
கிம் கிளைஸ்டர் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் டென்னிசில் இருந்து காயம் காரணமாக ஓய்வு பெற்றுச் சென்றார். பிறகு,ஜூலை 2007 -ல் அமெரிக்க பேஸ்கட்பால் வீரரை திருமணம் செய்துகொண்டார். பிப்ரவரி 2008-ல் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். (ஏற்கனவே, டிசம்பர் 2003-ல் ஆஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட்-ஐ திருமணம் செய்து அக்டோபர் 2004 -ல் அந்த திருமணம் முறிவடைந்ததை, இங்கு சொல்லத் தேவையில்லை) இந்நிலையில் மீண்டும் 2009 -ல் டென்னிஸ் விளையாட்டில் களம் புகுந்து இன்று பட்டங்களை வென்று கொண்டிருக்கிறார்.
இவர் வாழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால் அதன் பிறகு பெண்களுக்கு எல்லாமே முடிந்து விட்டது என்று இன்று படித்த பெண்கள் கூட நினைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தனது உடல் நலத்தின் மீது அக்கறை கொள்வதில்லை. திருமணம் வரை சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கும் பெண்கள், அதன் பிறகு வீட்டில் முடங்க தயாராகி விடுகிறார்கள்.நல்ல திறமையோடு இருக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு முடங்க வேண்டிய அவசியமென்ன? அதுவும், ஒரு குழந்தைப் பிறந்துவிட்டால், தான் பார்க்கிற வேலை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட்டு குழந்தை குடும்பம் என்று மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனதிற்குள் சோர்வு ஒளிந்திருக்குமோ? சில ஆண்கள் கட்டாயப்படுத்தி பெண்களை வீட்டில் முடக்குவது உண்டு. "பொண்ணு பி. ஈ. படிச்சிருக்கணும் ஆனா... வேலைக்கு போகக்கூடாது" என்று சொல்ற மணமகனும் உண்டு. அதற்கு, ஏன் ஒரு கலை அல்லது அறிவியலில் பட்டம் பெற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க கூடாது?
திருமணமோ அல்லது குழந்தை பெற்றெடுத்து விட்டாலோ தங்களுக்கு எல்லாமே முடிந்துவிட்டது. இனி டி.வி.சீரியல், மார்கெட் செல்வது, மாலையில் அரட்டை என்பதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடுகிறார்கள். ஒரு சில பெண்கள் விதிவிலக்காக இருப்பதையும் நான் அறிவேன். கிம் கிளைஸ்டர் வாழ்க்கையை அறிந்த பிறகாவது திருமணம், குழந்தை பிறப்பு போன்றவை பெண்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்கிற உண்மையை பெண்களும் ஆண்களும் உணர வேண்டும். அப்படி, நமது பெண்கள் எழுச்சிப் பெற்றால், இந்தியாவின் மனித வளத்திற்கு எந்த நாடும் இணையாக முடியாது.
.