நான், 1983-86 வருடத்தில் தஞ்சை சரபோஜி கல்லூரியில் பி.எஸ்சி படித்தபோது நடந்த சம்பவம்.
அப்போதெல்லாம், அந்தக் கல்லூரிக்கு சுற்றுபுற சுவர் கிடையாது.
பேராசிரியர்கள் உட்பட, தஞ்சாவூரிலிருந்து வாகனங்களில் வருபவர்கள், கல்லூரியின் முகப்பு வாயிலுக்கு செல்லாமல், குறுக்கு வழியில்தான் வருவார்கள். சைக்கிளில் வரும் எனது வகுப்பு தோழர் ஸ்ரீதர் மட்டும், முகப்பு வாயில் வழியாகத்தான் வருவார். இதனை வேடிக்தையாகத்தான் நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள்.
மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், அவர் மட்டும் அப்படி நடந்துக்கொண்ட விதம், அப்போது என்னிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.
இரண்டாமாண்டு படித்தபோதே போட்டித்தேர்வை எழுதி மத்திய அரசு வேலைக்கு சென்றுவிட்ட ஸ்ரீதர் - ஐ பற்றிய நினைவுகளில், தனிவொருவனாக முகப்பு வாயில் வழியாக வந்ததுதான் நினைவுக்கு வரும். வாழ்க்கையில் நான் ஓரளவுக்காவது நேர்மையை கடைப்பிடிப்பதற்கு ஸ்ரீதர் போன்ற முன்னோடிகள்தான் காரணம்.
அவர் கல்லூரியை விட்டு சென்ற பிறகு இதுநாள் வரை சந்திக்க முடியவில்லை. எஞ்சிய வாழ்நாளில் அவரை கண்டுபிடித்து, சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.
ஃபிளாஷ் பேக் முடித்து நிகழ்காலத்திற்கு வருவோம். நேற்றைய தினம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவர் திரு சுப்புராமன் அவர்கள், ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வெளிப்படையாக பொதுமக்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இதுநாள் வரை இப்படி யவரும் வெளியிட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், தன்னளவில் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் திரு சுப்புராமன் அவர்கள், எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை...!
No comments:
Post a Comment