Showing posts with label கிராமத்து நினைவுகள். பொங்கல். அனுபவம்.. Show all posts
Showing posts with label கிராமத்து நினைவுகள். பொங்கல். அனுபவம்.. Show all posts

Saturday, January 15, 2011

பொங்கல்- என் நினைவுகள்!


எதுக்கு இந்தப் படமுன்னு குழம்பாம தொடருங்க புரியும்.....




பொங்கல் என்றால் நிறைய விஷயங்கள் நினைவுக்கு வரும். அதில், ஒன்று மட்டும் இந்தப் பொங்கலுக்கு. அடுத்த வருடம் என்ன பண்றதுன்னு முழிக்கக் கூடாது பாருங்க!

பொங்கல் வாழ்த்து அட்டை.
********************
இதுதான் இந்தப் பொங்கலுக்கு கதாநாயகன். எனக்கு வெளியூரில் உறவினர்கள் கிடையாது. எனது பள்ளி வகுப்புத் தோழர்களுக்கு வாழ்த்து அட்டை வரும்போது, எனக்கு ஒரு வித ஏக்கம் இருக்கும். எங்கள் கிராமத்தில் போஸ்ட்மேன் வேலைப் பார்ப்பதே எங்கள் பள்ளி மாணவர்கள்தான். ஏனென்றால் பெரிய கிராமம்(பரப்பளவில்) மற்றும் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வயல்களுக்கு நடுவே இருக்கும். தெரு என்று கிடையாது. இப்பொழுதும் அப்படித்தான். வயதான போஸ்ட்மேன் நடந்து சென்று தபால் கொடுக்க முடியாது என்பதால், அந்தந்த பகுதி மாணவர்கள் வசம் தபால்களை ஒப்படைத்து உரியவர்களிடம் கொடுக்கச் சொல்லிவிடுவார். (இப்பொழுது, அந்தப் பழக்கம் மாறிவிட்டது) எனவே, ஊர் மக்களுக்கு வரும் வாழ்த்து அட்டைகளை பார்த்து மகிழ்வோம்.

ஒன்பதாம் வகுப்பிற்கு வேறொரு பள்ளிக்கு சென்ற பிறகு, வகுப்புத் தோழர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ்வேன். முதலில் வாழ்த்து அட்டை அனுப்புவது. பிறகு, நமக்கு வந்த வாழ்த்து அட்டைகளுக்கு நன்றி அட்டை அனுப்பவது என்பது வழக்கம். இரண்டு செலவு. இதில் கணக்கு வழக்கு வேறு. எத்தனை அட்டை அனுப்பினேன், எத்தனை அட்டைக்கு நன்றி வந்ததென்று. தட்டுத்தவறி ஒரு நண்பன் நன்றி அனுப்ப மறந்துவிட்டால், பாவம் எங்கள் போஸ்ட்மேன்தான். அவரிடம் தினம்தோறும் "எனக்கு ஏதாவது அட்டை வந்திருக்கா" என்று போஸ்ட் ஆபிஸ் சென்று விசாரிப்பேன்.




எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் அந்த வயதில் ரொம்பப் பிடிக்கும். கடலை மிட்டாய் பாக்கெட்டில் வரும் எம்.ஜி.ஆர். படங்களைக்கூட காசுக் கொடுத்து வாங்குவேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கடையில் இலவசமாக கிடைப்பதை சில மாணவர்கள் விற்பார்கள்.

முதல் வருடம் எம்.ஜி.ஆர். பட வாழ்த்து அட்டைகளாக வாங்கி அனுப்பினேன். மறு வருடம், நான் நண்பர்களுக்கு அனுப்புவதற்காக வாங்கி வந்த படங்களைப் பார்த்த எனது உறவினர் ஒருவர் "நமக்குப் பிடித்த படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது. அவர்களுக்கு பிடித்ததை நாம் வாங்கி அனுப்பவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்" அன்று முதல் எம்.ஜி.ஆர். படம் வாங்குவதையும் தவிர்த்து விட்டேன்.

எனக்கு மனதுக்குப் பிடித்த எம்.ஜி.ஆர். படம் இருந்தால், அதை வாங்கி எனது நண்பன் பெயரில் எனக்கு அனுப்பி மகிழ்ச்சியடைந்த வரலாறும் உண்டு!

அனைவருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!