Tuesday, December 20, 2011

உரிமைக்குரல்!

 எங்கள் ஊர் டூரிங் டாக்கிஸ்யில் மண் தரையில் அமர்ந்துப் பார்த்த முதல் எம்ஜிஆர்  படம் 'உரிமைக்குரல்'. அப்பொழுது, உரிமைக்குரல் என்றால் எனக்கு பொருள் புரிந்ததாக நினைவில்லை. ஆனால், இப்பொழுது முல்லைப் பெரியாறு விஷயத்தில் 'டேம் 999' படம் , ஒட்டு மொத்த தமிழக மக்களின் உள்ளங்களில் அணை குறித்த  'உரிமைக்குரல்' ஐ  ஓங்கி ஒலிக்க செய்திருப்பதை உணர முடிகிறது.             


                                                             


முல்லைப் பெரியாறு என்றால் 'முல்லைப் பெரியார்' என்று நினைத்திருந்தேன். இப்பொழுதான், அது முல்லை ஆறும், பெரிய ஆறும் சேருமிடத்தில் கட்டப்பட்டதால்  அந்தப் பெயர் என்று விளங்கிக் கொண்டேன். 'முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருகிறது. அப்படி எனில், அணை உடைந்தால்,  தமிழ்நாடு தானே பாதிப்படையும். பின், ஏன் கேரளா அழிந்து விடும் என்கிறார்கள்' என்று என்  மனதில் அடிக்கடி  ஒரு சந்தேகம் வந்து, அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும்.  



இப்பொழுது, பத்திரிகைகள், வலைப்பூக்கள், வீடியோ படங்கள் மூலமாக, தமிழகத்தில் உள்ள சிவகிரி சிகரத்தில் பெரியாறு தோன்றுவது முதல், பிறகு அது  முல்லை ஆற்றுடன் சேருமிடத்தில்.  பென்னிகுக்-யின் தியாகத்தால் கட்டிய அணையில் தண்ணீரை தேக்கி, மலையில் சுரங்கம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பப்படுவது முதல்,  வரலாற்றோடு,  அதை இன்றைய  கேரள அரசியவாதிகள் எப்படி அரசியலாக்கினர் என்பது வரையும். தமிழகத்தின் நியாத்தையும், இதுநாள் வரை நான் அறியாத பல விஷயங்களையும் அறிந்துக் கொண்டேன்.  இந்த அணையில்  104 அடி தண்ணீர் அப்படியே இருந்தால்தான், அதற்கு மேல் உள்ள தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் எனபதும் நாம் அறிய வேண்டிய ஒன்று.

நடப்புக்கு வருவோம், கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் கேரள எல்லையை நோக்கி எழுச்சியுடன் ஊர்வலம் போவதும், காவல்துறையினர் வழிமறித்து அனுப்புவதையும் ஊடங்கங்கள் வழியாக அறிவோம். இதற்கிடையே சிலர் இங்கிருக்கும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க கேரள மக்களின் பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளை சேதப்படுத்துவது வருத்தமளிக்கும் செயலாகவே உள்ளது. அதை செய்பவர்களில் சிலர் சட்டம் படித்த வழக்கறிஞர்கள் என்று பத்திரிகையில் படிக்கும் பொழுது அந்த வருத்தம் இன்னும் கூடுகிறது.

இன்றைய தினம் நாட்டில் நியாயம் கிடைக்க நாம் அனைவரும் செல்ல வேண்டிய  இடம் நீதிமன்றம் என்றாகிவிட்டது. நாமெல்லாம், நீதிமன்றத்தை நம்பும் பொழுது, ஏன் இந்த வழக்கறிஞர்கள்  நீதி மன்றத்தை நம்பாமல், இவர்களே சட்டத்தை கையிலெடுக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை? கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியவர்கள், ரோட்டில் உருட்டுக் கட்டையுடன் போராடுவதை என்னவென்று சொல்வது?  இவர்களின் இம் மாதிரியான நடவடிக்கைகள் தொடர்ந்தால்,  வழக்கறிஞர்களின்  மீதும்,  நீதி மன்றங்களின் மீதும் பொது மக்களுக்கு எவ்விதத்தில் நம்பிக்கை வரும்? திரு. டிராபிக் ராமசாமி  கட்டையை எடுக்கொண்டு மிரட்டியா ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட வைத்தார்?  கோர்ட் மீது, அவர் வைத்துள்ள நம்பிக்கை, சட்டம் படித்த இவர்களுக்கு  ஏன் இல்லை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு , இவர்களின் சட்ட அறிவு உதவினால் நன்றாக இருக்குமே?!

