Showing posts with label அரசு ஊழியர். Show all posts
Showing posts with label அரசு ஊழியர். Show all posts

Monday, August 31, 2020

கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்படுவது, அடிக்கடி நடப்பதுதான். ஆனால், இந்த சம்பவததை படித்தவுடன், அப்படி யதார்த்தமாக கடந்துபோக முடியவில்லை.

கோயம்புத்தூர் அடுத்து, சூலூர் அருகேயுள்ள ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர், திரு விஜயகுமார் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
இவரின் வயது 24. கடந்த ஆண்டுதான் பணியில் சேர்ந்துள்ளார். 

நிச்சயமாக திறமையானவராகவும், உழைப்பாளியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடியும். பத்தாம் வகுப்பு தகுதிக்குரிய 'விஏஓ' பதவிக்கு இன்றையதினம், பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வரை தேர்வெழுதி பணியில் சேர்ந்துள்ளனர். நான் அறிந்தவரையில், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நேர்மையாக பணியாற்றுவதாக பலரும் சொல்லக் கேட்டு மகிழ்சியடைந்திருந்தேன். 

அந்த இளைஞர், ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று நினைக்கையில், மிகவும் வருத்தமாக உள்ளது. அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
 அந்த இளைஞரை நேர்மையாக பணியாற்றும்படி அறிவுரை சொல்லிருக்கவேண்டியது, அவரின் மூத்த அலுவலர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் கடமையாகும். அப்படி அறிவுரை சொல்ல நாம் தவறுவதால்தான், இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. மேலும், இந்த இளைஞர் பிடிபடாமல் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், இன்னும் 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்திருப்பார். அவருடைய அலுவலகத்திலிருந்து அதுவரை லஞ்சத்தை விரட்ட முடியாது என்பதை நினைக்கும்போது வேதனை இன்னும் கூடுகிறது.

அனைவரும், அவரவர் வருமானத்திற்கேற்ற செலவை செய்து நியாயமாகவும், நேர்மையாகவும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம்!

Monday, September 13, 2010

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமா?

கடந்த ஆண்டு  தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பளக்கமிஷன் அமுல்படுத்தப்பட்டது. அதில்  குறைபாடுகள்  உடையவர்களுக்கு ஒரு நபர்  கமிஷன் அமைக்கப்பட்டு குறைகள் நிவர்த்திச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்பளக்க கமிஷனைப் பற்றியோ அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றியோ நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

ஆறாவது சம்பளக்கமிஷன் மூலம் தமிழக அரசு ஊழியர்கள்  அனைவரும் பயனடைந்தனர். ஆனால், தற்சமயம் ஒரு நபர்  கமிஷன்  சிபாரிசின் மூலம்  இரண்டு  லட்சம் பேருக்குத்தான் பயன்கிடைக்கும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால், ஏற்கனவே அதிகப்படியான பயனடைந்தவர்கள் கூட  'இப்பொழுது தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை' என்று புலம்புகிறார்கள்.


என்னுடன் பேருந்தில் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டதிலிருந்தும், சில நண்பர்களுடன் நான் பேசியதிலிருந்தும்
 நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான்,  'நம்மைவிட அவன் அதிகமாக வாங்குகிறான், இவன் அதிகமாக வாங்குகிறான்,எனக்கும் அவனுக்கும் நூறு ரூபாய் மட்டும்தான் கூடுதல்'  போன்றவைகளே 
இவர்களுடைய வேதனை!  'தனக்கு என்ன வேண்டும் என்பதைவிட மற்றவர்களுக்கு  என்ன கிடைக்கிறது'  என்பது மட்டுமே இவர்களுக்கு பிரச்சினை. இது நடுத்தரமாக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் மனநிலை. 



கூடுதல் சம்பளம் வாங்கும் ஊழியர்களில் சிலரோ , மென்பொருள் பொறியாளர்களின் சம்பளத்துடன்  ஒப்பிட்டு வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். சம்பளத்தை மட்டும்தான் ஒப்பிட்டு பேசுகிறார்கள். வேலை, வேலையின் தன்மை, அறிவு, திறமை, உழைப்பு இவைகளோடு ஒப்பிட்டுக் கொள்வதில்லை!



போதும் என்ற மனம், அரசு ஊழியர்கள் பலரிடமில்லை  என்று  நினைக்கையில் மிகவும் வேதனையாக உள்ளது. இந்த மன நிலையால்தான் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் லஞ்சம் வாங்குவதை இவர்கள்  விடுவதாயில்லை.
படித்த, அறிவார்ந்த அரசு ஊழியர்களே  மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளவதை என்னவென்று சொல்வது. 



கடந்த வருடம்     மகிழ்ச்சியாக இருக்க..! என்பது குறித்து ஒரு பதிவு எழுதினேன். படித்துப் பார்க்கவும்.   
       

இவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கினால் மட்டும் போதாது,   நல்ல சிந்தனை வளர 'கிடைப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வது'  குறித்து சிறந்த அறிஞர்களைக் கொண்டு  கற்றுக்கொடுக்க  வேண்டும். இது மட்டுமே தனது  ஊழியர்களுக்கு, தமிழக  அரசு உடனடியாக செய்ய வேண்டியது.

.