Saturday, August 8, 2020

ஆவி பிடித்தலும் எனது அனுபவும்!

முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எனக்கு ஜலதோஷம் பிடிப்பது வாடிக்கை. அதுவும், குறைந்தது பதினைந்து நாட்கள் சளியால் அவதிப்படுவதோடு ஆண்டிபயாடிக் மற்றும் ஆண்டிஹிஸ்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வதும் வழக்கம். 

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டபோது, ஆவி பிடிக்கும்படி(வேது பிடித்தல் என்றும் சொல்கிறார்கள்) நண்பர்கள் அறிவுரை கூறினர்.

 அவர்களின் யோசனையை செயல்படுத்தும் முன்பு என் நினைவில் வந்தது இதுதான், நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் ஊர் மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் எங்க அப்பாவின்  தலைவலிக்கு வெந்நீரில் டிங்சர் பென்சாயின் ஊற்றி, இரண்டு போர்வையை போட்டு அப்பாவை மொத்தமாக மூடி  ஆவி பிடிக்க சொன்னார்.  அப்போது,
அந்த கடுமையான சிகிச்சை முறை  என்னுள் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது என்பது உண்மை. 
அன்றோடு சரி, அதன் பிறகு அப்பா ஆவி பிடித்து நான் பார்த்ததில்லை.
 எனினும், நண்பர்களின் அறிவுரையை ஏற்று தொடங்கிய ஜலதோஷத்திற்கு ஆவி  பிடிக்கும் பழக்கம்  இன்றுவரை தொடர்கிறது. 

ஆவி பிடிக்கும் பழக்கத்தினால், இரண்டொரு நாளில் குணம் கிடைக்கிறது. மேலும், எனக்கு ஜலதோஷம் பிடிப்பதும் அரிதாகிவிட்டது.  
ஜலதோஷத்திற்கு எந்த மருந்தும் கிடையாது என்பதை சொல்வதற்கு 'மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாட்களிலும், சாப்பிடாமலிருந்தால் ஒரு வாரத்திலும் குணமாகும்' என்பார்கள். அதைப்போலவே, இன்றைக்கு நம்மை பாடாய்படுத்தும் கொரானவிற்கும் எந்த மருந்தும் இல்லை என்பது நாம் அறிந்ததே.

 கடந்த பிப்ரவரி மாதத்தில் வந்த வாட்ஸ்அப் செய்திகளில், "ஆவி பிடித்தால் கொரானாவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் சீனர்கள்  செய்தார்கள்" என்று தெரிவித்தார்கள். தற்போது, ஆவி பிடித்தல் ஒரு சிகிச்சை முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் சிரமப்பட்டு ஆவி பிடிப்பதில்லை. சிறிய துண்டை மட்டுமே பயன்படுத்துவேன். மேலும், என்னால் தாங்க முடிந்த மட்டுமே விட்டுவிட்டு பிடிப்பேன். 
யூகலிப்டஸ் எண்ணெயை மட்டும் ஊற்றி ஆவி பிடிப்பேன். 
இப்போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கையாக தினசரி இரவு ஆவி பிடித்து வருகிறேன்.
நம் ஒவ்வொரு வீட்டிலும் ஆவி பிடிப்பதற்குரிய ஸ்டீமர் மெஷின் இருக்க வேண்டும். ஆவி பிடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வெந்நீர் ஊற்றி பாதிக்கப்பட்டவர்களையும் அறிவேன்!

1 comment: