நானும் எனது மனைவியும் சில நாட்களுக்கு முன்பு, சற்று உரக்க பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, மூன்றே வயதான எங்களுடைய பேத்தி, "ஹை, சண்டை.." என்று மகிழ்ச்சியுடன்
வேகமாக ஓடிவந்தாள்...
மூன்று வயது குழந்தைக்கு சண்டை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நானும், சிறு வயதில் எம்ஜிஆர் படங்களை விரும்பிப்பார்ப்பேன்.
அதில், சண்டைகள் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியடைவேன்.
யாராவது சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டால் ஓடிச்சென்று பார்ப்பேன். நான், அங்கு செல்வதற்குள் சண்டையை முடித்துக் கொண்டார்களென்றால், சினிமாவிற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்புவது போலாகிவிடுவேன்.
சிறுவயதில் அப்படி சண்டைகளை ரசித்திருந்தாலும்
வளர்ந்த பிறகு, மற்றவர்களின் சண்டையை என்னால் ரசிக்க முடியவில்லை. வன்முறை அதிகமான படங்களை பார்ப்பதையும் தவிர்த்துவிட்டேன். '90' களில் பலரும் 'ரெஸ்ட்லிங்' - ஐ விரும்பிப்பார்ப்பார்கள். ஆனால், நான் மட்டுமல்லாது எனது மகனையும் பார்க்க அனுமதித்ததில்லை.
மனிதர்களுக்கு இயற்கையாகவே மற்றவர்களின் சண்டையை ரசிப்பதற்கு விருப்பமுள்ளது.
இதன் காரணமாகவே, ஒருவருக்கொருவர் தேவையற்றவைகளை சொல்லி அதன் மூலம், மற்றவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதோடு, சண்டை முடிந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக, நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.
நேசத்துடன் வளர்க்கும் சேவலை மற்றொரு சேவலோடு மோதவிட்டு ரசிப்பது போல், நம்மை படைத்த இயற்கையே, நம்மிடையே மோதலை உண்டாக்கி வேடிக்கை பார்ப்பதாகவே, எனக்கு தோன்றுகிறது...!
No comments:
Post a Comment