Monday, August 3, 2020

யார், உன் நண்பன்?

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள்.
அதுமாதிரியே முகநூலிலும் நாம் எழுதுவதும், லைக் போடுவதும், ஷேர் செய்வதும் நம்முடைய மனதின் பிரதிபலிப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. 

நம்முடைய எண்ண அலைகளோடு ஒத்துவருகிற நண்பர்களை இணைத்துக் கொண்டு, கருத்துக்களை பரிமாறிக்கொள்வதே முகநூலில் இணைபவர்களின் நோக்கமாகும். 

ஆரம்பத்தில் முகநூலில் நான் நண்பர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும், நேரடியாக நான் அறிந்தவர்கள் மட்டுமே. பிறகு, பலரிடமிருந்தும் எனக்கு 'Friend request' வர ஆரம்பித்தது. அப்படி வருபவர்களை நான் நட்பு வட்டத்தில் ஏற்றுக்கொள்வதற்கு முன், என்னுடைய நண்பர்கள் எத்தனைப் பேர் அவருடன் நண்பர்களாக உள்ளார்கள் என்பதை வைத்து, அந்த நபரின் நட்பை ஏற்பது குறித்து முடிவெடுப்பேன். 

இன்று முகநூலில் முகம் காட்டாமல் சிலர் கணக்கு வைத்துக்கொண்டு, பலருடன் நண்பர்களாக இணைந்து விடுகிறார்கள். அதாவது,
போலியான('Fack ID') பெயரில் நமக்கு நட்பு அழைப்பு வரும். நாமும் அந்த போலி நபருடன் உள்ள, நமது நண்பர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் நட்பு வட்டத்தில் இணைந்து விடுவோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நண்பர்களை சேர்த்தப்பிறகு, இந்தப் போலிகள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். 

தனி நபர்களுக்கு எதிராகப் பொய்யான பதிவுகளைப் போடுவார்கள். அதைக்காட்டி, அந்த நபர்களிடம் மிரட்டி பணம் பறிப்பார்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய வைப்பார்கள். தங்கள் நோக்கம் நிறைவேறியதும் அந்தப்பதிவை நீக்கிவிடுவார்கள்.
இதில், பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தால், படித்தும் படிக்காமலும் 'லைக்' கோ அல்லது 'ஷேர்'ரோ செய்த நாமும் அந்த குற்றத்திற்கு உடந்தையாகிவிடுவோம்.

 மேலும், சிலர், நம்முடைய தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுவிடுவார்கள். எனவே, இம் மாதிரியான சமூக விரோதிகளுக்கு நம்மை அறியாமலேயே, நாம் துணைபோய் விடுவோம். எனவே, எச்சரிக்கை அவசியம். 

இனி, நம்முடன் நண்பர்களாக இணைபவர்கள் யார், எந்த ஊர், என்ன வேலை, எங்கு படித்தார் போன்ற விபரங்கள் இருந்தால் மட்டுமே நண்பர்களா ஏற்றுக்கொள்ளுங்கள்.

'உனது நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று நான் சொல்கிறேன்' என்பார்கள். சரி, இப்போ, சொல்லுங்க, "உங்க நண்பன் யார்?"

1 comment:

  1. உண்மைதான், கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். இவற்றையெல்லாம் தவிர்த்து விடலாம்.

    ReplyDelete