இரண்டு நாட்களுக்கு முன்பு, கிராமத்திலுள்ள உறவினரிடமிருந்து அழைப்பு வந்தது. வெளி மாவட்டத்தில் வேலை செய்துவந்த நபர், அங்கு வேலை இல்லாத காரணத்தினால் கிராமத்திற்கு திரும்பி வந்திருப்பதாகவும், அவரை கொரோனா அச்சம் காரணமாக பக்கத்து வீட்டினர் ஊரைவிட்டு சென்றுவிடு என்று மிரட்டுவதாகவும் தகவல் தெரிவித்து, அதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டார். அதற்கு நான், "ஊராட்சி மன்ற தலைவர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவியுங்கள்" என்று சொன்னேன்.
மேற்கண்டவர்களிடம் பேசியபிறகு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னதாக உறவினர் தெரிவித்தார். இதற்கிடையே, அந்த நபர் மக்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, பல கிலோ மீட்டர் நடந்தே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு அன்றைய தினம் பரிசோதனையை செய்ய இயலாது என்று சொல்லி, மேற்கண்ட நபரின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று தனிமையில் இருங்கள் என்று அறிவுரை சொல்லியும் அனுப்பி இருக்கிறார்கள். அதன்பிறகு, 'அவர் தனிமையில் இருந்து வருகிறார். இவையெல்லாம் இரண்டு வரிகளில் எழுதிவிடலாம். ஆனால், அவரின் மனது என்ன பாடுபட்டிருக்கும். வேறு ஏதேனும் விபரீத முடிவு எடுத்திருந்தால்...?
நினைக்கவே நெஞ்சம் பதருகிறது.
'
இவ்வாறாக, வெளியூரில் சென்று வேலை பார்த்து வரும் நபர்கள், அங்கு வேலை இழப்பு ஏற்படும் பொழுது, சொந்த ஊர் நோக்கிச் செல்வது இயல்பு. அப்படி சொந்த ஊருக்கு வருபவர்களை அன்புடனும் மனிதநேயத்துடன் அண்டை அயலார்கள் நடத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. மேலும், இப்படி வருபவர்கள் எங்கே தங்க வேண்டும், அவர்கள் யாரை சந்திக்க வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
இதற்கு தீர்வாக, கிராமத்தில் உள்ள பள்ளிகளில் இவர்களை தங்கவைத்து, சத்துணவு கூடத்தில் உணவு தயாரித்தளித்து, தேவையானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
தாய்மண் நோக்கி வருபவர்களை தாயாக நின்று கையிலேந்துவதே மனிதமாகும்.
கிராமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் இப்படி அலைக்கழிப்பது...மிகவும் வேதனையான உண்மை.
ReplyDeleteநாளை இது நமக்கும் நடக்கலாம்...
நமக்கென்ன என்று இல்லாமல்...பதிவிட்டு புரிதலை உண்டாக்க முயற்சித்த உங்களுக்கு நன்றி அமைதி அப்பா!!
ஊரைக் காப்பதாக நினைத்து மனித நேயத்தை இழத்தல் கவலைக்குரியது...
ReplyDelete