Thursday, January 12, 2012

இதுவல்ல தீர்வு...!

தூத்துக்குடி பெண் டாக்டர் சேதுராமலட்சுமி, வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதும். அதன் பிறகு நடந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் அறிந்ததுதான்.  ஆனால், இந்த சம்பவம் எந்தளவுக்கு சமூக சீர்கேட்டை உருவாக்கும் என்பதுதான் நமது சிந்தனை. 

நோயாளி  இறந்ததற்காக சிகிச்சையளித்த மருத்துவர் படுகொலை செய்யப்படுவது எனக்குத் தெரிந்து இது முதல் நிகழ்வு. இச் செய்தியை கேட்டவுடன்  என்னுடைய இதயம் சில வினாடிகள் நின்றுவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த செய்தியை என்னால் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  

இந்த நிகழ்வால்,  இனி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம். அதனால், தரமான மருத்துவர்களின் சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்  மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். பலர், பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் மருத்துவ படிப்பில் சேர்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

அப்படி சேர்ந்தவர்களும் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  எம்.பி.பி.எஸ். மட்டும் இன்றைய சூழலில் போதாத ஒன்றாக உள்ளது.
எம்.பி.பி.எஸ். முடித்த அனைவருக்கும் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே, வாய்ப்பு கிடைத்து மேற்படிப்பு முடித்துவிட்டு வந்தாலும்,   தனியாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதும் நடுத்தர வர்க்க மருத்துவர்களால் இயலாத நிலையில் உள்ளது.

எல்லாவற்றையும்  புறம்தள்ளிவிட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் மூலம் உயிர்க் கொல்லி  நோய்கள்  தொற்றிக் கொள்ளும் அபாயமும் அதிகமாகி வருகிறது.  நுகர்வோர் நீதிமன்றத்தை எதிர்கொள்வது இன்னுமொரு பெரிய சவால்.
இம் மாதிரியான சூழ்நிலைகள் மருத்துவர்களுக்கு  மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

சரி, மருத்துவர்களுக்கு என்ன, அவர்களுக்குத்தான் பணம் கிடைக்கிறதே என்று கூட சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மருத்துவர்களுக்கு பணம் கிடைப்பது
உண்மைதான். ஆனால், எல்லோர் நிலையம் அப்படி அல்ல. மேலும் அவர்கள் பணம் சம்பாதிப்பதாக எடுத்துக் கொண்டாலும். அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம். முன்பெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமாயின் டாக்டருக்கு படித்தால்தான் முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இன்று மருத்துவர்களை விட மற்ற துறைகளில் உள்ளவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சில  நாட்களுக்கு  முன், என்னுடைய  கண்ணில் ஒரு துகள் விழுந்துவிட்டது. இரவு முழுதும் தாங்க முடியாத வேதைனையில் தவித்தேன். மேலும், கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.  மறுநாள் காலை மருத்துவர் அந்தத்  துகளை எடுத்த மறு வினாடியே என்னுடைய வேதனை காணாமல் போய்விட்டது. அப்பொழுது அந்த மருத்துவர் எனக்கு கடவுளாகத் தெரிந்தார்.  பல சமயங்களில் மருத்துவர்கள் எனது வியாதியை குணப்படுத்தி இருந்தாலும்,
இதற்கு முன் எனக்கு அப்படி தோன்றியதில்லை. 'மருந்துக் கொடுக்கிறார்கள், அதனால் நோய் சரியாகிறது. அப்படியெனில், அந்த மருந்துதான் கடவுள் என்கிற மனப்பான்மை எனக்கு இருந்திருக்கலாம்' என்று நினைக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் உண்மையான சேவை மனப்பான்மையுடன் வைத்தியம் செய்யும் மருத்துவரை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் தங்களை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எது எப்படியோ, தூத்துக்குடி நிகழ்வு மீண்டு கற்பனையில் கூட நடக்கக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

5 comments:

 1. காசு பணம் நிறைய சம்பாதிக்கணும்ன்னாக்கூட கைராசி டாக்டர்ன்னு பேரெடுத்தாத்தான் முடியும். வெறுமே டாக்டர்னு டிகிரி வாங்கினா மட்டும் சம்பாதிச்சுட முடியாது.

  அதேமாதிரி இப்பல்லாம் பசங்களும் டாக்டர் படிப்புன்னா கொஞ்சம் யோசிக்கறதும் உண்மைதான். படிச்சு முடிச்சு ப்ராக்டீஸ் ஆரம்பிச்சு, கைராசி டாக்டர்ன்னு பேரெடுத்து, லைஃப்ல செட்டில் ஆகறதுக்கே குறைஞ்சது பத்துப் பதினஞ்சு வருஷம் ஆகிடுது. அதே சமயம் இவங்க நண்பர்கள் குழந்தையும் குட்டியுமா எப்பவோ செட்டில் ஆகிடறாங்க.

  ReplyDelete
 2. நம்ம வலி, வேதனை சரி செய்யும்போதுதான் டாக்டர்களின் பெருமை நமக்கு புரிய வருது டாக்டர்களிலும் நல்லவங்களும் அல்லாதவங்களும் கலந்து தான் இருக்காங்க. பெருமைக்காக டொனேஷன்லாம் கட்டி படிப்பவங்க திரும்பவும் அந்தபணத்தை சம்பாதிப்பதிலேயேதான் குறியா இருப்பாங்க. சேவை மனப்பான்மையுடன் தொழிலில் இறங்குபவங்க பணத்தை பெரிதாகவே மதிப்பதில்லை. நோயாளியின் குறை தீர்ப்பதிலேயே கவனமா இருப்பாங்க.

  ReplyDelete
 3. மிக சரியான பதிவு சார். உண்மையான கருத்துகள்

  ReplyDelete
 4. இந்தச் சம்பவம் நடந்தது எங்கள் ஊர் பக்கத்தில். அன்று ஊரில், காலையில் மக்கள் வெளியே வரவே பயப்பட்டார்கள். சின்ன சின்ன கலவரம், பஸ்ஸை கல் எறிந்து தாக்கினார்கள். ஒரு நண்பர் காலையில் மதுரையில் இருந்து வந்து விட்டார். இரவு மதுரை செல்ல வேண்டும். மாலை 7 மணிக்கு கிளம்பலாம் என்று பார்த்தால் எந்த பஸ்சும் எடுக்கவில்லை. 10 மணி வரை பார்த்து விட்டு புகை வண்டியில் அனுப்பி வைத்தேன். நாங்கள் பட்ட அவஸ்தை இருக்கே! சொல்லி மாளாது.
  மருத்துவர்களைப் பற்றி உண்மையாக சொல்லி உள்ளீர்கள். நன்றி நண்பரே!
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  அன்புடன் அழைக்கிறேன் :
  "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

  ReplyDelete
 5. வருத்தம் தரும் நிகழ்வு. லக்ஷ்மி அவர்கள் சொல்வதையும் ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete