றார்.

படம் உதவி: கூகிள்.

Wednesday, June 15, 2011

பின் தொடரும் வியாதி!



தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த வியாதி அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கு, உதாரணம் தொலைக் காட்சித் தொடர்களில் முதல் நாள் முடிந்த நிகழ்வின் தொடர்ச்சியை அறிய மறுநாள் ஆவலுடன் காத்திரும் மக்களே சாட்சி.

முன்பெல்லாம், உறவினர்கள் வெளியூருக்குச் சென்றால் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்துவிட்டு, நம்முடைய வேலையைப் பார்ப்போம். பிறகு, ஒரு வாரம் கழித்து அவர்களிடமிருந்து 'நல்ல படியாக, ஊர் வந்து சேர்ந்தோம்' என்று ஒரு கடிதம் வரும். ஆனால், இன்று நிலைமை வேறு. வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் நாம் அறிய விரும்புகிறோம். பஸ் கிடைத்ததா, வழியில் சாப்பிட்டார்களா, எப்பொழுது வீடு போய் சேர்ந்தார்கள்? போன்ற விபரங்களை அறிந்து கொள்ள நமது மனது ஆசைப்படுகிறது. அதனால், செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை.

மற்றவர்களின், ஒவ்வொரு அசைவையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். உதாரணமாக, நாம் தொடர்ந்து படித்து வரும் பிளாக்கர், ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ புதிய பதிவுகளிடவில்லை என்றால் அவருக்கு என்ன ஆச்சு? உடல் நலமில்லையோ அல்லது குடும்பத்தில் எவருக்கேனும் பிரச்சினையோ என்பது போன்ற எண்ணங்கள் வந்துவிடுகிறது.

எப்பொழுதோ, உறவினர் போட்டித் தேர்வு எழுதியிருப்பார். அவர் எழுதிய தேர்வை அவரே மறந்திருப்பார். ஆனால், நாம் நினைவு வைத்திருந்து முடிவு என்னாச்சு? என்று அறிய ஆவலோடு தொடர்பு கொள்வோம்.

இது, மற்றவர்கள் மீது உள்ள அக்கறையா அல்லது அடுத்தவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமா? என்று எனக்குப் புரியவில்லை.

Friday, June 3, 2011

உங்கள் வீட்டில் எப்படி?

எனது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் பொழுது, நான் கவனிக்கும் விஷயம். அவர்கள் வீட்டில் சுவற்றில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் மணிப் பார்த்தால் சம்பந்தமில்லாமல் இருக்கும். "என்ன இப்படி?" என்று கேட்டால். உடனே, அவர்கள் சொல்வது "நாங்கள் பதினைந்து நிமிஷம் பாஸ்ட்டா வச்சிருக்கோம்" என்பார்கள்.இன்னும் சிலரோ "முப்பது நிமிஷம் பாஸ்ட்டா வச்சிருக்கோம்" என்பார்கள். அதற்கு, அவர்கள் சொல்லும் காரணம் "வேலைக்கு போக நேரமாகிவிடும் என்பதால், இப்படி" என்பார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, எனக்கு பழைய நினைவுகள் வந்ததன் விளைவே இந்தப் பதிவு.

எனது சிறு வயதில் வயல்களில் வேலைப் பார்ப்பவர்கள், நிழலை வைத்து நேரம் கணிப்பார்கள். இன்னும் சிலரோ சூரியனின் உயரத்தை வைத்து, நேரத்தைக் கணிப்பார்கள். காலையில் சேவல் கூவுவதுக் கூட நேரம் கணிக்கவும், காலையில் எழும்புவதற்கு அலாரமாகவும் எங்கள் கிராமத்தில் பயன்பட்டது.

நானும், மற்றவர்களுக்கு நேரம் கணிக்கும் உபகரணமாக இருந்திருக்கிறேன். அது என்னவென்றால், பள்ளியிலிருந்து மதியம் சாப்பிட வீட்டிற்கு வயல்வெளிகள் வழியே வருவேன். அப்பொழுது மதியம் ஒரு மணி என்று அறிந்துக் கொள்வார்கள். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது மாலை ஐந்து மணி என்று கணித்து வேலையை முடித்துக் கொள்வார்கள். இதை எங்கள் அப்பாவிடம், அவர்கள் சொல்லியதால் நான் அறிந்தேன்.

