Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, April 16, 2012

தேவை மீண்டும் முத்துக்குமரன்!

எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் பல விஷயங்கள் குறித்து என்னுடைய கருத்துகளை அண்மைக் காலமாக  பதிவு செய்யத்  தவறி வருகிறேன். இருந்தப் போதும், இந்தப் பதிவை எப்படியும் எழுதிவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்கிறேன்....



கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜூனியர் விகடனில், புதுக்கோட்டையில் முத்துக்குமரன் என்கிற வேட்பாளர் சைக்கிளில் செல்கிறார். மிகவும் எளிமையானவர் போன்ற விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்பொழுது, இந்த வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். அத்தோடு சரி, அதன் பிறகு அவரைப் பற்றி மேற்கொண்டு அறிந்துக் கொள்ள நான் நினைக்கவில்லை.

ஏப்ரல் முதல் தேதி நடந்த சாலை விபத்தில் திரு. முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்தேன். பிறகுதான், அவர் சட்மன்ற உறுப்பினராக,  எவ்வாறு செயல்பட்டார் என்று அறிந்துக் கொண்டேன்.

''ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு முத்துக்குமரனே ஒரு முன்மாதிரி!''  என்று சபாநாயகரே பாராட்டியிருக்கிறார் என்பதையும், விழுப்புரத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு பணியிட மாறுதல் வாங்குவதற்கு, தனது பதிவியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்த போது. ஏன், இவ்வளவு காலம் இவரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று வேதனைப் பட்டேன்.

குறைந்தப் பட்சம் அவரைப் பாராட்டி ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். அல்லது ஒரு பதிவு போட்டிருக்கலாம். எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் என்னுள் உள்ளது.

வருகிற இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் குறைந்தப் பட்சம்  மறைந்த முத்துக்குமார் போல்,  எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு, முத்துக்குமரன் இடத்திற்கு மீண்டும் ஒரு முத்துக்குமரனையே தேர்ந்தெடுங்கள். அப்பொழுதான் பல முத்துக்குமரன்கள்  அரசியலுக்கு வருவார்கள்.

 படம் உதவி : கூகிள் 

Monday, October 31, 2011

இது கூடவா தெரியாது, இவர்களுக்கு...?!


அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய  ஒன்று.  அதுவும்  சுயேட்சைகள் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பது ஆரோக்கியமானதுதான்.  ஏனெனில்,  'நாம் யாரை நிறுத்தினாலும், நமது கட்சி சின்னத்தைப் பார்த்து, மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள்' என்று, இனி அரசியல் கட்சிகள்  நினைக்கும்  வாய்ப்பு குறையலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன்.



இப்பொழுது, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில், தோல்வியை சந்தித்தக் கட்சியின் தலைவர்கள்,  தலையில் போட்டத் துண்டை எடுத்து தோளில் போட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் 'துண்டை  தலையில் போட்டாலென்ன, தோளில்  போட்டால் நமெக்கென்ன?' என்று இருந்து விடலாம். ஆனால், அவர்கள் விடும் அறிக்கைகளைப் படிக்க வேண்டிய துரதிர்ஷ்டம் நமக்கு கிடைத்து விடுகிறதே!

வெற்றிப் பெற்ற இந்த சுயேட்சைகள் எல்லோரும், 'இவர்கள் கட்சியில் சீட் கிடைக்காமல் போட்டியிட்ட அதிருப்தியாளர்கள்' என்று அறிக்கை விட்டு, தங்கள் கட்சி இன்னும் செல்வாக்கோடுதான் இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை என்றால், 'உங்கள்  கட்சியில், மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள்  யாரென்று கண்டுபிடித்து. அவகளை  தேர்தலில் நிறுத்தக் கூட தெரியாத உங்களுக்கு, நாட்டை  நிர்வாகம் பண்ணும் அறிவு  எப்படி இருக்கப் போகிறது?' என்று மக்கள் நினைப்பார்கள் என்பது கூட, இந்த அதிமேதாவிகளுக்கு தெரியவில்லை என்று நினைக்கும் பொழுது, இவர்களின் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை!