Wednesday, August 12, 2020

நிஜமல்ல கதை...!

அந்த கிராமத்தில் யார் தவறு செய்தாலும் தமிழாசிரியர் மணி அய்யா, தட்டிக்கேட்க தயங்கமாட்டார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் தவறு செய்தால், தன் கையில் எப்பொழுதும் வைத்திருக்கும் பிரம்பால் அடி பின்னி எடுத்துவிடுவார். அதனால், அவர் மீது அனைவருக்கும் பயம். 

ஒரு மாணவனின் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் அபார திறமையும் அவரிடமுண்டு.
இப்போ, கொஞ்சம் வயதாகிவிட்டதால், அவருடைய கோபமும் கொஞ்சம் குறையத்தொடங்கியிருந்தது.

ஒருநாள் அவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு ரவுடியை பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டு  சரமாரியாக அடித்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து அடிப்பதை நிறுத்தும்படி சைகை செய்துவிட்டு வந்த வழியே அவசரமாக திரும்பி சென்றுவிட்டார்.

உடனே, அங்கிருந்தவர்கள் தனது வீட்டிலுள்ள பிரம்பை எடுத்துவந்து  அடிக்கப் போகிறார் என்று பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் கையில் மாலையுடன் திரும்பிவந்தார் மணி அய்யா. "என்ன அய்யா, பிரம்பு எடுத்து வந்து அடிப்பீங்கன்னு நினைச்சோம். இப்படி மாலையோட வர்றீங்க?" என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். அவர் பதில் எதுவும் சொல்லாமல், கூட்டத்தை விலக சொல்லிவிட்டு நேரே ரவுடியின் அருகில் சென்று அவனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு தன் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். பிறகு, சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, "நீங்க எதிர்காலத்தில் இவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு வரிசையில் நின்று மாலைப்போடுவீர்கள். நான், இப்போதே செய்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.

2 comments:

  1. சரியாகத்தான் சொல்கிறார்...தலைவனுக்கு நாமும் இப்போதே வாழ்த்துச் சொல்லிவிடுவோம்..பின்னால் கூட்டத்தில் முடியாது.

    ReplyDelete