Sunday, January 3, 2010

சென்னையில் வாடகை வீடு....!

நான் சென்னைக்கு வந்த புதிதில் என்னை மிகவும் பாதித்த விஷயம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் . அது வாடகைக்கு வீடு விடும் வீட்டுச் சொந்தக்காரரின் அறிவிப்பு பலகையில் படித்தவையே. ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. (தற்பொழுது to let board வைப்பவர்கள் குறைவு, எல்லாமே புரோக்கர் மயம்) தனது சொந்த செலவில் வீடு கட்டிவைத்திருக்கிறார்கள் , அதில் யாரை தங்கவைக்கவேண்டும் என்பது அவர்களது உரிமை, அதில் தலையிட நீ யார் என்று தோன்றுகிறதா? சரி, நான் அவர்கள் உரிமையில் தலையிடவில்லை. ஆனால் இது போன்ற அறிவிப்புகளினால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்பட போவதில்லை, அதுவும் குறிப்பாக வீட்டை வடகைக்குவிடும் வீட்டுச் சொந்தக்காரருக்கு...! அவரின் நோக்கம் அந்த குறிப்பிட்ட ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார் என்று கருதினால் அது மூடனம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.

இன்றைய தினத்திற்கு எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கும் ஐ.எஸ்.ஐ. போன்றதொரு முத்திரைக்குத்தி இது உயர்வான ஜாதி இந்த ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள் என்று குறிப்பிட முடியாது
என்பதை நாம் அறிவோம்.

இன்னும் சிலர் காவலர்கள்,வழக்கறிஞர்கள்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்த்தவர்கள் போன்றவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இது எல்லாமே தவறுதான்.

பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் அவர் காலத்திலேயே உண்மையென்று நிருபிக்கப்பட்டதற்கு காஞ்சிபுரம் அர்ச்சகருக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் மட்டும் படம் பிடிக்காமல் விட்டிருந்தால் இது மாதிரி குற்றசாட்டைச் சொன்னால் யார் நம்புவார்கள். தெரிந்தது ஒரு தேவநாதன் தெரியாமல் எத்தனை தேவனாதனோ...?! ஏன் தேவனாதனைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்றால் அர்ச்சகர் என்பவர் எப்படி ஒழுக்கமாக இருப்பார் என்று நாம் நம்பிக்கொண்டிருந்தோமோ, அந்த நம்பிக்கையில் மண் விழுந்ததால் அவரைத் தவிர்க்க முடியவில்லை.

ஜாதியோ, செய்யும் தொழிலோ ஒருவரின் குணநலன்களைப் பிரதிபலிக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுபவர்கள் ஒன்றும் படிக்காதவர்களோ ஏழைகளோ அல்ல. இவர்களெல்லாம் திருந்தாவிட்டால் யார் திருந்துவது? எனக்கு தெரிந்து
பிரபல ஆங்கில நாளேட்டில் வேலை செய்யும் நபர், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்ப்படுமென்று அறிவிப்பு வைத்திருந்தார்.
ஜாதிப்பித்து பிடித்து அலையும் மூடர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
தங்களது தாய் தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் அனைவரும் தனது ஜாதியினார்தான். இதுவரையில் அவர்களுக்குக்காக தான் எதை விட்டுக்கொடுத்தோம் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தால் தன்னிடம் உள்ள ஜாதிப் பித்து தானாக தெளிந்துவிடும்.

7 comments:

 1. அற்புதமான பதிவு. இவர்கள் திருந்துவார்களா?

  ReplyDelete
 2. கண்டிப்பாக திருந்த வேண்டும்! கண்டிக்கிறோம்!

  ReplyDelete
 3. If you let a house/flat to an advocate or a person in police it is not easy to get them vacate the flat/house.Some people will prefer vegetarians only as tenants.Some are not so rigid in that.Many persons have some ideas about castes and character.That is not correct but the reality is they are yet to come out of such biased thinking.

  ReplyDelete
 4. thank you Anonymous...

  என்னுடைய கருத்தாக தெரிவிப்பதது என்னவெனில் ஒருவரை மேலோட்டமாக ஜாதி மற்றும் தொழிலை வைத்து குண நலன்களை கண்டுபிடிக்க முடியாது என்பதுதான்.

  வக்கீல், போலிஸ் இரண்டிலும் நல்லவர்கள், ஞாயமானவர்கள் இல்லையென்று சொல்லமுடியாது. நல்லவர்களின் சதவிகிதம் சொற்பமாக இருக்கும். மொத்தமாக ஒதுக்கினால் அந்த சொற்பமும் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள் என்பதே என் கவலை.

  ReplyDelete
 5. /ஜாதிப்பித்து பிடித்து அலையும் மூடர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
  தங்களது தாய் தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் அனைவரும் தனது ஜாதியினார்தான். இதுவரையில் அவர்களுக்குக்காக தான் எதை விட்டுக்கொடுத்தோம் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தால் தன்னிடம் உள்ள ஜாதிப் பித்து தானாக தெளிந்துவிடும்//

  சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 6. வீட்டை வாடகைக்கு விட்டு பிரச்சினையில் மாட்டிக் கொண்டவர்கள் அநேகம். அந்த அனுபவத்தில் அவர்கள் பல நிபந்தைனைகளை போடுகிறார்கள்.

  ReplyDelete