Monday, October 3, 2011

எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!


கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள  எம்.ஐ.டி  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரியை மூடியுள்ளார்கள். இதற்கு காரணமாக சொல்லப்படுவது, 'ராக்கிங்'யில் ஈடுப்பட்ட  மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், மாணவர்கள் விடுதி அறையை முதல்வர் சோதனையிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை மாற்றச் சொல்கிறார்கள் என்று ஒரு செய்தியும். முதல்வர் ஒரு அடாவடி பேர்வழி, அவர் மாணவர்களையும் பெற்றோரையும் மட்டமான வார்த்தைகளால் திட்டுகிறார். செல்போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்,  மாணவர்களை சிறைக் கைதிபோல் நடத்துகிறார். அதனால், அவரை மாற்ற வேண்டும் என்பது மாணவர்களின் தரப்பாகவும் சொல்லப்படுகிறது.


எம்.ஐ.டி. யின்  61 ஆண்டு கால வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
எம்.ஐ.டி.யில் இடம் பிடிக்க 200 க்கு  199  மேல் 'கட் ஆப்' மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்ற, கல்வியின் மீது அக்கறையுள்ள மாணவர்கள்,  இன்று கிடைக்கும் சிறு சந்தோஷங்களுக்கு மனதை பறிகொடுக்காமல்,  தொடர்ந்து நல்ல முறையில் அமைதியான சூழ்நிலையில் கல்விக் கற்று, ஆராயிச்சியின்  மூலம் பல அறிய கண்டுப்பிடிகளை நிகழ்த்தி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைத் தேடித்தர வேண்டும்.  அதற்கு நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுய கௌரவத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரச்சினையைப் புரிந்துக் கொண்டாலே போதும்!


சரி, தலைப்புக்கு வருவோம். "எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!" இந்த வாக்கியத்தைக் கேட்காத  பெற்றோரும், பேசாத பிள்ளையும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு அனுபவத்தை பிள்ளைகளிடம் பகிர்ந்துக்கொள்ள நினைத்து பேசினால், "சும்மா, மொக்கையா பேசாதீங்க"  என்று பதில் கிடைக்கும்.
இவர்களின் உலகம்தான் என்ன?  எதைத்தான் விரும்புகிறார்கள்? என்று பார்ப்போம். 

இன்றைய 'டீன் ஏஜ்' பிள்ளைகளின் உலகம் சுருங்கிவிட்டது. பெரும்பகுதியினற்கு செல்போனே உலகம் என்றாகிவிட்டது. தனது வயதுடைய நண்பர்களுடன்  செல்போனில் பேசுவது அல்லது எஸ் எம் எஸ் அனுப்புவது. கம்பியூட்டரில் ஆன் லைன் கேம்ஸ் விளையாடுவது, facebook போன்ற சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பது. இவைகளை எப்பொழுதாவது செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. இன்னும் கொடுமை தூங்கும் போதும் தலைக்கு அருகே செல்போனை வைத்துக் கொள்வது. 

நான் பள்ளி விடுதியில் படித்தப் பொழுது, சில மாணவர்கள் ஒருநாள் அனுமதியின்றி சினிமாவிற்கு சென்று வந்ததற்கு தலையில் பெட்டியை வைத்துக் கொண்டு விடுதியை சுற்றி வரச் சொன்ன விடுதிக் காப்பாளர் நினைவுக்கு வருகிறார். அந்தக் காப்பாளர் இப்பொழுது பணியில் இருந்தால்,  24 மணி நேரமும் பொழுதை வீணடிக்கும் மாணவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பார்? 

அண்மையில் ஒரு மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், தனது பிள்ளைகள் குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது மகளிடம் "போய் படி" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, " stop mom, i know how to read!" என்று பதில் வந்ததாம். அப்படி, சொன்ன பெண்ணின் வயது ஏழு!

படம் உதவி: கூகிள்.

15 comments:

  1. கவலையளிக்கும் பதிவு
    இறுதியாக முத்தாய்ப்பாக அந்த ஏழுவயது
    பெண் குறித்து சொல்லிப் போன விஷயம்
    படித்து முடித்து கொஞ்ச நேரம் எதுவும் ஓடவில்லை
    அந்தப் பெண்ணின் எதிர்காலம்
    அதுபோன்றகுழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
    பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. Ramani said...

    //கவலையளிக்கும் பதிவு//

    எனக்கு வந்தக் கவலையின் வெளிப்பாடே இந்தப் பதிவு!

