Showing posts with label பாராட்டு.. Show all posts
Showing posts with label பாராட்டு.. Show all posts

Sunday, January 22, 2012

இப்படியும் ஒரு மருத்துவர்!

வேதாரணியம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' என்று அன்போடு அப் பகுதி மக்களால் அழைக்கப்படும்,  திரு டாக்டர் வி.ஜி.சுப்பிரமணியன் அவர்களைப் பற்றி 'புதிய தலைமுறை' வார இதழ் செய்தி வெளிட்டுள்ளது. மருத்துவர் பற்றி நான் அறிந்த விபரங்களையும் இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.




கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து. பின்பு, அந்தக் கிராமத்திலேயே மருத்துவம் பார்க்கும் திரைப்பட கதாநாயகன் போல், வேதாரணியம் அருகே செம்போடை என்கிற கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து. அரசு பள்ளிகளில் கல்விக் கற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்று,  லண்டனில் பணிபுரிந்து, பின்பு வேதாரணியம் பகுதியில் அரசு மருத்துவனைகளில் பணியாற்றி.  பின்பு,  அரசுப் பணியை விட்டு விலகி  தன்னுடையை சேவை, தான்  பிறந்த மண்ணிலேயே தொடர வேண்டும் என்பதற்காக,   வேதாரணியம் பகுதியிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.


 கிராமத்தில் பிறந்தாலும் தனது கிராமத்து மக்களின் மீது அக்கறைக் கொள்ளாமல்  நகரத்தில் மருத்தவம் பார்க்க விரும்பும் மருத்துவர்கள் மத்தியில், தான் பிறந்த கிராமத்திலேயே, அப் பகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, வருமானக் கணக்குப் பார்க்காமல், இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த பணத்தைப் போட்டு  அண்மையில் ஐ.சி.யு. வசதியுடன் ஒரு நவீன மருத்துவமனையை 'நேதாஜி' பெயரில் திறந்துள்ளார். 

இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் தங்கி, அங்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு எந்த வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் சேவை அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவோம். மேலும், இவரைப் பின்பற்றி புதிதாக மருத்துவப்படிப்பு முடிக்கும் மருத்துவர்கள், பொருளாதாரக் கணக்குப் பார்க்காமல் கிராமத்தில் சேவையாற்ற முன் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இந்த மாதிரி, சமூக சேவை செய்பவர்களை கண்டுபிடித்து பாராட்டி உற்சாகப் படுத்தும் 'புதிய தலைமுறை'க்கு நன்றி தெரிவிப்போம்.

.