Friday, November 14, 2025

மருந்தாளுநர் ஆர். சுரேஷ் குமார்....

கருப்பம்புலம் மருத்துவமனையிலிருந்து, நாகை மருத்துவமனைக்கு 1999 - இல் மாறுதலில் சென்றபோது அறிமுகமான நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் மூத்த மருந்தாளுநர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள்.

மருந்தாளுநர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர். மருந்தாளுநர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றியவர்.

 அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் குணம் கொண்டவர். இவரின் நண்பர்கள் பலர் எனக்கு நண்பராகிப் போனார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் மறைந்த 'விஜி சார்' -யும் ஒருவர்.

எந்த நேரம் சுறுசுறுப்பாக இருப்பார். இளம் வயதிலிருந்தே, சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொண்டவர். இன்சுலின் போடுவதற்கு தயங்கும் நண்பர்களுக்கு, இவரை உதாரணமாக குறிப்பிடுவது எனது வழக்கம். 

மருத்துவம் சார்ந்த உதவி தேவையென்று இவரை அணுகும் நபர்களுக்கு, தேவையான உதவிகளை செய்யத் தயங்கியதில்லை.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு, ஒருங்கினைந்த விவயசாயம் செய்து வந்ததோடு, மற்றவர்களுக்கு வழிக்காட்டியாகவும் திகழ்ந்தார். 

நான், சென்னை வந்த பிறகும் என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். 

இவர், இன்றைய தினம் தனது 72 -ஆவது வயதில் இயற்கையெய்தினார் என்கிற தகவலை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இந்தத் துயரத்தை தாங்கும் சக்தியை குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்🙏

Monday, November 10, 2025

இளம் வழக்கறிஞருக்கு கிராம மக்களின் வாழ்த்துகள்!

வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து,  அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, கடந்த 06.11.2025 அன்று  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த செல்வி A. சுபாஷினி B.Sc., L.L.B. அவர்களுக்கு, கருப்பம்புலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு இரா. சுப்புராமன் அவர்களின் முயற்சியால், கிராம மக்கள் சார்பாக பாராட்டு விழா 9.11.25 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. 

பல்வேறு ஆளுமைகள், இளம் வழக்கறிஞருக்கு  அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். 

எனக்கு கிடைத்த வாய்ப்பில் "குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக மாறுவதற்கு உதவக்கூடாது!" என்கிற எனது வேண்டுகோளை வைத்ததோடு, "பணமும், ஆடம்பரமும் நிரந்தர மரியாதையைத் தராது" என்று சொல்லி வாழ்த்தி விடைப் பெற்றேன். 

இதுபோன்ற நல்ல நிகழ்வுகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை திரு சுப்புராமன் அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்தேன். 

வழக்கறிஞர் பேரோடும், புகழோடும் திகழவேண்டுமென்று வாழ்த்துவதோடு💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Tuesday, November 4, 2025

கைத்தட்டலாமே!

மைத்துனரின் பேத்தி படிப்பதால் வேதாரண்யம் வட்டம், குரவப்புலம் 'பாய்ண்ட் கால்மிர் இண்டர்நேஷனல் ஸ்கூல்' (Point Calimere International School) -இல் 1.11.25 அன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. 

 நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. அதிலும் குறிப்பாக, தாளாளர் திரு. எம். சுல்தானுல் ஆரிஃபீன் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு. "எனக்கு 60 வயதாகிவிட்டது. இன்னும் நான் இதுவரை வாழ்ந்த காலத்தில் 25 சதவிகிதம் வாழ்வேனா என்று எனக்கு தெரியாது. அதுவும், ஆரோக்கியமாகவும் நினைவுகளோடும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேனென்றும் தெரியாது. அதற்குள்ளாக, நம்முடைய பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்பதற்குரிய வேலைகளை செய்து முடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். அறுபதைக் கடந்தவன் என்பதால் அவருடைய பேச்சின் அர்த்தம், எனக்கு நன்றாகப் புரிந்தது.

 நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் பிரமாண்டத்தின் உச்சம்! எனினும், இந்நிகழ்வில் நான் கண்ட ஒரு குறையை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எப்போதும் குறைகளை புறம்தள்ளி, நிறைகளை முன்னிருத்துவது எனது இயல்பு. ஆனால், இங்கு மட்டும் அந்த குறையை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். 

 நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பேசியபோதும், பிறகு குழந்தைகள் வெளிப்படுத்திய கலைத் திறமைகளைக் கண்டபோதும், அங்கு வந்திருந்த பெரும்பகுதியான பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், மற்றும் பார்வையளர்களும் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த தவறியது ஒன்றுதான் பெரிய குறையாகும்.

 ஒருவரை பாராட்டுவதால், நாம் அவர்களைவிட 'தகுதியாலும் திறமையாலும் குறைந்தவர் என்று அர்த்தமல்ல' என்பதை, நாம் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்...?