Friday, January 28, 2011

பதிவரின் பிரச்னை...!

நான் பிளாக் எழுத ஆரம்பித்தது, ஏதோ திட்டமிட்டு நடந்த செயலன்று. முதலில் பிளாக்கை ஆரம்பித்து, எனது படத்தை போட்டு, அதன் கீழ் எனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதி அழகு பார்த்தேன். தினமும் கண்ணாடியில் பார்க்கும் முகமாக இருந்தாலும், கம்பியூட்டர் மானிட்டரில் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருந்தது. ஆனால், மறுநாளே படத்தையும் பெயரையும் எடுத்துவிட்டு, 'அமைதி அப்பா' (அமைதி விரும்பி-யின் அப்பா) என்று எழுதி, அதையே பிளாக்கின் பெயராகவும் வைத்தேன். பிறகு, ஏதாவது எழுதலாம் என்று நினைத்து எழுதி, நானே படித்துக்கொண்டேன். இதற்கிடையே ஓரிரு நண்பர்கள் நான் எழுதியதை படித்து, அதற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஆக நம்ம எழுதுறதையும் யாரோ படிக்கிறாங்கன்னு ஒருவித பயத்தால், எழுதுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். இவையெல்லாம் என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்தாலே புரியும்.

சரி, தலைப்புக்கு வருகிறேன். இப்பொழுது, பதிவுலக நண்பர்கள் சிலர், பின்னூட்டத்திற்கு மாடரேஷன் வைத்திருப்பவர்களை அடிக்கடி விமர்சனம் செய்கிறார்கள். அதாவது 'மாடரேஷன்' வைத்திருப்பவர்கள் 'தன்னைப் பாராட்டி' வரும் பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுகிறார்கள் என்பது மாதிரியான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். அப்படி மாடரேஷன் வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதால், அதற்கு என்னுடைய தன்னிலை விளக்கம்தான் இந்தப்பதிவு!

ஆரம்பத்தில், பின்னூட்டத்தை 'மாடரேஷன்' இல்லாமல் வைத்திருந்தேன். பிறகு, பல வலைப்பூக்கள் மற்றும் இணைய செய்திப் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது அதில் வரும் பின்னூட்டங்கள் மிகமிக ஆபாசமாகவும், மற்றவரைத் திட்டியும் எழுதப்படுவதைப் பார்த்தேன். எனவே, எனக்குள் ஒரு பயம் வந்துவிட்டது. நானோ, எப்பொழுதாவது கம்பியூட்டர் பக்கம் செல்பவன். அப்பொழுது, சொந்தமாக கம்பியூட்டர் கிடையாது. எனவே, நாம் கவனிக்காமல் இருக்கும் பொழுது, இந்த மாதிரியான பின்னூட்டமிடப்பட்டு, அது நமக்குத் தேவையற்ற சிக்கலை உண்டு பண்ணுமோ என்ற பயத்தால் 'மாடரேஷன்' வைத்தேன். அதனால், சிலர் எழுதிய பின்னூட்டங்கள் பல வாரங்கள் கழித்துக் கூட என்னால் வெளியிடப்பட்டது. அப்பொழுது மெயில் வழியாக பின்னூட்டம் பார்க்கும் வசதிப் பற்றி எனக்குத் தெரியாது.

இதுவரையில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே நான் வெளியிடாமல் நிறுத்தி உள்ளேன். ஒன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமா? பதிவுக்கு வந்தது. மற்றொன்று ஏழு லட்சம் குடும்பங்களின் நிம்மதி...? பதிவுக்கு வந்தது. முதலாவது பின்னூட்டத்தில், அந்த நண்பர் இட ஒதுக்கீட்டால்தான் அரசு ஊழியர்கள் சரியில்லாமல் போய்விட்டார்கள் என்கிற மாதிரி எழுதியிருந்தார். அதை நான் வெளியிட்டிருந்தால் என்னுடைய நோக்கமே சிதைக்கப்பட்டு, விவாதம் வேறு திசையில் சென்றிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இரண்டாவது பதிவிற்கு மற்றொரு நண்பர் எழுதிய பின்னூட்டத்தில் உள்ள அவர் பெயரை கிளிக் செய்தால் ஒரு 'கிரிக்கெட் இணையதளம்' திறக்கிறது. மற்றபடி அவர் யார் என்பதெல்லாம் தெரியாது. இந்தப் பதிவிற்கு, இப்படி பின்னூட்டம் போட்டால், என்ன சொல்வது? இது வேண்டுமென்றே செய்யும் செயல் அல்லவா? மாடரேஷன் இல்லையெனில் இது போன்ற பின்னூட்டங்களை எப்படி மட்டுப்படுத்துவது. அவர் என்னைத் திட்டி எழுதியிருந்தால் கூட நான் வெளியிட்டிருப்பேன். ஆனால், எனது கருத்தை ஏற்றுக்கொள்வது போல் பின்னூட்டம் எழுதி, அவர் பெயரைக் கிளிக் செய்தால் அந்த 'கிரிக்கெட் பற்றிய இணையதளம்' திறப்பது மாதிரி செய்த செயலை என்னவென்று சொல்வது? நான், ஒன்றும் கிரிக்கெட்டுக்கு எதிரானவன் கிடையாது. குறிப்பிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மனநிலையை பிரதிபளித்திருந்தேன், அவ்வளவுதான்!

இது மாதிரியான செயல்களை தவிர்க்கவே கமென்ட் மாடரேஷன் வைத்துள்ளேன். மற்றபடி என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்தை நாகரிகமான முறையில் சொன்னால், வெளியிட நான் தயார். எதிர் கருத்துச் சொல்ல நீங்க தயாரா? எப்படியாவது, யாரையாவது பின்னூட்டம் எழுத வச்சிட்டலாம்னு நினைப்புத்தான்;-))))!

.

5 comments:

 1. //எதிர் கருத்துச் சொல்ல நீங்க தயாரா?//

  ஓ தயார்:)!

  // எப்படியாவது, யாரையாவது பின்னூட்டம் எழுத வச்சிட்டலாம்னு நினைப்புத்தான்//

  :))!

  ReplyDelete
 2. சார் கமெண்ட் மாடரஷன் செய்ய நிறைய பொறுமை வேணும். இது வரை எனக்கு அதை வைக்க வேண்டிய சூழல் வரலை :))

  ReplyDelete
 3. அமைதி அப்பா, இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள் என்பது என் கருத்து. நானும் கமன்ட் மாடரேஷன் வைத்திருக்கிறேன். ஆனால், என்னைப்பற்றி என்ன எழுதினாலும் அதை வெளியிடுவேன். இது வரைக்கும் யார் கமன்டையும் போடாமல் இருந்ததில்லை. சர்ச்சைக்குறிய பதிவுகள் எதையும் நான் எழுதுவதில்லை.
  நல்ல பதிவு.

  ReplyDelete
 4. உலகத்துல எதுக்கும் மாடரேஷன் வேணும்.. கரெக்ட்டா.. அ.அப்பா.. ;-)

  ReplyDelete
 5. மாடரேஷன் வச்சிருக்கவங்கல்லாம் (என்னை மாதிரி) பிரபல பதிவர்கள்னு மட்டும் சொல்லிக்கிறேன்!! எப்ப கல்லு வரும்னு தெரியாதே.. :-((((((

  ReplyDelete