Showing posts with label கிராமம்.. Show all posts
Showing posts with label கிராமம்.. Show all posts

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்- பாகம் 2




    பொங்கல் கரும்பு!

    இதை நாங்கள் பார்ப்பதே பொங்கல் சமயத்தில்தான். மற்றபடி கரும்புக்கும் எங்கள் ஊருக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால், முடிந்த வரையில் நிறைய கரும்புகள் வாங்கித் தருவார்கள்.  கரும்பு நம்ம ஊரில் விளையவில்லையே என்கிற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. கரும்பில் இரண்டு வகை உண்டு என்பதை நான் மன்னார்குடி படிக்க சென்ற பொழுதான் அறிந்துக் கொண்டேன்.





     எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த பொழுது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது புகையிலை மற்றும் பூ. மரங்களில் சவுக்கு. முந்திரி மரங்கள் கூட எங்காவது ஓர் இடத்தில்தான் இருக்கும்.  சுவைக்காக சாப்பிடும் பழ வகைகளில் மா, எங்காவது நாவல், சீதா மரங்கள்  இருக்கும்.  பிறகு கொய்யா வந்தது.

 பலா மரம் ஊரில் இல்லை. பலா மரம்  இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்றும், அதை நட்டவர்கள் அம் மரம் காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு மூட நம்பிக்கை இன்றளவும் எங்கள் பகுதியில் உண்டு.


      கடலூர் மாவட்டத்தில் 'தானே' புயலால் விழுந்த பலா மரங்களைப் பற்றிய  செய்தியை அறியும் பொழுது, ஒரு பலா மரம் முழுமையாக  அதாவது முழுமையான  அளவில் காய்க்க முப்பது வருடங்களுக்கும்  மேலாகும் என்கிற தகவலை பத்திரிகையில் படித்தேன். இதற்கு  'அமைதி அம்மா' சொன்னது,  "அதானால் தான், நம்ம ஊரில் பலா மரம் நட்டவர்கள் அது காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்களோ?"

   மேற்கண்ட தகவல்கள், கிராமத்தில் வளர்ந்த பொழுது இனிப்பு சுவையறியாத எங்கள் நாக்குக்கு, பொங்கல் கரும்பு எப்படி சுவைத்திருக்கும் என்று புரிந்துக் கொள்வதற்காக! எங்கள் வீட்டில்  வாங்கி வந்த கரும்பை துண்டாக்கி, பிறகு தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டித் தருவார்கள். அப்படித்தான் கரும்பைத் தின்று எனக்கு பழக்கம். முழு கரும்பை அப்படியே 'பல்லால்' கடித்து சாப்பிடும் பழக்கம் இன்றளவும் இல்லை.

 இந்த வருடம் ஒரு கரும்பின் குறைந்தப் பட்ச சில்லறை விலை ரூபாய் முப்பது. விலை கசந்தாலும் கரும்பின் சுவை?

  பாகம் ஒன்று படிக்க இங்கே செல்லவும்.

  அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!