    //இறுதியாக முத்தாய்ப்பாக அந்த ஏழுவயது
    பெண் குறித்து சொல்லிப் போன விஷயம்
    படித்து முடித்து கொஞ்ச நேரம் எதுவும் ஓடவில்லை//

    ஆமாம் சார், அவரிடம் இரண்டு முறை கேட்டுத்தான் உறுதி செய்துக் கொண்டேன். எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    //அந்தப் பெண்ணின் எதிர்காலம்
    அதுபோன்ற குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?//

    அந்தப் பெண் மட்டுமல்ல, இப்பொழுது குழந்தைகளின் வயதுக்கு மீறிய பேச்சு அதிகமாகிவிட்டது. இது நன்மையில் முடிய வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

    //பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு//

    நம் வீட்டுக் குழந்தைகள் மட்டும் இப்படி நடந்துக் கொள்கிறார்களே என்று புலம்பும் பெற்றோருக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று எழுதினேன்.

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  3. கவலை தருவதாகவே உள்ளது வளரும் தலைமுறையின் போக்கு.

    ReplyDelete
  4. வருத்தத்தை தரும் பதிவு

    என்ன செய்வது

    ReplyDelete
  5. ஸ்டாப் மாம்!! ஐயகோ!!! என்ன செய்வது? :-)

    ReplyDelete
  6. ராமலக்ஷ்மி said...

    //கவலை தருவதாகவே உள்ளது வளரும் தலைமுறையின் போக்கு.//

    இன்றைய நிலையில் பெற்றோருக்கு ரத்த அழுத்தம் கூடுவதற்கு, பிள்ளைகளின் இந்தப் போக்கும் ஒரு காரணமாக உள்ளது.

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  7. வைரை சதிஷ் said...

    //வருத்தத்தை தரும் பதிவு

    என்ன செய்வது//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. RVS said...

    // ஸ்டாப் மாம்!! ஐயகோ!!! என்ன செய்வது? :-)//

    என்ன செய்வது...?! ஒன்றும் புரியவில்லை சார்.

    நன்றி சார்.

    ReplyDelete
  9. ம்ம்.. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா, பெற்றொர்களும் கொஞ்சம் பொறுப்பா இருந்துகிட்டா (டிவி போன்றவைகளைத் தவிர்ப்பது, நண்பர்களாகப் பழகுவது போல) பலன் இருக்கும்.

    ReplyDelete
  10. //இப்பொழுது பணியில் இருந்தால், 24 மணி நேரமும் பொழுதை வீணடிக்கும் மாணவர்களுக்கு என்ன தண்டனை//

    அய்யோ, தண்டனையைக் கொடுப்பானேன், அப்புறம் அந்த மாணவன் தூக்கில் தொங்க, இவர் சிறைக்குப் போக.. எதுக்கு வம்பு, நீ எப்படியும் போ என்றிருந்துவிடுவார்!! :-(((((

    ReplyDelete
  11. ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறது இளைய தலைமுறை.நல்ல பகிர்வு.நல்ல ரோல்மாடல்கள் இல்லை.

    ReplyDelete
  12. ஃஃஃஃஃஒரு அனுபவத்தை பிள்ளைகளிடம் பகிர்ந்துக்கொள்ள நினைத்து பேசினால், "சும்மா, மொக்கையா பேசாதீங்க" என்று பதில் கிடைக்கும். ஃஃஃஃ

    ஆனால் எப்பவோ ஒரு நாள் உணருவாங்கல்லியா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

    ReplyDelete
  13. ஹ ஹா, அருமை... குழந்தைகளை நம்பி, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் புலம்பும் ரகம்.... குழந்தைகளிடம் சொல்லி பாருங்கள், உன் வேலைகள் அனைத்தும் முடித்து விட்டால் பொழுதை போக்கி கொள் என்று.. எள் என்றால் எண்ணையாக இருப்பார்கள்... எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு கதை புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறார்கள்...

    ReplyDelete
  14. ஹுஸைனம்மா said,

    //ம்ம்.. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா, பெற்றொர்களும் கொஞ்சம் பொறுப்பா இருந்துகிட்டா (டிவி போன்றவைகளைத் தவிர்ப்பது, நண்பர்களாகப் பழகுவது போல) பலன் இருக்கும்.//

    நல்ல ஆலோசனை சொல்லியிருக்கிறீர்கள் மேடம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. shanmugavel said...

    //ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறது இளைய தலைமுறை.நல்ல பகிர்வு.நல்ல ரோல்மாடல்கள் இல்லை.//



    மிக்க நன்றி சார்.

    ReplyDelete