நண்பர் வீட்டுத் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு மிக நல்ல மெல்லிசைக் கச்சேரி நடந்துக் கொண்டிருந்தது. பெண்ணும் மாப்பிளையும் மேடைக்கு வரும் வரை எல்லோரும் பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். மணமக்கள் மேடைக்கு வந்தவுடன், அவர்களை வாழ்த்துவதற்காக எல்லோரும் எழும்பிச் சென்று வரிசையில் நின்றுக் கொண்டனர். என்னுடன் சிலர் மட்டும் பாடலைக் கேட்டுக் கொண்டு அங்கு இருந்தனர். கச்சேரி தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. 'யாருமே கேட்கலன்னாலும், இவங்க கவலைப்படாம பாடுறாங்க. இது இவர்களுக்கு பழகிப் போயிருக்கும் போல!' என்று நினைத்துக் கொண்டேன்,
அந்தப் பாடல் முடிந்தவுடன் அருகிலிருந்த இரண்டு பேர் கைத் தட்டியிருப்பார்கள் போல. அதை, நானும் கவனிக்கவில்லை. அந்த கச்சேரியை நடத்துபவர், "கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி, இங்கு வந்திருக்கும் எல்லோரும் திறமையானவர்கள் லைவா வாசிக்கனும்னு மெலோடியாப் பாடிகிட்டிருக்கிறோம்" என்றார். அவருடைய நினைப்பு, மெலோடி பாடுவதால் மக்கள் தொடர்ந்து அமர்ந்திருக்கவில்லை என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் கிராமத்தில் திருமணம் என்றால், முதல் நாளிலிருந்து கூம்பு ஸ்பீக்கர் -ஐ உயரமான மரத்தில் கட்டி சினிமா பாடல்கள் போடுவார்கள். அதுவும், திருமண வீட்டார் விரும்பும் பாடலைப் போடவில்லை என்றால், பணம் கொடுக்கும் பொழுது தகராறு நிச்சயம் உண்டு. அதனால், முன்பே என்ன மாதிரி பாடல்கள் கொண்டு வரவேண்டும் என்று ஒப்பதந்தம் போடப்படும். ஆனால், இன்று இம்மாதிரியான கச்சேரிகளை கேட்கும் அளவுக்கு மக்களுக்கு பொறுமையில்லை என்பதே உண்மை.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி ஒரு சம்பிரதாயமாகிவிட்டது.
பணத்திற்காக பாடினாலும், அவர்களும் பாராட்டை எதிர்பார்ப்பார்கள் தானே? நாம் செல்லும் திருமண நிகழ்ச்சிகளுக்கு நேரம் கிடைத்தால், கொஞ்ச நேரமாவது கச்சேரி கேட்டு, கைத்தட்டி அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்திவிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நீங்க?
.