இன்று காலையில் நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவர் தொடர்புக்கொண்டார்.
பேச்சு பொதுவாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தற்சமயம் நான் அறிந்த செய்தி குறித்து விசாரித்தேன்.
அந்த செய்தியில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தனக்கு நண்பர் என்றார். எனக்கு நேரமில்லாததால் மேற்கொண்டு பேசவில்லை.
சுமார், இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது, நான் அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு நபரின் பெயரைச்சொல்லி அவர் எனக்கு உறவினர் என்றேன்.
அவர் உடனடியாக, "நாம் இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். நீங்களும் அவரை உறவினர் என்று அறிமுகம் செய்வதற்கோ அல்லது நானும், ஆமாம் அவர் எனது அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்று சொல்லிக்கொள்வதற்கோ, அவர் தகுதியில்லாதவர். அந்த அறிமுகம் தேவையில்லை!" என்றார்.
இந்த சமூகம் குற்றவாளிகளை அங்கீகரிக்க துவங்கிவிட்டதின் அடையாளம்தான்,
குற்றச்செயலில் ஈடுப்பட்டவரை நண்பர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலை.
இன்னும் சிலர், "அவன் மோசமானவன் தான். ஆனால், என்னிடம் 'வச்சிக்க' மாட்டான்" என்பார்கள். ஊரிலுள்ள அனைவரைப் பற்றியும் குறை சொல்லும் நபர், நம்மைப் பற்றி பிறரிடம் குறை சொல்ல மாட்டார் என்று நம்புவதற்கு சமமானதுதான், மேலே உள்ள நண்பரின் நம்பிக்கையும்.
காவல்துறையும் நீதித்துறையும் மட்டுமே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும் முடியும் என்று கருதிவிட முடியாது. அதில், இந்த சமூகத்திற்கும் பொறுப்புள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவி ரோட்டில் செல்லும்போது, பலரது முன்னிலையில், கணவர் வெட்டி கொல்லப்படுகிறார். பாதிக்கப்பட்ட மனைவி, பின்பு சொல்லியதாக பத்திரிகையில் வந்த செய்தி, "அந்த இடத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால், இந்நேரம் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பார்"
இதுதான் சமூகம் குறித்தான பார்வை.
நமது சந்ததியினர் பாதுகாப்புடன் வாழ்வதற்கு, அகிம்சையை போதித்த மகாத்மா பிறந்த நாளில், 'குற்றவாளிகளுக்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி ஏற்போம்!
No comments:
Post a Comment