நான் பத்தாம் வகுப்பு படித்த பொழுது அப்பா ஒரு கடிகாரம் வாங்கிக் கொடுத்தார். அது ஆட்டோமேட்டிக் வாட்ச். அதைக் கட்டிக்கொண்டு கையை அசைக்காமல், பல நாட்கள் நடந்து சென்றது வேறு விஷயம். அந்தக் கடிகாரம், நாள் ஒன்றுக்கு ஒரு நிமிடம் கூடுதலாக் காண்பிக்கும். பத்து நாட்கள் அட்ஜஸ்ட் செய்யாவிட்டால் பத்து நிமிடம் கூடுதலாக காட்டும். இது, எனக்கு மிகவும் மனவேதனையைக் கொடுக்கும் விஷயமாக இருந்தது. கண்ணில் படும் கடிகாரம் சர்வீஸ் செய்யும் அனைவரிடமும் எனது கடிகாரத்தை சரி செய்யக் கொடுப்பேன், அவர்களும் ஏதோ அட்ஜஸ்ட் செய்து தருவார்கள். ஆனால், மீண்டும் அதே பிரச்சினைதான். சிலர் ரொம்பக் கூடுதலாக அட்ஜஸ்ட் செய்து விட்டார்கள் என்றால். தினம் ஒரு நிமிடம் குறைவாகக் காட்டும்.

1999 -ல் டிஜிட்டல் வாட்ச் கிடைக்கும் வரை(தம்பி கொடுக்கும் வரை) இதே பிரச்சினையைச் சந்தித்தேன். குவார்ட்ஸ் கடிகாரம் வந்தப் பிறகு எனக்குப் பிரச்சினைக் கிடையாது. ஆனால், அதன் பிறகும் கூட நிமிடம் மட்டுமல்லாது, வினாடி கூட துல்லியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். டி.வி.யில் நீயூஸ் போடும் முன்பு நேரம் போடுவார்களே, அதைப் பார்த்து சரி செய்வேன்.

என்னைப் பொறுத்த வரை, கடிகாரம் என்பது துல்லியமாக நேரத்தைக் காட்ட வேண்டும். இன்றும் கூட நான் வேலை செய்யும் அலுவலகத்தில், உயரத்தில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை சிரமப்பட்டு எடுத்து நேரத்தை சரி செய்து வைத்தால். சில நாட்களில், நண்பர்கள் அதே சிரமத்தைப்பட்டு மீண்டும் நேரத்தை ஐந்து நிமிடம் கூடுதலாக மாற்றியிருப்பார்கள்.

அது சரி, உங்கள் வீட்டில் எப்படி?

Friday, May 27, 2011

இது முடிவல்ல ஆரம்பம்...!

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் "பாஸா?" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது "எத்தனை மார்க்?" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.

இந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.

சிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.

எனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே!



Wednesday, May 25, 2011

கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!



+2 தேர்வு முடிவு வந்து எல்லோரும் கல்லூரியில் சேரும் நேரம். இப்பொழுது, மாணவர்களும் பெற்றோரும் மேற்கொண்டு எந்த படிப்பில் சேர்வது என்பதில் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கடைசியில் ஒருவாழியாக தனக்குப் பிடித்த, தனது பெற்றோருக்குப் பிடித்த அல்லது தனது நண்பர்கள் சேருகின்ற ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அப்பாடா, ஒரு வழியா பிள்ளையை கல்லூரியில் சேர்த்தாகிவிட்டது. இனி கவலையில்லை. பணம் மட்டும் கட்டினால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்தால். அப்பொழுதான் வரும் பிரச்சினை. கல்லூரியிலிருந்து வந்து "எனக்கு, இந்த படிப்பு பிடிக்கவில்லை" என்பார்கள். பெற்றோருக்கு மிளகாயைக் கடித்த மாதிரி இருக்கும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல. இன்று அதிகளவில், என் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடப்பதால்தான் இந்தப் பதிவு. சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

எனது நண்பரின் மகன் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS முதலாமாண்டு தேர்வில் வெற்றிப் பெற்ற பிறகு, தனக்கு படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவர்கள் தனியாகவும், நண்பர்கள் மூலமும் எடுத்துச் சொல்லியும், அந்த மாணவர் கேட்கவில்லை. பிறகு, அவர் விருப்பப் படியே B.Sc. (nautical science)-ல் சேர்ந்து படித்து, இப்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இன்னொரு நண்பர் மிகப் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் மிகச் சிரமப்பட்டு சேர்த்து விட்டார். அந்தப் பெண்ணும் ஒரு வருடம் கூடப் படிக்கவில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய சூழ்நிலை வந்து வந்துவிட்டது.

