Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Saturday, February 4, 2012

என் கருத்தைச் சொல்ல மாட்டேன்!



அண்மையில், எனது மருத்துவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர். நேரம் கிடைக்கும் பொழுது, அவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில நாட்களுக்கு முன்  அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. பேச்சு இப்படித்தான் ஆரம்பித்தது.

"குழந்தைக்கு பேர் வச்சிட்டீங்களா சார்?"

"நிரஞ்சனா" என்றார் அவர்.

" நிரஞ்சனா-ன்னா என்ன அர்த்தம்?"

"நிரஞ்சனா-ன்னா, அது ஓர்  ஆற்றின் பெயர், புத்தர் அந்த ஆற்றில் குளித்தப் பிறகுதான் ஞானம் பெற்றார்"

"பெயர் வைக்கிறதுங்கிறது ரொம்பக் கஷ்டம். என்னோட பையனுக்கு குழந்தை பிறக்கும் பொழுது, என்ன பெயர் வைக்கிறதுன்னு இப்ப நினைச்சாலே ஒரே குழப்பமா இருக்கு  சார்!"

"அது, உங்க பையனோட பிரச்னை. அதுல நீங்க தலையிடக் கூடாது!"

"ஆமாம் சார், அது அவங்க உரிமை. அதுல நான் தலையிடல. ஆனா, என்னுடைய கருத்தைச் சொல்லலாம் இல்லையா?"

"உங்களோட கருத்துன்னு, நீங்க சொல்றீங்க. ஆனா, உங்கப் பையன் நம்ம அப்பா ஆசைப்பட்டு சொல்லிட்டார். நாம வேறு பேர் வச்சா,  அப்பா மனசு கஷ்டப்படுமேன்னு நினைச்சு, அந்தப் பேரையே வச்சுடுவார். அதனால, நீங்க எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது!" என்றவர் தொடர்ந்து...

"என்னோட முதல் குழந்தைப்  பிறந்தப்பவே,  நேரா எங்க அப்பாகிட்ட போய், நீங்க பேரு ஏதும் வச்சிடாதீங்கன்னு முதல்லையே சொல்லிட்டேன்!"  என்றார்.

  நிரஞ்சனா என்ற ஆற்றில் குளித்தப் பிறகு, புத்தர் ஞானம் பெற்றதாக மருத்துவர் சொன்னார்.  மேற்கண்ட உரையாடல் எனக்கு புது சிந்தனையைக் கொடுத்தது.  ஏற்கனவே,  நான் சொன்னதால்தான் 'அமைதி விரும்பி' வழக்கறிஞர்  படிப்பில் சேர்ந்தான். இனி, என்னுடையக் கருத்துக்களை 'அமைதி விரும்பி'  கேட்காமல்,  நான் சொல்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மகன் வயதில் உள்ள  பிள்ளைகளின்  பெற்றோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

.