Saturday, August 29, 2026

குரோம்பேட்டை திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார் மறைவு ...!

2007ஆம் ஆண்டு நாகை அரசு மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாறுதலில் வந்த புதிதில், ஒருநாள் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர் ஒருவர், உயரதிகாரிகள் வரும்போது எச்சரிப்பது போல், “அய்யர் வர்றார்” என்று என்னை எச்சரித்துவிட்டு சென்றார்.

நான் எட்டிப் பார்த்தபோது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். பின்னர், மற்றவர்களிடம் விசாரித்தபோது, அவர் பெயர் திரு. V. சந்தானம் என்பதும், அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதும் தெரியவந்தது. மேலும், மருத்துவமனையில் காணப்படும் குறைகளை உரிய உயர் அதிகாரிகளிடம் புகாராகத் தெரிவித்து விடுவார் என்பதால்தான் அந்த ஊழியர் என்னை எச்சரித்தார் என்பதையும் அறிந்துகொண்டேன்.

இது நடந்த ஓரிரு வாரங்களுக்குள், ‘புதிய தலைமுறை’ இதழில் திரு. சந்தானம் அய்யா குறித்து மூன்று பக்கங்களுக்கு அவரது வாழ்க்கை வரலாறு வெளியாகியிருந்தது. அதுகுறித்து நான் எழுதிய வாசகர் கடிதமும் அடுத்த இதழில் வெளியாகியிருந்தது.

அதன்பிறகு அய்யாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வாசகர் கடிதம் குறித்து தெரிவித்தேன். அதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த அவர், என்னைப் பற்றியும் விசாரித்து அறிந்துகொண்டு, நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது வீட்டிற்கு அழைத்தார். இப்படியாக, 19 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்களது நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு போன்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தகவல்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் பத்திரிகைகளுக்கும், முதலமைச்சர், சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் அமைச்சருக்கும்  கடிதங்கள் எழுதி, நோயாளிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை மருந்து, மாத்திரைகள் வழங்கும் நடைமுறையைக் கொண்டுவருவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. 

இன்றளவும் என்னை மற்றவர்களிடம் மிகுந்த உயர்வாக அறிமுகப்படுத்தி வைப்பார். அவ்வாறு அவர் மூலம் அறிமுகமானவர்களில் மிகவும் பிரபலமான மறைந்த திரு. டிராபிக் ராமசாமி அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த திரு. சங்கரய்யா அவர்களின் மகன் திரு. நரசிம்மன் அவர்களும் அடங்குவர்.

திரு. சந்தானம் அய்யாவின் சமூகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அவரைச் சந்திக்க வரும் நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துவந்தவர் திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார். 

மேலும், அடிக்கடி அவரது இல்லத்தில் நடைபெறும் சமூக சேவையில் சிறந்த விளங்கும் எளிய மக்களுக்கான பாராட்டு விழாக்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு, தனது கையால் உணவு பரிமாறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நான் அறிந்த வரையில், இந்தத் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டதில்லை. இருவரும் 80 வயதைக் கடந்த நிலையிலும், ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக வாழ்ந்து வந்தனர்.

திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார் 28.08.2026 அன்று காலை இயற்கை எய்தினார் என்ற தகவலை அறிந்து, நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
அப்போது, அய்யா திரு. V. சந்தானம் அவர்கள் ஒரு குழந்தையைப் போல் அழுதது, அவர்கள் இருவரும் வாழ்ந்த அன்பான இல்லற வாழ்க்கைக்கு ஒரு சாட்சியாக அமைந்தது.

அன்புத் துணைவியை இழந்து துயரத்தில் வாடும் திரு. V. சந்தானம் அய்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தப் பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் சக்தியையும் இயற்கை அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.