காவிரி நீர் பிரச்னையின் போது கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்தான் நமக்கு பிரச்னை செய்கிறார்கள். கேரளத்தை சார்ந்தவர்கள் நல்லவர்கள், அவர்கள் நமக்கு  பிரச்னை கொடுப்பதில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால், அவர்களின் இப்போதைய பிடிவாதம் மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. 

எங்கோ பிறந்து, இங்குள்ள மக்கள் பசியால் வாடக்கூடாது  என்பதற்காக பல துன்பங்களை அனுபவித்து அணையைக் கட்டிய பென்னிகுக் -யின் தியாகத்தை நினைத்துப் பார்த்து, கேரளத்தவர்கள் மனம் மாற வேண்டும். 'கேரளத்தவர்களின் மனதை மாற்றி, நல்ல புத்தியை அவர்களுக்கு கொடுக்கும் வரை. உன்னை வந்து வழிபட மாட்டோம்' என்று தமிழக ஐயப்பசாமிகள் இங்கிருந்தபடியே ஐயப்பனிடம் கோரிக்கை வைக்கலாம்.

தமிழக அரசியல் கட்சிகள் 'சுயநல அரசியல்' லாபம் பார்க்காமல், வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓர் அணியில் நின்று தமிழகத்திற்கு நியாயம்  கிடைக்க உரிமைக்குரல்  கொடுக்க வேண்டும். அதுதான் பென்னிகுக் என்ற தன்னலமற்ற மாமனிதனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

.

13 comments:

  1. //ஏன் இந்த வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தை நம்பாமல், இவர்களே சட்டத்தை கையிலெடுக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை?//

    அவர்களுக்கு உண்மை தெரியும் தோழர்..

    ReplyDelete
  2. இது அனைத்து பிரச்சினைகளையும் திசை திருப்பும் நடவடிக்கை..

    ReplyDelete
  3. பொதுவில் மனித மனங்கள் மிகமிகக் குறுகி விட்டன என்பதுதான் நிஜம்!

    ReplyDelete
  4. இந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் என கவலையா தான் இருக்கு

    ReplyDelete
  5. மத்திய அரசு விழிக்கும்போதுதான் விடை கிடைக்கும்..


    நம் தளத்தில்

    செத்தபின்புதான் தெரிந்தது..

    ReplyDelete
  6. suryajeeva said...

    //அவர்களுக்கு உண்மை தெரியும் தோழர்..//

    எந்த உண்மை?!

    மிக்க நன்றி சார்?

    ReplyDelete
  7. suryajeeva said...

    //இது அனைத்து பிரச்சினைகளையும் திசை திருப்பும் நடவடிக்கை..//

    ஒண்ணுமே புரியல சார்!

    ReplyDelete
  8. கணேஷ் said...

    // பொதுவில் மனித மனங்கள் மிகமிகக் குறுகி விட்டன என்பதுதான் நிஜம்!//

    உண்மைதான் சார்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    // ம் ...//

    நன்றி சார்.

    ReplyDelete
  10. மோகன் குமார் said...

    //இந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் என கவலையா தான் இருக்கு//

    ஆமாம் சார், எல்லோருக்கும் கவலையாத்தான் இருக்கு.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  11. மதுமதி said...

    //மத்திய அரசு விழிக்கும்போதுதான் விடை கிடைக்கும்..//

    ம்...

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  12. தங்கள் ஆதங்கமே பலருக்கும். நல்லது நடக்கக் காத்திருப்போம்.

    ReplyDelete