Thursday, May 12, 2011

எந்தப் படிப்பில் சேரலாம்...?

கடந்தாண்டு நான் எழுதியதுதான் இந்தப் பதிவு. சில பகுதிகளைத் தவிர்த்த பிறகு, இப்பொழுதும் இது சரியாக உள்ளதாகவேத் தோன்றுகிறது. இனி தொடருங்கள்...

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளைப் படிக்க வைத்தாயிற்று, இனி, என்ன படிக்க வைப்பது, எதைப் படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும், சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், பெற்றோர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள், "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அதற்கு அவர்கள்  அளிக்கும் பதில், "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே...?!"  உடனே, நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம், எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும், நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம் சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்பொழுது நானறிந்த சில துறைகளில், சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிந்து வருபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள்) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் படித்தல் நலம்.


எந்தத் துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும், அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு. நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல, அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி திருத்துபவர் முதல் துணி தைப்பவர் வரை, பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை, ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில்க்கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ நினைக்காதீர்கள். (சில பெற்றோர், தனது பிள்ளை யாரும் படிக்காதப் படிப்பை படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்)

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோடெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

கடைசியாக மாணவர்களுக்கான வேண்டுகோள்,  'உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்!'

கடந்த ஆண்டு எழுதிய பதிவையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் அறிய இங்கே செல்லவும்.

5 comments:

  1. அக்கறையுடனான பதிவு அவசியமான நேரத்தில். மிக நன்று அமைதி அப்பா.

    ReplyDelete
  2. மீள்பதிவாயினும் இச் சமயம் அவசியம்
    தேவையான பதிவு
    குழப்பத்தில் இருப்போருக்கு
    தெளிவைத்தரும்நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிக தெளிவான மிக அருமையான பதிவு,மாணவர்கள் எதிர்பார்த்த துறை கிடைக்கவில்லையே
    என நினைக்காமல்,வாய்ப்பு கிடைத்த துறையே முழு திறமை வெளிபடுத்தினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்,அழகா சொல்லிருக்கிங்க சார்

    ReplyDelete
  4. அருமையான கருத்துக்கள், மற்றும் அறிவுரையுடன் நல்ல பதிவு.

    ReplyDelete
  5. போன வருஷ பதிவையும் படிச்சேன். நல்லாச் சொல்லிருக்கீங்க. பெற்றொர்களும் மாணவர்களோடு சேந்து குழம்பிடுறாங்க சமயத்துல.

    ReplyDelete