Sunday, December 14, 2025

'போத்து' நாவல் வெளியீடு!

சென்னை, தொழிலதிபர் திரு குணசேகரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் அன்பளிப்பாக 'ஒரக்குழி' நாவலை அளித்தேன். அதனை, அன்று இரவே ஒரே மூச்சாக  திரு குணசேகரன் அவர்கள் படித்து முடித்ததாக தெரிவித்தார்.  இரண்டு நாட்களுக்கும் மேலாக திருமண வேலையில் மூழ்கிய களைப்பையும் தாண்டி  இது சாத்தியமா என்கிற சந்தேகம் என் மனதினுள் எழுந்தபோது, நாவலைப் பற்றி அவர் விரிவாகப் பேச ஆரம்பித்ததும் நம்பிக்கை வந்தது. 

எனது சிறு வயதில் அறிந்து, தற்போது மறந்திருந்த தஞ்சாவூர் வட்டார வழக்குகளை எனக்கு நினைவூட்டிய நாவல் ஓரக்குழி. மேலும், பல்வேறு தளத்திலிருந்தும் பாராட்டுதலைப்பெற்ற ஒரக்குழி நாவலின் ஆசிரியர் திரு வானவன் அவர்களிடமிருந்து மற்றும் ஒரு படைப்பாக இன்று வெளிவருகிறது 'போத்து' என்கிற நாவல். இது ஒரக்குழியின் சாதனையை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதோடு, பல்வேறு சிறப்புகளையும் சாதனைகளையும் புரிய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்💐💐💐

Wednesday, December 3, 2025

'பூ' மகாலிங்கம் மறைவு...!

தமிழக அளவில் பிரபல ஜோதிடராகத் திகழும்  வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம்  திரு திருப்பதி(எ)ம.திருப்பதிராஜன் மற்றும்  திரு ம. பாலாஜி ஆகியோரின் 
தந்தையார் திரு 'பூ மகாலிங்கம்' (எ) திரு. இரா. மகாலிங்கத்தேவர் அவர்கள் 03.12.2025 புதன்கிழமை மாலை இயற்கையெய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் மனவேதனையடைகிறேன்.  

இவர், பல ஆண்டுகள் முத்துப்பேட்டையில் பூக்கடை நடத்தி வந்தவர். 

திரு திருப்பதி அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை, குரோம்பேட்டையில் வசித்தபோது,  அங்கு வரும்போதெல்லாம், பேத்தியை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கும் வருவார்.  அப்போது, அவருடன் நிறைய ஊர் தகவல்களை  பேசிக்கொண்டிருந்தது இப்போது நினைவலைகளில் வந்துசெல்கிறது. அதன் பிறகு, அவருடன் பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

அன்னாரை இழந்துவாடும்  குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.