இன்னொரு மாணவனும் இதே நிலை வந்தது. படிப்பு பாதியில் நின்று விட்டது. இப்பொழுது வேறு கல்லூரியில் இடம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நண்பரின் மகன் +1 யில் சேரும் பொழுது கணினி அறிவியல் பாடம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தப் பிறகு, "நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். என்னை அறிவியல் பிரிவில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் என் வாழ்வே பாழாகிவிடும்" என்றான். அவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மீண்டும் மறு வருடம் +1 யில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாணவன் தான் விரும்பிய B.Tech(IT) யில் சேர்ந்து முதலாமாண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்டது இன்னும் சோகம்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம். இதிலெல்லாம் மற்ற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவேதான், அரசு இந்த வருடம் முதல், எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.. விரிவாக அறிய தினமணி பார்க்கவும்.

இது மட்டும் இவர்களைத் திருத்தி விடுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில், மேற்கண்ட உதாரணத்தில் ஏகப்பட்ட பணத்தை இழந்த பிறகுதான், அந்த மாணவர்களும் பெற்றோரும் வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கல்லூரியில் சேரும் முன்பு, நாம் சேருகிற படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவைகளை நன்கு ஆராய்ந்து. அதன் பிறகு, ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!

Wednesday, May 18, 2011

தமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்!



அண்மையில் வெளிடப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வில், இந்தியா அளவில் முதலிடம் பெற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த, செல்வி திவ்யதர்ஷினி அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (தமிழகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம் அறிய பார்க்க: தினமணி)

இவர், சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உள்ள 'சீர்மிகு சட்டப் பள்ளி' யில் (SCHOOL OF EXCELLENCE IN LAW) பி.ஏ.,பி.எல்., (ஹானர்ஸ்) முடித்தவர் என்ற தகவல், மகிழ்ச்சியான ஒன்று. ஏனென்றால், 2002 ஆம் ஆண்டு இந்தியா அளவில், தமிழகத்தில் மிகச் சிறந்த சட்ட வல்லுனர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில், முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்பொழுது விதைக்கப்பட்டது இப்பொழுதான் அறுக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.


+2 தேர்வு முடிவு வந்திருக்கும் நிலையில், இந்தச் செய்தி பல்வேறு சிறந்த மாணவர்களை சட்டக்கல்வி பக்கம், திரும்பிப் பார்க்க வைக்கும் என்று நம்புவோம்.

எனக்குத்
தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், யாரும் சட்டக்கல்வி பயில விரும்புவதில்லை. காரணம் கேட்டால், "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களிடம் ஒழுக்கம் இருக்காது. அடாவடியாக நடந்து கொள்வார்கள். நல்ல மாணவர்கள் கூட கெட்டு போய்விடுவார்கள்" என்பார்கள்.

'அமைதி விரும்பி' 2006 ஆம் வருடம் 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போதும், இன்ஜினியரிங் அல்லது மருத்துவக்கல்வியில் சேர்க்காமல், சட்டக் கல்வியில் சேர்த்தோம். அப்பொழுதெல்லாம், இந்தளவுக்கு இந்த சட்டப்பள்ளி பலரால் அறியப்படவில்லை.

நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் "அமைதியை, சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "ஏதோ பிரைவேட் காலேஜ் போல, நீங்க கவர்மென்ட் காலேஜ்ல சேர்த்திருக்கலாமே?" என்றார்.

சட்டப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது 2002 -ல், நான் சொன்னது 2006 - ல். ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள வழக்கறிஞரிடமே, இந்தக் கல்விநிறுவனம் பற்றி என்னால் புரிய வைக்க முடியவில்லை. பிறகு, எனது உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி புரிய வைக்க முடியும். ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்கள் என் செயலை பைத்தியக்காரத் தனமாகவே நினைத்தார்கள். இவையெல்லாம், ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நம்மிடையே சட்டக்கல்விக் குறித்த விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

இடையில் 2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை வேறு, சட்டப்படிப்பை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. கடந்த வருடம், ஐந்தாண்டு பி.எல். படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சொச்சமே! இங்கே பார்க்கவும்.

கொடுமை என்னவென்றால் 70, 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துவிட்டு வேலையில்லாமல் சங்கடப்படுகிறார்கள். சட்டக்கல்வி ஒரு தொழிற்கல்வி என்பதே பலருக்குப் புரிவதில்லை. மேலும் கட்டணமும் மிக மிகக் குறைவு என்பது, இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

இன்றும் கூட சட்டக்கல்வி பயின்றால் 'கோர்ட்டில் நீட்டி முழங்கி வசனம் போல் பேச வேண்டும்' என்று நினைப்பவர்களே அதிகம். இது சினிமாக் காட்சிகளால் வந்தப் பாதிப்பு! கோர்ட்டுக்கு செல்லாமல் எண்ணற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம். அது குறித்து 'வீடுதிரும்பல்' திரு மோகன்குமார் சார் விரைவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனியாவது சட்டக்கல்வியின் மேன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, தலை சிறந்த மாணவர்களை சட்டக்கல்விப் பக்கம் திருப்பி விட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது.

அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். 044 - 24641212 / 24641919. மேலும், தகவல் அறிய http://www.tndalu.ac.in/

2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!




படம் உதவி: கூகிள் & அமைதி விரும்பி.

திருந்தவே மாட்டார்களா?!

மக்களிடம் பொறுமையோ புத்திசாலித்தனமோ இல்லை என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் கீழே உள்ளன. படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல, நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.(நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை)//

//2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(நன்றி: தினமணி)//


என்ன கொடுமைப் பாருங்கள் காலை மூன்று மணிக்கு விண்ணப்பம் வாங்குமிடத்தில் இருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. முதலில் விண்ணப்பம் வாங்குபவர்களுக்கு, ஏதாவது முன்னுரிமை உண்டென்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? ஏன் இப்படி சொல்கிறேனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் தனது மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முதல் நாளே விண்ணப்பம் வாங்க வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் "விண்ணப்பத்தில் உள்ள நம்பரை வைத்துதான் தர வரிசை போடுவார்கள்" என்றார். பிறகு நான் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அவர் சமாதானம் ஆகவில்லை என்பது வேறு கதை.

அனைவருக்கும் நிச்சயம் விண்ணப்பம் கிடைக்கும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிகளவில் படிக்கப்போவது கணினித் துறை சார்ந்தப் படிப்பாகத்தான் இருக்கும். இவர்களுக்கே கணினியைப் பயன்படுத்தி நேரம், பொருளாதாரம் போன்றவைகளை மிச்சம் செய்ய வேண்டுமென்கிற நோக்கம் இல்லை. 31/05/11 அன்று வரை நேரடியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்க 3/06/11 அன்றும் கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2011/

இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கையில், இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விண்ணப்பம் வாங்க வேண்டிய அவசியமென்ன?

எல்.கே.ஜி. சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க விடிய விடிய வரிசையில் நின்ற மக்கள் என்று பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம். அந்தக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தரக்குறைவாக நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)

இதையெல்லாம் சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மேல், இது குறித்து எழுத மனசு வரவில்லை.
இவர்கள் திருந்த, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?


Tuesday, May 17, 2011

இது நல்ல (ஏ)மாற்றம்...!



இந்த வருட தேர்தல் ஆரம்பித்ததிலிருந்து ஏமாற்றமும் மாற்றமும் நிறைய நிகழ்ந்துள்ளது . அப்படி என்னதான் நடந்தது என்று சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

முதலில் தேர்தல் தேதி. குறைந்த நாட்கள் இடைவெளியில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டவுடன், எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால், குறைந்த நாட்கள் என்பதால் மக்களின் அன்றாட வாழ்விற்கு இடையுறு ஏற்படாமலும், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் குறைந்த உழைப்பிலும் தேர்தல் முடிந்தது நல்ல மாற்றமாக அமைந்தது.

