Tuesday, August 25, 2020

திருட்டு - விமர்சனம்

நான் தற்சமயம் சென்னையில் வசித்துவந்தாலும் பிறந்ததிலிருந்து  சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்த வேதாரண்யம் பகுதியின் நினைவுகள் என்னை விட்டு முழுவதும் அகலவில்லை.
 
கடந்த வாரத்தில் அப்பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் எனக்கு பெரும் மன வருத்தத்தை அளித்ததோடு, என்னுள்ளிருந்த பழைய நினைவுகளை மீட்டெடுத்துள்ளது.

எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த 1970 - களில், அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில்தான் வசித்தனர். எங்கள் வீடும் அப்படித்தான். கதவெல்லாம் கிடையாது. வாசலில் வைக்கப்படும் தடுப்பிற்கு படல்   என்று பெயர். சும்மா எடுத்து சாத்தி வைத்துவிட்டு வெளியில் செல்வோம். பூட்டு சாவியோ, 
மின்சார விளக்கோ கிடையாது. ஊரே இருட்டாக இருக்கும். ஆனால், திருட்டுப்போய்விடும் என்று பயந்ததில்லை. அப்பகுதி வானம் பார்த்த பூமியென்பதால், பசி பட்டினியெல்லாம் அப்போது சர்வசாதாரணம். இருந்தபோதிலும்,  திருட்டு பற்றியோ, திருடர்கள் பற்றியே எந்த செய்தியும் நான் கேள்விப்பட்டதில்லை. தமிழில் ஆனந்த வருடமாகிய 1975 -ல் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. கஞ்சி வைப்பதற்குகூட அரிசி கிடைக்கவில்லை. அப்போது, எனக்கு பத்து வயதிருக்கும். அன்றைக்கிருந்த பெரியவர்கள், அதற்கு முந்தைய ஆனந்த வருடத்திலும் பஞ்சம் ஏற்பட்டதாகவும் பேசிக்கொண்டனர். அன்றைக்கு அப்படி பஞ்சம் ஏற்பட்டபோதும் திருட்டு சம்பவங்கள் நடைபெறவில்லை.

நிகழ்காலத்திற்கு வருவோம். இன்றைய தினம் பஞ்சமெல்லாம் கிடையாது. பார்க்கும் இடமெல்லாம் மாடி வீடுகள். அனைத்து வீடுகளிலும் குறைந்தது ஒரு வாகனம் உள்ளது. பகலுக்கும் இரவுக்கும் விச்தியாசம் தெரியாதளவிற்கு ஊரே ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. பின் ஏன் இப்பொழுது திருட்டு? 

உழைக்காமல் சம்பாதிக்கவும், ஆடம்பரமாக வாழ வேணடுமென்கிற மனோபாவம் பலரிடம் காணப்படுவதும், எவ்வழியில் சம்பாதித்த பணமாக இருந்தாலும், அதனை  வைத்திருப்பவரைக் கொண்டாடும் மனநிலை மக்களிடத்தில் பெருகிவிட்டதுமே காரணமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 
நடந்த திருட்டு சம்பவம் சாதாரணமாக நடந்ததாக தெரியவில்லை. நன்கு திட்டமிடப்பட்டு நடைபெற்றதாகவே தோன்றுகிறது.
நாய்க்கு விஷம் வைத்தது, மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அப்பகுதியில் புழக்கத்தில் இல்லாதவைகள் என்பதையெல்லாம் அறியும்போது, இதனை சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 
எனினும், காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உடனடியாக, குற்றவாளிகளை கூண்டோடு பிடித்தது பாராட்டுக்குரியது. 

எது எப்படியோ, இனி திருட்டு நடக்காதவாறு காவல்துறையும் பொது மக்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே நமது விருப்பம்.

எந்த ஊராக இருந்தாலும், எந்த விதமான வேலையோ, பெற்றோருக்கு உரிய வருமானமோ இல்லாமல், விலை உயர்ந்த பைக் மற்றும் செல்போனுடன் ஊர் சுற்றும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீது, பொதுமக்களாகி நமக்கு எப்போதும் ஒரு கண் இருக்கவேண்டும். 

வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் CCTV கேமரா பொருத்த முற்படவேண்டும்.
ஊரின் எல்லைகளில் ஊராட்சியின் சார்பில் CCTV கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் திருட்டை தவிர்ப்பதோடு, பெண்களின் பாதுகாப்பும்  உறுதி செய்யப்படும்.

மக்களின் பாதுகாப்போடு, வேதாரண்யம் பகுதியின் நன்மதிப்பையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்குள்ளது என்பதை நினைவில் கொள்வோம்...!

No comments:

Post a Comment