Saturday, December 25, 2010

காய்கறிகள் விலை உயர்வது, எதனால்?

நேற்று காய்கறி வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது, கடைக்காரர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்...! அதனால், விலை கேட்க்காமல் எடுத்து வைத்துவிட்டேன். பிறகு, மொத்த தொகையைக் கேட்டவுடன் எனக்குத் தலைசுற்றியது. வேறொன்றுமில்லை வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை எடுக்காமல். சவ்சவ்(பெங்களூர் கத்தரிக்காய்), புடலங்காய், போன்ற யாரும் விரும்பாத, விலை குறைந்தவைகளாக எடுத்திருந்தேன். "என்ன இவ்வளவு சொல்கிறீர்கள்?" என்றுக் கேட்டேன். உடனே அவர், "புடலங்காய் கிலோ 80 ரூபாய்" என்றார். புடலங்காயயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மற்றவைகளை வாங்கிவந்தேன்.

எனக்கு எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு. விலை அதிகாமான காய்கறிகளை வாங்குவதை தவிர்த்துவிடுவேன். விலைக் குறைந்தவைகளை அதிகமாக வாங்குவேன்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், எனக்கு புடலங்காய், முருங்கைக்காய் போன்றைவைகள் எப்பொழுதும் சாதாரணமாகப்படும். கிராமத்தில் அவைகளை யாரும் வாங்க மாட்டார்கள்/விரும்பமாட்டார்கள். மற்றவரை திட்டுவதற்கு கூட 'புடலங்காய்' என்று சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு அந்த புடலங்காய்க்கு! முருங்கைக்காய் பறிப்பார் யாருமின்றி மரத்தில் முற்றித் தொங்கும். இது சில வருடங்களுக்கு முந்தைய நிலை.

இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.

கிலோ 50 ரூபாய் விற்கப்படும் தக்காளி திடிரென்று ஒருநாள் கிலோ 50 காசுக்கு விற்கப்படும். அன்று விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள். இது மாதிரி உற்பத்தியாகின்ற பொருட்களை விற்க முடியாமல் அவதிப்படும் விவசாயி, எதை நம்பி மீண்டும் தக்காளி பயிரிடுவார்?

எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க பொருட்கள் இருக்காது" என்று சிலர் அடிக்கடி சொல்வார்கள். அது இப்பொழுதே உண்மையாகி வருவது, நிச்சயம் வேதனைதான்.

இதைப் படிப்பவர்கள், உங்களுடைய எண்ணங்களையும், தீர்வுகளையும் பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ எழுதினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். அதனால்தான், இந்தப் பதிவை மிக விரிவாக எழுதவில்லை. எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.


.

11 comments:

  1. //எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க பொருட்கள் இருக்காது" என்று சிலர் அடிக்கடி சொல்வார்கள். அது இப்பொழுதே உண்மையாகி வருவது, நிச்சயம் வேதனைதான்.\\

    நூறு சதவிகிதம் உண்மை . விவசாயத்தை ஊக்கிவிக்கும் எந்த அரசாங்கமும் நமக்கு கிடைகவில்லை .

    ReplyDelete
  2. காய்கறிகளின் மதிப்பு நம் அரசாங்கத்திற்கு இன்னும் புரியவில்லை. ஊரில் இருக்கும்போது வீட்டுத் தோட்டத்தில் முருங்கை, கீரை, எல்லாம் இருந்தபோது அதன் மதிப்பு தெரியவில்லை. இப்போ தில்லியில் சில சமயம் 100 ரூபாய் கிலோ கொடுத்து முருங்கைக் காய் வாங்க வேண்டிய நிலை இருக்கும்போது தான் அதன் அருமை எனக்கும் புரிகிறது. எதுவும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும் என்பது உண்மை. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு பிறகு...
    "யேய்... அவரு யாரு தெரியுமா.. விவசாயம் பார்க்கறாரு.. உனக்கு நாளைக்கு கஞ்சி வேணும்ன்னா அவர் பார்த்து ஏதாவது செஞ்சாதான் உண்டு... மரியாதையா நடந்துக்க... "
    இது நடக்காமலா போய்விடும்.. பார்ப்போம்.. ;-)

    ReplyDelete
  4. RVS சொன்னதுபோல ஒருநாள் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்,...

    ReplyDelete
  5. காய்கறி விலை மட்டும்மல்ல.. எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது.

    ReplyDelete
  6. //இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.//

    உண்மைதான் நீங்கள் சொல்லியிருப்பது. இருப்பதை எல்லாம் வெட்டி விட்டு காயும் கனியும் காய்த்து பழுத்து கடைக்கு வரவேண்டுமென எண்ணுகிறோம். விவசாயம் குறையக் குறைய இவற்றின் விலை ஏறுவதைத் தடுக்க இயலாதே:(!

    ReplyDelete
  7. //விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள்//

    வெளிநாடுகளில் இம்மாதிரி அதிகம் விளையும் பொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வார்கள். அதுபோலச் செய்ய விவசாயிகளுக்கும் போதிய விழிப்புணர்வுமில்லை; அதைச் சொல்லித்தரவும், உதவவும் அரசாங்கத்திற்கும் நேரமில்லை.

    வீட்டிற்கு ஒரு சிறு காய்கறித் தோட்டம், எவ்வலவு சிறியதாக இருந்தாலும், கண்டிப்பாக வைக்க வேண்டும். இதுதான் தற்போதைய தீர்வு.

    ReplyDelete
  8. people mentality has grown to such a dimension that nobody bothers about a single person"s feelings of extreme difficulties.with this all traders (politicians ) enjoy the bussiness.there should be concern,otherwise you cannot expect anything from anybody.

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_120.html

    ReplyDelete
  10. காலத்திற்கேற்ற நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    நாம் காலாகாலமாக பிறரை கிண்டல், நையாண்டி செய்யவும், சில நேரங்களில் திட்டவும் காய்கறிகளின் பெயர்களை மானாவாரியாகப் பயன்படுத்தியுள்ளோம். உதாரணம்:
    அடப்போடா புடலங்காய்; ஒரு புடலங்காயும் வேண்டாம்;
    கத்திர்க்காய்க்கு கை கால் முளைத்தமாதிரி இருக்காடா அவ(ள்);
    போடா வெங்காயம்; தக்காளி (இதை நினைவுபடுத்தும் ஒரு வசவு மொழி தென் தமிழகத்தில் மிகப் பிரசித்தம்); அவனைப் பார்றா கொத்தவரங்காய் மாதிரி இருக்கான்; இன்ன பிற.

    கூடவே, ஈ.வெ.ரா. பெரியார் கூட தன் கருத்தரங்களில், கூட்டங்களில் அதிகமாக பிரயோகித்த வார்த்தை 'வெங்காயம்'.

    அதற்கான விலையை இன்று உண்மையாக நாம் கொடுத்து வருகிறோமோ?

    sivasankar

    ReplyDelete
  11. //நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.//

    கரெக்டுதான்..

    ReplyDelete