பணத்தை செலவழித்து வெற்றிப் பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ஏமாற்றம் தந்தது. ஆனால், இந்தக் கெடுபிடிகளால் தேர்தலில் வீண் ஆடம்பரம், கட் அவுட், ஒளிப் பெருக்கிகளின் இரைச்சல், மின்சார இழப்பு (முன்பெல்லாம் தெருவுக்கு தெரு உயர் கோபுர விளக்குகள் அமைத்து மின்சாரத்தை வீணடிப்பார்கள்) வாகனங்களின் அணிவகுப்பு, சுவர் விளம்பரம், வேட்பாளர்களின் செலவு போன்றவைகள் குறைந்தது போன்றவைகள் நல்ல மாற்றம்.

தேர்தல் நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட நாட்கள் அதிகமாக இருந்தது ஏமாற்றம். ஆனால், அதிக நாட்கள் இருந்தக் காரணத்தால், வாக்கு எண்ணிக்கையின் பொழுது விரிவான ஏற்பாடு செய்வதற்கு அவகாசம் கிடைத்தது. தேர்தலுக்கு பின்பு வரும் சண்டை சச்சரவு குறைந்தது. இது நல்ல மாற்றம்.

தேர்தல் கணிப்பு வெளியிட்ட பெரும்பகுதியினரின் கணிப்புக்கு கிடைத்து ஏமாற்றம் . ஆனால், கடந்தத் தேர்தலில் நடந்தது போல் அல்லாமல் பெரும்பான்மை அரசு அமைந்தது நல்ல மாற்றம்.

தேர்தல் முடிவுக்கு பிறகு, இருப்பத்தி ஏழு அமைச்சர்கள்தான் பதவி ஏற்பார்கள் என்று ஆருடம் சொன்னவர்களுக்கு ஏமாற்றம். ஆனால், ஒன்பதாம் எண் மட்டுமல்ல எல்லா எண்ணும் ராசிதான் என்று முதலமைச்சர் நிறுபித்தது நல்ல மாற்றம்.

ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் அதிகளவில் அமைச்சர்களாவார்கள் என்று ஆளாளுக்கு ஒரு பட்டியல் சொன்னவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம். ஆனால், புதியவர்கள் பலரை அமைச்சர்களாக நியமித்து. நம் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவினர் போன்றத் தோற்றத்தில் எளிமையாக அவர்கள் இருப்பது தமிழக அரசியலில் ஏற்பட்ட நல்ல மாற்றம்.

கம்னியுஸ்ட்களும் பி.ஜே.பி. தலைவர்களும் எதிரிகள் என்பவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம். ஏனெனில், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திரு மோடியும் திரு ராஜாவும் அருகருகே அமர்ந்து பேசியது இந்திய அரசியலில் நல்ல மாற்றம்.

இப்படியே தேர்தல் குறித்து, இன்னும் நிறைய எழுதுவேன் என்று நினைப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம். ஏனெனில், இனி இப்போதைக்கு தேர்தல் மற்றும் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்ற முடிவை நான் எடுத்திருப்பது நல்ல மாற்றம் தானே?!

.




Saturday, May 14, 2011

ஏமாற்றிப் பெற்ற வெற்றி!


இந்தத் தேர்தல் முடிவு யார் எதிர்ப்பார்த்தார்களோ இல்லையோ , இவ்வளவு பெரிய வெற்றியை தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. காரணம் தமிழக மக்கள் இப்படி தடாலடியாக மாறுவார்கள் என்று நம்பவில்லை. அந்தப் பயத்தில்தான் ஏகப்பட்ட விழிப்புணர்வு பதிவுகளைப் போட்டேன்.

இந்த வெற்றிக் குறித்தும், திமுக கூட்டணியின் தோல்விக் குறித்தும் அலசி ஆராய்வது அரசியல் வல்லுனர்களின் வேலை. அதை நாம் கையிலெடுக்க வேண்டாம்.

இந்தத் தேர்தலில் எனது பதிவுகளுக்கு கிடைத்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதை மட்டும் இங்கு பார்க்கலாம்.
அப்படி எனது பதிவுக்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம். பிறரை எப்படி ஏமாற்றுவது என்று நான் கற்றுக் கொண்ட தந்திரம்தான் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை.

தேர்தல் குறித்து நான் எதுதிய பதிவுகளை முதலில் பார்ப்போம்.

நான் எழுதியவைகளிருந்து, மாதிரிக்கு சில செய்திகளை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன். முழுவதும் அறிய அந்தந்த பதிவுகளுக்கு சென்று படிக்கவும்.

வரிசைப்படி தேதி வாரியாக...


யாருக்கு என் ஒட்டு!

//இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.//

இலவச அறிவிப்புத்தான் தெரியுமே உங்களுக்கு.



தேர்தல் தேதியும் விளைவுகளும்!

//அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.//


தப்பித்துக் கொண்டார்கள் தானே!


அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!

//எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.//

இப்படி நான் எழுதக் காரணம். இது ஒரு விழிப்புணர்வு பதிவு என்கிற மாதிரி எழுதினேன். ஆனால், இப்பொழுது ஜாதியக் கட்சிகளும், பிரபலமான சின்னம் கொண்ட கட்சிகளும் வெற்றிப் பெறவில்லை. அதே நேரம் சுயேட்சைகள் வெற்றிப் பெற முடியாது என்பதும் என் கணிப்பே.


விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

//நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//

இப்ப பாருங்க அமோகமா ஜெயிச்சிருக்கிறார். எப்படி, நான் சொன்னது சரிதானே?

//விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//

உண்மைதானே? களைகளைச் சரியாகப் பறித்து விட்டார்கள் தானே!


என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

//மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.//

இது உண்மையாகவே தோன்றுகிறது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு இன்றளவில் ஒரு பிரச்சினையுமில்லை.

//ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.//

இதுவும் உண்மைதானே?! அப்படித்தானே நடந்தது?



சரி, தலைப்புக்கு வருவோம்....
தேர்தல் பதிவுகளைத் தவிர்த்து, இதுவரை நான் எழுதிய பிற பதிவுகளை, பத்து இருபது பேருக்கு மேல் படிக்க மாட்டார்கள். ஆனால், என்னுடைய தேர்தல் பதிவுகளை ஆயிரக் கணக்கானவர்கள் படித்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்றால், நான் எழுதிய பதிவுக்கும், தலைப்புக்கும் அப்படி ஒன்றும் நேரடித் தொடர்பு இல்லை. பெரும்பகுதியானவர்கள், தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் மட்டுமே! இது, நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அதனால்தான், உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று என் மனசாட்சி சொல்லியதால் இந்தப் பதிவு. உண்மையை ஒத்துக் கொண்டால் தண்டனைக் குறைவாமே:-)))?!

Thursday, May 12, 2011

எந்தப் படிப்பில் சேரலாம்...?

கடந்தாண்டு நான் எழுதியதுதான் இந்தப் பதிவு. சில பகுதிகளைத் தவிர்த்த பிறகு, இப்பொழுதும் இது சரியாக உள்ளதாகவேத் தோன்றுகிறது. இனி தொடருங்கள்...

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளைப் படிக்க வைத்தாயிற்று, இனி, என்ன படிக்க வைப்பது, எதைப் படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும், சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், பெற்றோர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள், "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அதற்கு அவர்கள்  அளிக்கும் பதில், "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே...?!"  உடனே, நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம், எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும், நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம் சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்பொழுது நானறிந்த சில துறைகளில், சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிந்து வருபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள்) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் படித்தல் நலம்.


எந்தத் துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும், அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு. நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல, அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி திருத்துபவர் முதல் துணி தைப்பவர் வரை, பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை, ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில்க்கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ நினைக்காதீர்கள். (சில பெற்றோர், தனது பிள்ளை யாரும் படிக்காதப் படிப்பை படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்)

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோடெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

கடைசியாக மாணவர்களுக்கான வேண்டுகோள்,  'உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்!'

கடந்த ஆண்டு எழுதிய பதிவையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் அறிய இங்கே செல்லவும்.